கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பியவர் வீடு அடைப்பு - சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்

பட மூலாதாரம், Facebook/ Kavithabarathy
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பியவரின் வீடு அடைப்பு - சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்
குரோம்பேட்டையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரின் வீட்டுக் கதவு அடைக்கப் பட்டதை பல்லாவரம் நகராட்சியின் அத்துமீறல் என குடியிருப்புவாசிகள் புகார் எழுப்பியதை அடுத்தும், வீட்டுக்குள் 6 பேர் தவிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதைத் தொடர்ந்தும், அந்த வீட்டில் இருந்து தகரங்கள் அகற்றப்பட்டன என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரில் பாதல் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதில் இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஹேம்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 14 நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முன் தினம் வீடு திரும்பினார். அன்று மாலையே பல்லாவரம் நகராட்சி ஆணையர் மதிவாணன் உத்தரவின் படி, ஹேம்குமாரின் வீட்டு வாசலில் தகரங்களைப் பொருத்தி முழுமையாக அடைத்துள்ளனர். பல்லாவரம் நகராட்சியின் இத்தகைய அத்துமீறலால் அந்த வீட்டுக்குள் வெளி தொடர்பின்றி 6 பேர் தவிப்பதாக புகார் எழுந் தது.
"ஆரம்பத்தில் எங்கள் வீட்டுக்கோ, அடுக்குமாடி குடியிருப்புக்கோ தகரத் தடுப்பு வைக்காத நகராட்சி அதிகாரிகள், என் கணவர் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வுடன் வீட்டு வாசலை முழுமையாக மூடிவிட்டனர். கதவை முழுமையாக மூடியதால் அவசர தேவைக்கு எங்களால் வெளியே செல்ல முடியவில்லை," என்கிறார் ஹேம்குமாரின் மனைவி.
மேலும் அவர், "எங்கள் வீடு முதல் தளத்தில் உள்ளதால் ஜன்னல் வழியாகக் கூட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. நாங்கள் சொல்வது எதையும் காதில் வாங்காமல் சென்ற நகராட்சி அதிகாரிகள், அதன் பின்னர் திடீரென அவர்களே வந்து தகரத்தை முழுமையாக அகற்றிவிட்டனர்," என்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இதுபோன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பல்லாவரம் நகராட்சி ஆணையரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த வீட்டில் இருந்த தகரங்கள் உடனடியாக அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி கள் கூறும்போது, ''பாதிக்கப்பட்டோரையும், பாதிக்கப்படாதோரையும் பாதுகாக்கவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் செயல்படுத்தப் படுகின்றன. நீங்கள் குறிப்பிட்ட அந்த வீட்டு வாசலை நாங்கள் முழுமையாக அடைக்கவில்லை. தகரங்களால் முழுமையாக அடைக் கப்பட்டதாக சமூக வலைதளங் களில் திரித்து வெளியிடப்பட்டன'' என்றனர்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
தினத்தந்தி: தமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ஆம் தேதி அன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா என்பது இதன் பிறகு தெரியும் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
29ஆம் தேதி பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த இரண்டு கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் அது பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். அப்போது செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்குமா? என்னென்ன தளர்வுகள் அமலுக்கு வரும்? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை கொண்டு வந்தது. தற்போது தமிழகத்தில் தொடர்ந்து பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்கிறது அச்செய்தி.
தினமணி: நீட் தேர்வு தள்ளிவைக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images
ஜேஇஇ (மெயின்), நீட் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜூலை மாதம் நடைபெறவிருந்த நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெறும் என்றும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எனினும், நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல மாநிலங்களிலிருந்து குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்ததன்படி ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என்கிறது அச்செய்தி.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












