தமிழக அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை: கொரோனா பொருளாதார நெருக்கடி காரணமா?

தமிழக அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை: கொரோனா ஊரடங்கு காரணமா?
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் படித்துவந்த ஏராளமான பிள்ளைகள் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக பெற்றோர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்களா?

அரசுப் பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் வருவதற்கு கொரோனா ஊரடங்கு மட்டுமே காரணமா என ஆராய்ந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பது தாமதமாவதால், ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் கற்பித்துவருகின்றன. பெருமளவு பணத்தை கல்விக்கட்டணமாக செலுத்தியுள்ள போதும், குழந்தைகள் வீட்டில் இருந்து இந்த கல்வியாண்டின் பாதியை கழிக்கிறார்கள். அதோடு, ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாததால் அரசு பள்ளியை நாடுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தேவசேனா, தனது இரண்டு குழந்தைகளையும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து நீக்கி, அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.

''நான் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். கடந்த ஐந்து மாதமாக எனக்கு சம்பளம் இல்லை. என் கணவர் நடத்தும் ஸ்டீல் நிறுவனத்திலும் வருமானம் இல்லை. மகன் யூகேஜி முடித்து ஒன்றாம் வகுப்புசேரவேண்டும் . மகள் ஏழாம் வகுப்பு முடித்து எட்டாம் வகுப்பு செல்லவேண்டும். இருவருக்கும் பள்ளிக்கட்டணம் ரூ. 58,000 செலுத்தவேண்டியுள்ளது. அதனால், இருவரையும் சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து விலக்கி அரசு பள்ளியில் சேர்த்துவிட்டேன்,''என்கிறார் தேவசேனா.

Banner image reading 'more about coronavirus'
Banner

இரண்டு குழந்தைகளுக்கும் கல்விக்கட்டணம் செலுத்துவதில் நெருக்கடி ஏற்படும் என்பதால் அரசு பள்ளிக்கு மாற்றியதாக கூறுகிறார். பள்ளி கட்டணத்திற்காக பணத்தை செலவிடுவதைவிட, அவர்களுக்கு நல்ல உணவு மற்றும் அவர்களின் தனித்திறன்களை வளர்க்க சிறப்பு வகுப்பில் சேர்ப்பதற்கு குறைவான பணம் செலவாகும் என்கிறார் தேவசேனா.

''நாங்கள் இருவர் ஈட்டும் வருமானத்தில் பெரிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூட கட்டணம் செலுத்த செலவாகிறது. இந்த ஆண்டு எந்த வருமானமும் இல்லாமல் சிரமப்படுவதால், அரசு பள்ளியில் சேர்ப்பதுதான் சிறந்தது. தொடர்ந்து என் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கட்டும் என முடிவு செய்துவிட்டோம்,''என்கிறார் தேவசேனா.

தேவா சேனா போல பல பெற்றோர்கள் பல்வேறு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடிச்செல்வதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்தபட்சம் ஐந்து சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்.

''ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது நான்கு லட்சம் குழந்தைகள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்வார்கள். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு பல பெற்றோர்கள் பிற வகுப்பிலும் சேர்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இதுவரை சுமார் 5.5 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்,''என்கிறார் பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்.

தமிழக அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை: கொரோனா ஊரடங்கு காரணமா?

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள மாணவர்களில், அதிகபட்சமாக 50 சதவீத குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர் என்றும் மீதி 50 சதவீதம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயில்கின்றனர் என்கிறார் அவர்.

2020-21கல்வி ஆண்டில் புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக கூறுகிறார் கண்ணப்பன். ''ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 11ம் வகுப்பு சேர்க்கையும் தொடங்கிவிட்டது. விரைவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிடவுள்ளோம். இந்த ஆண்டு சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. கொரோனா ஊரடங்கு மட்டுமே காரணமாக என்பதையும் அந்த புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம்,''என்கிறார் கண்ணப்பன்.

மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ள நேரத்தில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும் என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

''கொரோனா ஊரடங்கு காலத்தில், தனியார் மருத்துவமனைகள் செயல்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் அவசர கால சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. அதேபோல, கல்வி நிலையங்களை பொறுத்தவரை, கல்வி ஆண்டு கட்டணத்தை உடனடியாக செலுத்தவேண்டும் என தனியார் பள்ளிகள் பெற்றோர்களை வற்புறுத்திய சம்பவங்களும் நடைபெற்றன. ஒரு சில பள்ளிக்கூடங்கள், வங்கி முகவரி அறிமுகம் செய்து, வங்கி கடன் பெற்று கட்டணம் செலுத்துங்கள் என்றும் வறுபுறுத்தின என்ற செய்தியும் ஊடகங்களில் வெளியானது. இந்த நேரத்தில் பல பெற்றோர் அரசு பள்ளிகளில் மட்டும்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது, தனியார் கல்வி நிலையங்கள் பலவும் பணம் வசூலிக்கும் நிறுவனங்களாக செயல்படுகின்றன என்று புரிந்துகொண்டனர்,'' என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

மாணவர் சேர்க்கையை கணக்கில் கொண்டு அரசு பள்ளிகளில் தேவையான ஆசிரியர் பணியிடங்கள், தூய்மை பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: