தீபாவளி: கொண்டாட்டம் ஆண்களுக்கு, பணிச்சுமை பெண்களுக்கா?

பட மூலாதாரம், Getty Images
திருவிழாக்கள் கொண்டாடும் குடும்பங்களில் மகிழ்ச்சி என்னவோ அனைவருக்கும் பொதுவானவைதான். ஆனால், அந்த மகிழ்ச்சிக்குக் காரணமான பணிச்சுமை அனைவருக்கும் பொதுவானதா என்றால், அதற்கு பதில் 'இல்லை' என்பதுதான்.
கொண்டாட்டங்கள் நிச்சயம் மகிழ்ச்சி தருபவையே. அலுவலகப் பணி சுமையில் இருந்து சற்றே ஓய்வு கிடைக்கும் நாட்கள் இவை. ஆனால், இந்த காலங்களில் வீட்டு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதைச் சுமப்பது யார்? ஆண்களும் பெண்களும் அலுவலக பணிகளை சரிசமமாக செய்யும் இன்றைய சூழலிலும் வீட்டில் செய்யும் பணிகளும் பெண்களுக்கு கூடுதலாக உள்ளதா? அல்லது தனக்கான கொண்டாட்டமாக பெண்கள் நினைப்பது என்ன? அவர்களிடமே பேசியது பிபிசி தமிழ்.
தீபாவளி கொண்டாட்டங்களைப் பற்றி செங்கல்பட்டைச் சேர்ந்த குடும்பத்தலைவி சிவசங்கரி தினகரன் இப்படி விவரிக்கிறார்.
"தீபாவளி என்றாலே பலகாரங்கள்தான் ஸ்பெஷல். பெண்கள் காலை எழுந்து, குளித்து தயாராகிவிட்டு, அதிரசம், சுழியம், அப்பம், வடை, முறுக்கு போன்ற பலகாரங்களை சுட்டுவிட்டு, மீண்டும் மாலை குளித்துவிட்டு, நோன்பு எடுக்க கோவிலுக்கு சென்று திரும்புவோம். பின்னர், வீட்டிற்கு வந்து பூஜை செய்துவிட்டு, சாப்பிடுவோம். மறுநாள் காலை விரதப்பூஜை செய்துவிட்டுதான், இந்த விரதத்தை முடிப்போம்."
தற்போது உள்ள காலகட்டத்தில், இத்தகைய பண்டிகைக் காலங்களில் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பெண்கள் கொண்டாடுகின்றனர்.
சென்னையில் மழலைகள் பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார் ரேகா மணி. தம் கொண்டாட்டங்கள் பற்றி அவர் கூறுகையில், "கணவர், குழந்தை மற்றும் நான் என எங்களுடையது தனிக் குடும்பம். நானும் என் கணவரும் வேலைக்கு செல்பவர்கள். அதனால், பண்டிகை காலம் மட்டும் அல்ல, வீட்டு வேலைகளை பொதுவாகவே நாங்கள் பகிர்ந்து கொள்வோம். எங்களுடையது கலப்பு திருமணம். அதனால், தீபாவளியன்று, என் வீட்டில் எளிமையாக கொண்டாடி விட்டு, என் புகுந்த வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவேன். என்னுடைய அம்மா காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, தற்போது எங்களுடைய நேரம், அலுவலக பணிகள் பொருத்தே இத்தகைய விஷயங்களை திட்டமிடுகிறோம்", என்று தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இதன் மூலம் பெண்களின் வீட்டுப் பணிச்சுமை குறைக்கிறதா என்று பார்த்தால், அது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த 2019ஆம் ஜனவரி முதல் டிசம்பர் வரை, தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) நடத்திய ஆய்வில், சராசரியாக, ஓர் இந்திய பெண்மணி ஒரு நாளுக்கு 243 நிமிடங்கள், அதாவது நான்கு மணி நேரம், வீட்டு வேலைகளில் செலவழிக்கிறார்; மறுபுறம், ஓர் இந்திய ஆண் வீட்டு வேலைகளில் ஒரு நாளுக்கு 25 நிமிடங்கள் மட்டுமே செலவழிக்கிறார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டு, ஒ.இ.சி.டி (OECD) என்ற சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், ஒரு நாளுக்கு ஆண்களை விட பெண்கள் வீட்டு வேலைகளை செய்ய கிட்டதட்ட 5.77 மடங்கு அதிகமாக நேரம் செலவழிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.
இது இந்திய அளவில் மட்டுமில்லாமல், உலக அளவிலும் ஆண்களை விட பெண்களே வீட்டு வேலைகளை அதிகம் கவனித்து கொள்கின்றனர் என்றும், இதன் சதவீதங்கள் மட்டுமே மாறுபடலாம் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
பெண்கள் இதை சுமை என்று நினைக்கிறார்களா? சிவசங்கரி கூறுகையில், "என் மாமியாரும், கணவரும் பண்டிகைக் காலங்களில் எனக்கு உதவுவார்கள். எனக்கு பக்தியும் அதிகம். அதனால், உண்மையில் இந்த விரதம் இருந்து வேலை செய்யும்போது, அந்த களைப்பே தெரியாது. நம் குடும்பம், நம் பிள்ளைகளுக்காக விருப்பப்பட்டு செய்யும் போது, அது மகிழ்ச்சியாகவே இருக்கும்", என்கிறார்.
ஆண்களின் கொண்டாட்டங்கள் திருமணத்திற்கு முன்பும், பின்பும் சில மாற்றங்கள் இருந்தாலும். ஆய்வில் தெரிவித்தைப்போல் பெண்களை விட ஆண்கள் குறைவான பணிகளே செய்கிறார்கள்.
"என்னுடைய ஊர் புதுக்கோட்டை. நான் சென்னையில் பணிபுரிவதால், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வேன். தீபாவளி நாளன்று வீட்டில் விதவிதமான பலகாரங்கள் செய்வார்கள். எல்லாமே வீட்டில்தான் என் அம்மா, மனைவி, அப்பத்தா (அப்பாவின் அம்மா) செய்வார்கள். வெளியில் வாங்க மாட்டோம். நான் திருமணத்திற்கு முன், இது போன்ற பண்டிகை நாட்களில், சுற்றுலா சென்று இருக்கிறேன்," என்று கூறுகிறார் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தைச் சேர்ந்த நாகப்பன் மோகன்.

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து, பெண்ணிய கருத்துகளை பல்வேறு தளங்களிலும் பத்திரிகைகளும் எழுதி வரும் பெண்ணிய ஆர்வலர் ஜெ. தீபலட்சுமியிடம் கேட்டோம். "பண்டிகைகள் பெண்களை சமையல் அறையிலேயே முழுக்க முழுக்க நிறுத்தி வைக்கும் வேலைதான் இது. இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் எல்லாம் சாதி, மதம், கடவுள் போன்ற விஷயங்களுடன் பின்னப்பட்டு இருக்கின்றன. கடவுள் நம்பிக்கை, மதம் போன்ற விஷயங்களில் இருந்து பெண்கள் வெளியில் வந்துவிட்டாலே இதுபோன்ற வேலைப் பளுவில் இருந்து பெண்கள் வெளியேறிவிட முடியும். பெரும்பாலான பெண்களுக்கு இந்த வேலைப் பளு குறித்த விழிப்புணர்வே இல்லை என்பதுதான் உண்மை."
"இது போன்ற விஷயங்களை ஆண்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பெண்களுக்கே இத்தகைய விழிப்புணர்வு இல்லாத நிலையில், முதலில் நாம் அவர்களுடன்தான் பேச வேண்டும். பெண்கள் முன் வந்து தங்கள் விருப்பங்களை முன் நிறுத்த வேண்டும். பெண் தோழிகளுடன் சேர்ந்து பயணத்திற்கு செல்வது, படிப்பது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும். திருமணமான பிறகு, அவர்கள் பண்டிகை கொண்டாட்டங்களின் வேலையைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த எண்ணத்தை சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளிடம் விதைத்தால் மட்டுமே, இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும்.", என்று முடிக்கிறார் ஜெ.தீபலட்சுமி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












