முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்

பட மூலாதாரம், BJP
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்சார்பு விவசாயியுமான கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
டெல்லியில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ், பா.ஜ.கவின் தமிழ் மாநிலத் தலைவர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் கே. அண்ணாமலை அக்கட்சியில் இணைந்தார்.
கட்சியில் சேர்ந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று கூறினார்.
"தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த என்னால் இயன்ற முயற்சியை செய்வேன். உண்மையான வீரான எல். முருகன் தலைமையில் மாநிலத்தில் தேசிய உணர்வையூட்டும் வகையில் எனது பணிகளையும் முழு நேரத்தையும் செலவிடுவேன்" என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
"நான் நரேந்திர மோதியின் மிகப்பெரிய ரசிகர். தேசிய பாதுகாப்பிலோ, ஊழலிலோ சமரசத்துக்கு இடமின்றி வலுவுடன் நாட்டை வழிநடத்தியவர் பிரதமர் மோதி. ஏற்கெனவே, பல நிலைகளில் பல தலைவர்கள் பாஜகவை வழிநடத்தி இந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறார்கள். என்னால் இயன்ற அனைத்து பங்களிப்பையும் கட்சி வளர்ச்சிக்காக வழங்குவேன்" என்று கூறினார் அண்ணாமலை.
பேட்டியின்போது, திருக்குறள் அதிகாரம் இறைமாட்சியில் இருந்து,
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு
என்ற குறளை மேற்கோள்காட்டி பிரதமர் நரேந்திர மோடியே இக்குறளுக்கு உதாரணம் என்று பேசினார் அண்ணாமலை.

பட மூலாதாரம், BJP
ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை 2019ஆம் ஆண்டு மே மாதம் தனது பணியை ராஜினாமா செய்தார். அந்தத் தருணத்திலேயே அவர் பா.ஜ.கவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இணையவில்லை.
28 மே 2019ஆம் தேதியன்று பிபிசியிடம் பேசிய அண்ணாமலை, "அரசியலையும், அரசியல்வாதிகளையும் நான் எதிர்மறையாகப் பார்ப்பதில்லை. மக்களுக்கான பொதுப் பணியைச் செய்வதற்கான உயரிய வழிமுறை அரசியல் என்று கிரேக்கத் தத்துவவியலாளர் ஒருவர் கூறியுள்ளார். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அரசியல்வாதிகள் அதிக பொறுப்புடையவர்கள். அரசியலை எதற்காக எதிர்மறையாகப் பேசுகிறோம் என்றால், அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர், வெற்றிகரமாக இருக்கமாட்டார் என்று எண்ணுவதால்தான். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, எல்லா வழிகளையும் ஆய்வு செய்து மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிவெடுப்பேன்." என்று கூறியிருந்தார். இதற்குப் பிறகு அவர் கரூர் அருகே தற்சார்பு விவசாயத்தில் ஈடுபட்டுவந்தார்.
இதற்குப் பிறகு அவர் இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பிருந்து தமிழ் ஊடகங்களில் அண்ணாமலையின் பேட்டிகள் பரவலாக வெளிவந்தன.
அந்தத் தருணத்தில் சமூக வலைதளங்களில் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. "நான் வலதுசாரியோ, இடதுசாரியோ கிடையாது. எது சரியோ அந்த பாதையில் செல்ல விரும்புகிறேன். உண்மையில் இப்போது உடனடியாக தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை. அதற்காகத் தேர்தல் அரசியலை நாங்கள் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. இப்போது நான் வேர்களில் வேலை செய்கிறேன். அடிமட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன்," என்று அந்த சமயத்தில் பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.
மேலும், "விவசாயம் செய்கிறேன். அதற்காக நான் முழு நேர விவசாயி அல்ல. இதன் ஊடாக ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்கிறேன்" என்றும் கூறினார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. அண்ணாமலை 2011ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ். பணியில் இணைந்தார். 2013ல் உடுப்பியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2015ல் அவர் உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளராக உயர்த்தப்பட்டார். 2016ல் சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக்கப்பட்டார். 2018ல் அவர் பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
உடுப்பியில் பணியாற்றியபோது சட்டவிரோத சக்திகள் மீது அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காக கவனிக்கப்பட்டார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












