இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்எஸ்எஸ் திட்டமா? அரசு தரப்பு சொல்வதென்ன?

மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிக்கூட மாணவர்களிடையே கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை அக்டோபர் 27ஆம் தேதியன்று துவக்கிவைத்தது.

மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களைத் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இதுவரை 32 திருநங்கையர் உட்பட மொத்தம் 86 ஆயிரத்து 550 நபர்கள் இத்திட்டத்தில் பதிவுசெய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இப்படிப் பதிவு செய்தவர்கள், அவர்களது கல்வித் தகுதி, இருப்பிடம், முன்னனுபவம் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மேலாண்மைக் குழுக்கள் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டம் துவங்கப்படுவதற்கு முன்பாகவே திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டனர். "இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவுதான்" என இதனைக் கடுமையாக விமர்சித்தார் கி. வீரமணி.

ஆளும்கட்சியின் வேறு சில தோழமைக் கட்சிகளும் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். "தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'இல்லம் தேடிக்கல்வி' எனும் திட்டமானது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், பொத்தாம் பொதுவாகப் பார்க்கிறபோது அது மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கானத் திட்டம் எனக் கூறப்பட்டாலும், அது கல்வியைக் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்துக்குத் துணை போவதேயாகும். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டத் திட்டமெனக் காரணம் கற்பிக்கப்பட்டாலும், இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரினைத் தன்னார்வலர் எனும் போர்வைக்குள் கல்விக்கூடங்களில் நுழையவே வழிவகை செய்திடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை" என்று அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்டமா இது?

கல்வி கற்கும் மாணவர்கள்.
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்.

இந்த நிலையில் சில நாளிதழ்கள், மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தையே இந்தப் பெயரில் செயல்படுத்துவதாகவும், வேறு சிலர் மத்திய அரசின் வித்யாஞ்சலி திட்டத்தையே இந்தப் பெயரில் தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதாகவும் செய்திகளை வெளியிட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசின் கல்வித் துறை அதிகாரிகளிடம் பேசினால், அவர்கள் இதனை முற்றிலும் மறுக்கின்றனர். "இந்தத் திட்டம் ஒரு தற்காலிகத் திட்டம். இந்தத் திட்டத்திற்காகச் செயல்படுத்தப்படும் 200 கோடி ரூபாயும் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியிலிருந்தே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவிர, இந்தத் திட்டம் ஒரு தற்காலிகத் திட்டம். மே 2022 வரை வெறும் ஆறு மாத காலத்திற்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரத்திற்கு தன்னார்வலர்கள் பாடங்களை நடத்துவார்கள்" என்கிறார்கள்.

தவிர, இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்களாக ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்தவர்கள் உட்புகுந்துவிடுவார்கள் என்ற கோணத்தையும் அவர்கள் மறுக்கிறார்கள். "இந்த வகுப்புகள் எல்லாமே மதச்சார்பற்ற, பாகுபாடற்ற இடங்களில் நடக்கும். கிராமங்களைப் பொறுத்தவரை, அரசுக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து இந்த வகுப்புகள் நடக்கும். தன்னார்வலர்கள் மிகுந்த கவனத்துடன் தேர்வுசெய்யப்படுவார்கள்" என்கிறார்கள் கல்வித் துறை அதிகாரிகள்.

திண்ணைப் பள்ளிகளில் படிப்பதா திராவிட மாடல்?

இருந்தபோதும் இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கிறார் மாநிலக் கல்விக்கான பொது மேடையைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு. "மொத்தமாக பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு முடிவுசெய்துவிட்டார்கள். இந்தத் திட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? பட்ஜெட்டின் போது கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தத் தருணத்தில் கொரோனா மூன்றாவது அலை வருமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆகவே பள்ளிக்கூடம் சமீபகாலத்தில் திறப்பதற்கு வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், மூன்றாவது அலை ஏற்படாத நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு, பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் வரப்போகிறார்கள். பிறகு எதற்காக இந்த வகுப்புகள்?" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

"9 முதல் 12 வரையிலான வகுப்புகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடை நின்றிருக்கிறார்கள். இப்போது 8ஆம் வகுப்புவரை பள்ளி திறக்கும்போது இந்த வகுப்புகளில் எவ்வளவு பேர் இடை நின்றிருப்பார்கள் என்பது தெரியவரும். அப்படி இடை நின்ற குழந்தைகளை அழைத்து வரும் பொறுப்பை தன்னார்வலர்களிடம் ஒப்படையுங்கள். கற்றல் பொறுப்பை முழுமையாக ஆசிரியர்களிடம் ஒப்படையுங்கள்" என்கிறார் அவர்.

பெண்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவதற்கு இன்னமும் பெற்றோர் தயங்கும் நிலையில், இதுபோல வீட்டிற்கு அருகிலேயே வகுப்புகளை நடத்தினால், அதுவே போதுமென பெற்றோர் நினைத்து, பெண்களின் கல்வியை முடக்கிவிடும் அபாயம் இருக்கிறது என்கிறார் அவர்.

"திண்ணைப் பள்ளிகளில் கல்வி கற்பித்தது திராவிட மாடல் என்கிறார் முதல்வர். யார் வீட்டில் திண்ணை இருந்தது? அங்கு யாரெல்லாம் அமர முடிந்தது என்பதையும் பார்க்க வேண்டும். திண்ணைகளில் அமர்ந்திருந்த மாணவர்களை பள்ளிக்கூடங்களுக்குக் கொண்டுவந்தது தான் திராவிட மாடல். புதிய பள்ளிக் கொள்கையைப் பற்றிய அச்சம் இருந்தது. ஆனால், அந்தக் கொள்கையின் மோசமான விளைவுகள் இந்தத் திட்டத்தால் நடக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் பிரின்ஸ்.

முதலமைச்சரின் விரிவான விளக்கம்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இருந்தபோதும் இந்தத்திட்டம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தன்னார்வலர்கள் தேர்வு குறித்து குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர்.

மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிலுள்ள பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு வருவது உறுதி செய்யப்படும். மேலும், வருகிற கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என முதலமைச்சரின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :