ஆமிர் கான்: ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் தேசப்பற்று குறித்து கேள்வி

ஆமிர் கான்

பட மூலாதாரம், Getty Images

இந்தி நடிகர் ஆமிர் கானின் தேசப்பற்று தொடர்பாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் அதிகாரப்பூர்வ வார பத்திரிகையில் இடம்பெற்ற கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் திரைத்துறையில் இந்த கட்டுரை பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சஜன்யா என்ற ஆர்எஸ்எஸ் வார பத்திரிகையில் சில பாலிவுட் திரைப்பிரபலங்கள் சேதப்பற்று மிக்கவர்கள். ஆனால், ஆமிர் கான் போன்ற சிலரின் சமீபத்திய நடவடிக்கைகளால் அவரது தேசப்பற்று தொடர்பான சந்தேகம் எழுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஒருபுறம் இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஜான் ஆபிரஹாம், கங்கனா ரனாவத் போன்றோர், தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்து, தாய்நாட்டுடன் ஆன தங்களின் பிணைப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மறுபுறம் ஆமிர் கான் போன்ற நடிகர்கள், இந்தியாவின் எதிரி நாடுகளுடன் நட்புறவை எந்தச் சலனமுமின்றி வளர்த்து வருகிறார்கள். அது பாகிஸ்தானுடன் நட்புறவை வளர்க்கும் சீனாவானாலும் சரி, ஜிஹாதிகள் திட்டமிடக்கூடும் துருக்கியானாலும் சரி, அந்த துருக்கியில்தான் இப்போது ஆமிர் கானும் முகாமிட்டிருக்கிறார் என்று ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அந்த பத்திரிகையின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர், தி ஹிந்து நாளிதழிடம் பேசுகையில், துருக்கி அதிபர் எர்துவான் மனைவியுடன் ஆமிர்கான் நடத்திய கூட்டத்தின் காட்சிகள், இந்தியாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை துருக்கி எதிர்க்கிறது என்று கூறியுள்ளார்.

ஆமிர் கான்

பட மூலாதாரம், Panchjanya

மேலும் அவர், ஆமிர் கானின் தற்போதைய செயல்பாடுகள் தேசியவாதத்தை பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் மற்ற நடிகர்களை விட சீனாவில் ஆமிர் கான் அதிக பிரபலமாகியிருப்பது எப்படி என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றும் ஹிதேஷ் கேள்வி எழுப்புகிறார்.

இந்த விவகாரத்தில் ஆமிர் கானின் வெளிநாட்டு உறவை விமர்சிக்கும் வகையில், ஆர்எஸ்எஸ் தனது பஞ்சஜன்யா கட்டுரைக்கு, "டிராகனின் நேசமிகு கான்" என்று தலைப்பிட்டுள்ளது. டிராகன் சீனாவின் ஆளுமை அதிகாரத்தை வெளிப்படுத்தும் சின்னமாக கருதப்படுகிறது.

அந்த கட்டுரையில், ஆமிர் கானின் சீன உறவு ஏற்கெனவே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. துருக்கியுடன் ஆன அவரது உறவு எதை உணர்த்துகிறது? இதில் மறைத்துப் பேச என்ன இருக்கிறது" என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஆமிர் கான், எனது மனைவி கிரண் ராவ் இந்தியாவில் அச்சத்துடன் இருக்கிறார். சகிப்புதன்மையற்ற நிலை இந்தியாவில் அதிகரித்துள்ளது என்றார்.

ஆமிர் கான்

பட மூலாதாரம், Getty Images

அந்த சம்பவத்தை ஆர்எஸ்எஸ் தமது கட்டுரையில் மேற்கோள்காட்டியிருக்கிறது.

மேலும், இந்தியாவில் உயரிய நிலைக்கு ஒரு நடிகரை மக்கள் உயர்த்தி அமரச் செய்கிறார்கள். அவர்கள் நடிக்கும் படங்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. அவரது நடிப்புக்குத்தான் மக்கள் ரசிகர்கள் ஆகிறார்களே தவிர அவரது மதத்தின் மீது யாரும் பற்று கொள்வதில்லை என்றும் ஆர்எஸ்எஸ் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதே நடிகர், தன்னை வளர்த்து உருவாக்கிய தாய்நாட்டுக்கு உரிய நேசத்தை பிரதிபலிக்காமல் தான் சார்ந்த மதத்தின் சார்பாக எதிரி நாட்டில் கொடுக்கப்படும் பணத்துக்காக அவர்களின் விருந்தோம்பலை வெட்கமின்றி ஏற்கும்போது சக இந்தியர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணரவில்லையா என்று ஆர்எஸ்எஸ் கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் ஆமிர் கானின் துருக்கி பயணம் தொடர்பான தகவல்கள் பரவலாக இடம்பெற்றிருந்தாலும், அவர் இதுவரை ஆர்எஸ்எஸ் பத்திரிகை கட்டுரைக்கு எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: