துருக்கியில் 'தேசத் துரோகமாக' மாறிய 'வாழைப் பழ காணொளி': நாடு கடத்தப்படும் சிரிய அகதிகள்

வாழைப்பழம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், திமா பாபிலி
    • பதவி, பிபிசி அரபி

சிரிப்பதற்கும் கேலி செய்வதற்கும் வாழைப் பழத்தைப் பயன்படுத்தி வேடிக்கையான காணொளிகளை துருக்கியில் வசிக்கும் சிரிய நாட்டு மக்கள் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

வாழைப்பழத்தை வெவ்வேறு வகையிலும், வெவ்வேறு இடங்களில் வைத்தும் சாப்பிடுவது போன்ற காணொளிகளை டிக்டாக்கில் பதிவிடுகிறார்கள். அத்துடன் தங்களது நண்பர்களையும் அதுபோன்ற காணொளிகளை பதிவேற்றுமாறு கேட்டு சவால் விடுக்கின்றனர்.

பார்க்கும்போது இது ஒன்றும் யாரையும் புண்படுத்துவது போன்று தெரியவில்லை. டிக்டாக் போன்ற செயலிகளில் வெளியிடுவது போன்ற தரத்தில்தான் இவை இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் பெருங்கூட்டமாக இந்தக் காணொளிகளைப் பதிவேற்றாத வரைதான்.

எப்போது இந்தக் காணொளிகள் வைரலாகி ட்ரெண்டில் இடம்பிடித்தனவோ, அப்போதே சர்ச்சையிலும் சிக்கத் தொடங்கிவிட்டன. சாதாரணமாக அல்ல. வாழைப்பழம் சாப்பிடுவதைப் படம்பிடித்து வெளியிட்டவர்களை கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றும் அளவுக்கு இது தேசியப் பிரச்னையாக மாறிவிட்டது

இப்போது வாழைப்பழ காணொளிகளை துருக்கி அரசு விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அத்தகைய காணொளிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

வெறுப்பைத் தூண்டும் வகையில் வாழைப் பழத்தைச் சாப்பிட்டு அதைப் படம்பிடித்துப் பதிவேற்றியதற்காக சிரிய நாட்டினர் மீது காவல்துறையினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். சிரியாவைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட இருக்கின்றனர்.

இனிமையான வாழைப்பழம் இன்று துருக்கியர்களையும் சிரிய மக்களையும் இன ரீதியாகப் பிரிக்கும் பிரிவினையும் அடையாளமாக மாறிவிட்டது.

இதற்கான பின்னணி என்ன, வாழைப்பழ காணொளிச் சவால் எந்த வகையில் வெறுப்பை ஊக்குவித்தது?

"வாழைப்பழம் வாங்க வசதியில்லை"

துருக்கியின் மோசமான பொருளாதார நிலைமை குறித்து சிரிய நாட்டு மக்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையேயான சூடான விவாதத்தில் வாழைப்பழ காணொளி இடம்பிடித்துவிட்டது. துருக்கியின் பொருளாதாரம் மிக அதிகமான பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் சிதைந்துவிட்டது.

ஒரு காணொளியில் சிரியாவில் இருந்து துருக்கிக்கு அகதியாக வந்த பெண் ஒருவர், அகதிகளின் வேலை செய்யும் பாங்கு குறித்து விவரித்துப் பதிவேற்றினார். இதற்கு பதிலளித்து சில துருக்கியர்கள் தங்கள் தரப்பு காணொளிகளைப் பதிவேற்றினார்கள். "சிரியர்களும் ஆப்கானியர்களும் எங்களது வேலைகளைப் பறித்துவிட்டனர்" என்று அந்தக் காணொளிகளில் குற்றம்சாட்டப்பட்டது.

துருக்கி தாராளமாக அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகளில் முதன்மையானது. சிரியாவைச் சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை மட்டும் 36 லட்சம். இங்கு இதுபோன்ற கருத்துகள் வருவது ஒன்றும் அரிதானது அல்ல. அகதிகளுக்கு எதிரான விமர்சனங்கள், பார்வைகள் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றன. சில தேசியவாத அரசியல் கட்சிகள்கூட குடியேற்றத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.

வாழைப்பழ கடை

பட மூலாதாரம், Getty Images

"கடைகளில் சிரிய நாட்டுக்காரர்கள் கிலோ கணக்கில் வாழைப் பழங்களை வாங்குவதை நான் பார்க்கிறேன். ஆனால் என்னால் அவற்றை வாங்க முடியாது," என்று துருக்கியர் ஒருவர் காணொளியில் கூறியதுதான் வாழைப்பழ காணொளிகள் வைரலானதற்கும் சர்ச்சைக்குள்ளானதற்கும் அடிப்படையான காரணம்.

துருக்கியரின் இந்தக் கூற்று சிரிய அகதிகள் சமூகத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. சிரிய அகதிகளில் பலர் டிக்டாக்கை தளமாகப் பயன்படுத்தி அதில் ஏராளமான வாழைப்பழ காணொளிகளைப் பதிவிடத் தொடங்கினர். வாழைப்பழத்தைச் சாப்பிட்டு கேலி செய்வது போல காணொளிகளும், வாழைப்பழங்களைக் கொண்ட ஃபில்டர்களும் பரவின. மீம்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டன.

வாழைப்பழ நகைச்சுவை ஆன்லைனில் ரசிக்கும்படியாக இருந்தாலும், எல்லோருக்கும் அது ரசனையைத் தூண்டவில்லை.

துருக்கிய தேசியக் கொடிக்குப் பதிலாக வாழைப்பழத்தை மாற்றிய ஒரு புகைப்படம் விமர்சனத்துக்குள்ளானது. துருக்கிய மக்களையும் தேசியக் கொடியையும் அவமதிப்பதாக புதிதாக உருவான தேசியவாத வெற்றிக் கட்சி சிரிய டிக்டாக் பயனர்களுக்கு எதிராக புகார் அளித்தது.

"துருக்கியின் மோசமான பொருளாதார நிலையை இந்த சமூக வலைத்தள காணொளிகள் எடுத்துக் காட்டுகின்றன" என்று வேறு சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் இந்தச் சூழலில், வாழைப்பழ காணொளிகள் பரவியது அதிகாரிகளை எரிச்சலடைய வைத்திருக்கிறது.

வெறுப்பைத் தூண்டுவதாகவும், ஆத்திரமூட்டுவதாகவும் குற்றம்சாட்டி வாழைப்பழ காணொளிகளை வெளியிட்ட 11 சிரிய நாட்டு மக்களை துருக்கிய காவல்துறையினர் கைது செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் கடந்த வியாழக்கிழமையன்று கூறின.

"தேவையான ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு" அவர்களை நாடுகடத்தப் போவதாக துருக்கிய குடியேற்ற ஆணையம் கூறியிருக்கிறது.

"அனைத்து சினமூட்டும் பதிவுகளையும் கண்டுபிடிக்கும்" முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு "இந்தப் பரப்புரையில் பங்கேற்ற அனைத்து நபர்களையும்" கவனிக்கப் போவதாக துருக்கியின் குடியேற்ற இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

எதிர்பாராத மற்றொரு நிகழ்வும் இதில் சேர்ந்து கொண்டது. சிரிய அகதிகளை கைது செய்யப்பட்ட நிலையில் இஸ்தான்புல் நகரில் வாழைப்பழ சவால் பற்றி தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மஜீத் ஷமாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"நாங்கள் துருக்கியரை கேலி செய்யவில்லை"

இந்தக் கைது நடவடிக்கைகளை சில துருக்கிய அரசியல்வாதிகள் ஆதரிப்பதாகத் தெரிகிறது. "வாழைப்பழம் சாப்பிடுவோர் நம்மையும் நமது கொடியையும் அவமதிக்கின்றனர்" என்று இலாய் அக்சோய் என்ற அரசியல்வாதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

சிறுபான்மையினரை ஆதரிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சி இந்தக் கைது நடவடிக்கைகள் "இனவெறி" என்று கூறுகிறது.

துருக்கியின் சிரிய புலம்பெயர்ந்தோர் சமூகம் இந்தக் காணொளிகளின் நோக்கத்தை நேர்மையாக்க முயன்றிருக்கிறது. "நாங்கள் துருக்கியரை கேலி செய்யவில்லை. நாங்கள் இனவெறியைத்தான் கேலி செய்கிறோம். பொருளாதாரச் சரிவு நம் அனைவரையும் பாதிக்கிறது" என்று ஒருவர் எழுதினார்.

இஸ்தான்புல்லில் வசிக்கும் சிரிய பத்திரிகையாளர் டீமா ஷுல்லர், பெரும்பாலான வீடியோக்கள் பாதிப்பில்லாதவை என்றும் "வெறும் நகைச்சுவை" என்றும் பிபிசியிடம் கூறினார்.

ஆயினும் அவற்றில் சில "பாதிப்பை ஏற்படுத்துபவையாகவும், புண்படுத்துபவையாகவும்" கருதப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.

துருக்கி நாட்டில் அரசு, தேசியக் கொடி மற்றும் அதிபருக்கு எதிரான அவமதிப்புகளைத் தடைசெய்யும் கடுமையான சட்டங்கள் உள்ளன.

இந்த வாழைப்பழ காணொளிகளை வெளியிட்டோர் மீது இந்த சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரலாம் என்று ஷுல்லர் கூறினார்.

ஒரு தசாப்த காலமாக உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் பல சிரியர்கள் இருப்பதாக அவர் கூறினார்.

"குற்றங்கள் மிகவும் பரந்த அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன" என்று ஷுல்லர் கூறினார். உதாரணத்துக சிரியாவை "ஒரு குறிப்பிட்ட வழியில் விளக்கக்கூடிய பேஸ்புக் இடுகையின் மூலம்" கூட ஒருவர் நாடு கடத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

சிரியாவுக்கு திருப்பியனுப்புவது துருக்கிய அரசின் "மிரட்டல் நடவடிக்கை" என்று அவர் கூறுகிறார்.

வாழைப்பழ காணொளிகள் துருக்கியில் உள்ள அகதிகள் நெருக்கடி மற்றும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளன என்றும் அவர் கூறினார்.

அனைவரும் "டிக்டாக் வீடியோக்களில் கவனம் செலுத்துகின்றனர்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :