பெண்கள் உச்சநிலை அடைதல்: 20வது நூற்றாண்டில் பாலியல் ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்த இளவரசி மேரி பொனாபார்ட்டே யார்?

பட மூலாதாரம், Getty Images
``சுதந்திர எண்ணம்'' கொண்ட மற்றும் ``புரட்சிகரமான'' பெண் மேரி பொனாபார்ட்டே. அவர் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். பணவளமும், செல்வாக்கும் மிகுந்தவர். ஆனால் பெண்களின் பாலியல் விஷயம் குறித்த ஆய்வில் முன்னோடியாக எப்படி மாறினார்?
சிலருக்கு அவர் பெண்களின் பாலியல் விஷயங்களில் முன்னோடியாக இருக்கிறார்; மற்றவர்களுக்கு, செல்வாக்கு மிகுந்தவர்களின் தொடர்பு இருக்கும் பணக்காரப் பெண்மணியாக இருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் சக்கரவர்த்தியாக இருந்த முதலாம் நெப்போலியனின் வம்சத்தில் வந்தவரான மேரி பொனாபார்ட்டே (1882-1962), எடின்பர்க் இளவரசர் பிலிப்பின் அத்தையும் ஆவார். வரலாற்றில் கவனிக்கப்படாதவராக அவர் போய்விடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இளவரசியாக இருந்த அவருக்கு, உடலுறவில் பெண்களின் உச்ச நிலை மற்றும் உளவியல் ஆய்வுகள் என்பவை அவருக்குப் பிடித்தமான முதன்மை விஷயங்களாக இருந்தன. அதற்கான கல்வியை மேற்கொண்டார். பல நேரங்களில் சிக்மண்ட் பிராய்ட் கொள்கைகள் நிஜம் என உறுதிப் படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக பொனாபார்ட்டே ``சுதந்திர உணர்வு கொண்ட பெண்மணியாக'' இருந்தார்.
அறிவியல் களமாக இருந்தாலும், ராஜாங்க அந்தஸ்து கொண்ட களமாக இருந்தாலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தக் கூடிய, ஈர்ப்பு மிக்கவராக இருந்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிடுகின்றனர். உடலுறவில் பெண்களின் இன்பம் பற்றிய கேள்விகளுக்கான பதில்களை தேடுபவராகவே எப்போதும் இருந்துள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இளவரசி மேரி பொனாபார்ட்டே பாரிஸ் நகரில், புகழ்பெற்ற, வசதியான குடும்பத்தில் பிறந்தார்.
மேரி-பெலிக்ஸ் மற்றும் பிரான்ஸ் இளவரசர் ரோலன்ட் நெப்போலியன் பொனாபார்ட்டேவுக்கும் மகளாகப் பிறந்தார். அவருடைய தாத்தா தொழிலதிபராக இருந்தார். கேசினோ மொன்ட்டே கார்லோ, பிராங்ஸ்வாஸ் பிளாங்கை உருவாக்கியவர் அவர். அதற்காகவே அவர் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.
ஆனால் தொடக்கத்தில் இருந்தே அவருடைய வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாக இருந்தது. பிரசவத்தின் போதே அவர் இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தவர். ஒரு மாதம் கழித்து அவருடைய தாயார் காலமாகிவிட்டார்.
அவருடைய குழந்தைப் பருவம் துன்பங்கள் மிகுந்ததாக, தனிமையான வாழ்வு கொண்டதாக அமைந்தது.
உடன் பழகுவதற்கு வேறு குழந்தைகள் இல்லாத நிலையில், மானுடவியலாளர் மற்றும் புவியியலாளரான தனது தந்தையுடன் அதிக நேரம் செலவிட்டார். தந்தை வழி பாட்டி என்றாலே அவருக்குப் பிடிக்காது.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பத்தில் இருந்தே அறிவியல், இலக்கியம், எழுத்து துறைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சொந்த உடல் பற்றி அறிவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரைக் கவனித்து வந்த பெண்களில் ஒருவர், மேரி சுய இன்பம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.
``அது பாவகரமானது! அது தீமையான செயல்! நீ அதைச் செய்தால் இறந்துவிடுவாய்!'' என்று மேரியிடம் அந்தப் பெண் கூறியிருக்கிறார். இதை 1952ல் தனது டைரியில் மேரி பதிவு செய்து வைத்துள்ளார்.
``ஆனந்தம் பெறுவதற்கு இவ்வாறு செய்தால் மரணம் நேரும் என்று, தாதிப் பெண் மிரட்டியதால் எட்டு அல்லது ஒன்பது வயதில் பெண்ணுறுப்பு கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம் சுய இன்பம் பெறும் பழக்கத்தை கைவிட்டு விட்டதாக பொனாபார்ட்டே கூறியுள்ளார்'' என்று The Theory of Female Sexuality of Marie Bonaparte: Fantasy and Biology என்ற தனது கட்டுரையில் நெல்லி தாம்ஸன் தெரிவித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே அவர் எதிர்கருத்து கொண்டவராக இருந்தார். பெண்கள் அடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பதின்ம வயதுகளில் அவர் மொழிகளைக் கற்றார். பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகள் கற்றார். ஆனால் மேற்கொண்டு எந்தத் தேர்வும் எழுத முடியாமல், அவருடைய பாட்டியும் தந்தையும் தடுத்துவிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
``குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் தேர்வுகள் எழுத முடியாமல் பகைவர்கள் தடுக்கலாம் என்று அவரும் ரோலன்ட்டும் கருதினர்'' என்று மேரியின் டைரியை மேற்கோள் காட்டி தாம்ஸன் கூறியுள்ளார்.
``என் பெயர், என் அந்தஸ்து, என் அதிர்ஷ்டங்கள் தாழ்வானவை. என் பாலினமும் அப்படியே! நான் பையனாக இருந்திருந்தால், என் முயற்சிகளை அவர்கள் தடுத்திருக்க மாட்டார்கள்'' என்று மேரி கருதியதாக தாம்ஸன் குறிப்பிட்டுள்ளார்.
20 வயதை எட்டுவதற்கு முன்னதாகவே, பாலியல் விழிப்பு காரணமாக, தன் தந்தையின் உதவியாளர் பெண் ஒருவரின் கணவருடன் மேரி பொனாபார்ட்டே உறவு வைத்துக் கொண்டார்.
அது முறையற்ற தொடர்பு, பிளாக்மெயில் மற்றும் அவமானப்படுத்தும் செயல் என முடிந்து போனது.
மேரியின் தந்தை, தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று விரும்பிய கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் ஜார்ஜ் (1869-1857) என்பவரை மேரிக்கு அறிமுகம் செய்து வைக்க தீர்மானித்தார். அவர் மேரியை விட 13 வயது மூத்தவர்.
அதை மேரி ஒப்புக் கொண்டதை அடுத்து 1907 டிசம்பர் 12 ஆம் தேதி ஏதென்ஸ் நகரில் திருமணம் நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images
அவர்களுக்கு இளவரசி யூஜெனி, இளவரசர் பீட்டர் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஆனால் அது மகிழ்ச்சிகரமான வாழ்வாக அமையவில்லை.
அந்தத் திருமணம் 50 ஆண்டுகள் நீடித்திருந்தது என்றாலும், தன் கணவரின் உண்மையான உணர்வு ரீதியிலான பிணைப்பு தன் அங்கிளான டென்மார்க் இளவரசர் வால்டெமார் உடன் தான் இருந்தது என்பதை மேரி அறிந்து கொண்டார்.
இதற்கிடையில், தனக்கான காதலர்களை தேர்வு செய்ய மேரி முடிவு செய்தார். கல்வியில் வாழ்வு தடைபட்டதற்கு ஆறுதல் தேடுவதாக இதைக் கருதினார்.
பெண்களின் பாலியல் உறவு பற்றி ஆராய்ச்சி
மேரியின் அறிவுப்பசி, பாலியல் உறவு மற்றும் பெண்களின் ஆனந்த நிலையின் இயல்பைப் புரிந்து கொள்ளும் ஆர்வம் ஆகியவை அவருக்கு உந்துதல் தந்து கொண்டே இருந்தன.
1924 ஆம் ஆண்டில், ``பெண்களின் உடலில் இறுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உடற்கூறு ரீதியிலான காரணங்கள் பற்றிய குறிப்புகள்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். ஏ.இ. நர்ஜானி என்ற புனைப்பெயரில் அந்தக் கட்டுரை வெளியானது.
``உடலுறவின் போது, ஒருபோதும் அவர் உச்சநிலையை அடைந்தது இல்லை என்பதால் அவர் வெறுப்பு கொண்டிருந்தார், அதாவது ஆணும் பெண்ணும் இணையும் உறவில் உச்சம் பெறவில்லை என்று ஜார்ஜியாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் நியூரோ அகச்சுரப்பியல் செயல்பாட்டு பேராசிரியர் கிம் வால்லென் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
``கிளிட்டோரியஸை தூண்டுவதன் மூலம் மட்டும் தான் பெண்கள் உச்சநிலையை அடைய முடியும் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று பேராசிரியர் வால்லென் பிபிசியிடம் தெரிவித்தார்.
பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை நுழைத்து ஏற்படும் உடலுறவில் பெண்ணுக்கு உச்சநிலை ஏற்படாது என்பது உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று மேரி கருதினார்.
எனவே, `பெண்ணின் பிறப்புறுக்குக்கும் கிளிட்டோரிஸுக்கும் இடையிலான இடைவெளி குறைவாக இருந்தால், ஆணுறுப்பை நுழைத்து உடலுறவு கொள்ளும் போது அந்தப் பெண் உச்சத்தை அடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது' என்ற கருத்தாக்கத்தை அவர் உருவாக்கினார்.
தனது கருத்தாக்கத்தை மெய்ப்பிக்கும் வகையில், 1920 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் 240 பெண்களுக்கு இந்த இடைவெளி அளவை அவர் கணக்கெடுத்தார்.
``குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்தத் தகவல் சேகரிக்கப்படவில்லை. ஆனால், தங்கள் டாக்டரைப் பார்க்கப் போகும் பெண்களிடம் இந்தத் தகவல் சேகரிக்கப்பட்டது'' என்று பேராசிரியர் வால்லென் கூறியுள்ளார். டாக்டர் எலிசபெத் லாய்ட் உடன் பொனாபர்ட்டே நடத்திய இந்த ஆய்வைப் படித்த பிறகு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
``சாம்பிள்களை அவர் மூன்று தொகுப்புகளாகப் பிரித்துக் கொண்டுள்ளார். பெண்ணுறுப்பின் திறப்பு விளிம்பில் இருந்து கிளிட்டோரிஸ் வரையிலான இடைவெளியைப் பொருத்து இப்படி பிரித்துள்ளார். இந்தத் தொகுப்புகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது பற்றி எந்த விவரிப்பும் இல்லை'' என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
``பொனாபார்ட்டே ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் அனுமானத்தைக் கொண்டிருந்தார். பெண்கள் உடலமைப்பு வேறு மாதிரியானது. அதனால் தான் உடலுறவின் போது அவர்கள் வேறு மாதிரியான அனுபவங்களை உணர்கிறார்கள் என்று அவர் கூறினார்'' என்று பிபிசியிடம் லாய்ட் தெரிவித்தார்.
ஆனால், ``மன முதிர்ச்சி பெற்றிருக்கிறாரா அல்லது தன் வாழ்வில் மன நிறைவு பெற்றிருக்கிறாரா என்பது போன்ற, அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிரான வார்த்தைகளாக இருந்த இந்த விஷயங்களை புறந்தள்ளிவிட்டு, பெண்களின் உடற்கூறு அமைப்பின் மீது கவனத்தை செலுத்தியுள்ளார்'' என்று அந்த நிபுணர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அதனால், அறுவை சிகிச்சை மூலம் பெண்ணுறுப்பின் திறப்பு விளிம்புக்கு அருகில் கிளிட்டோரிஸை கொண்டு சென்றால், உடலுறவின் போது பெண்களால் உச்சநிலையை அனுபவிக்க முடியும் என்று மேரி பொனாபார்ட்டே நம்பினார்.
துரதிருஷ்டவசமாக, இதைவிட தவறானதாக அவரால் சொல்ல முடியவில்லை.
``அதுபோன்ற அறுவை சிகிச்சை ஆபத்தானது. சில பெண்களுக்கு எல்லா உணர்வுகளுமே மரத்துப் போய்விட்டது. ஆனால், தனது எண்ணத்தில் பொனாபார்ட்டே உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவரேகூட அந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டார், ஆனால் பயன் கிடைக்கவில்லை'' என்று பேராசிரியர் வால்லென் விவரித்துள்ளார். மனம் தளராத மேரி, ஒரு முறையுடன் நின்றுவிடாமல், மூன்று முறை அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
``கிளிட்டோரிஸ் சுற்றி நிறைய நரம்புகளை நீங்கள் துண்டிக்கும்போது, உங்களுக்கு உணர்வறியும் தன்மைகள் இருக்காது. ஆனால் மிக முக்கியமான நரம்புகளைத் துண்டிப்பதால் எதிர்மறையான விஷயங்கள் நடக்கும்'' என்று இன்டியானா பல்கலைக்கழகத்தில்உயிரியல் துறையில் வரலாறு மற்றும் தத்துவ அறிவியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் லாய்ட் தெரிவித்துள்ளார். ``உடலுறவின் போது பெண்கள் உச்சநிலையை உணர்வதற்கு, அறுவை சிகிச்சை மட்டும் தான் ஒரே வழி என்று மேரி நம்பினார்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராய்ட் உடன் பலமான நட்பு
இருந்தபோதிலும், மேரி பொனாபார்ட்டே இதை கைவிட்டுவிடவில்லை. பாலியல் உறவில் வெறுத்துப் போதல் மற்றும் வாழ்வில் சிரமங்கள் குறித்த கேள்விகளுக்கான பதில்களை அவர் தொடர்ந்து தேடினார்.
1925ல் அவர் வியன்னாவுக்குச் சென்றார். பாரிஸ் மருத்துவ வட்டாரங்களில் பிரபலமாகப் பேசப்பட்ட வளர்ந்து வரும் உளவியல் ஆய்வாளராக இருந்த சிக்மண்ட் பிராய்டை சந்திக்க அங்கு சென்றார்.
``தாம் தீவிரமாக தேடியவற்றை பிராய்ட் மூலம் அவர் கண்டறிந்தார். நேசித்தல் மற்றும் சேவை செய்தலில் புதிய `தந்தையை' அவர் கண்டார்'' என்று ஒரு கட்டுரையில் தாம்ஸன் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவருடைய நோயாளியாக மேரி பொனாபார்ட்டே மாறினார். ஆனால் சீக்கிரத்திலேயே அவர்கள் நண்பர்களாகிவிட்டார்கள். உளவியல் ஆய்வில் மேரியின் ஆர்வம் அதிகமாக இருந்ததால், அவருடைய மாணவியாக மாறினார்.
``உளவியல் பகுப்பாய்வை பிரான்ஸில் படித்த முதலாவது பெண்மணிகளில் ஒருவராக அவர் இருந்தார், அதுவும் பிராய்டு மூலம் படித்தவராக இருந்தார்'' என்று சுவிட்சர்லாந்தில் உள்ள லாவுசான்னே பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக இருக்கும் ரெமி அமௌராவ்க்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
``மேரி `ஆபத்தான பெண்ணாகவோ' அல்லது கல்வியாளராகவோ இல்லை என்ற காரணத்தால் அவருடன் இருப்பதில் பிராய்ட் மகிழ்ச்சி அடைந்தார். அவர்கள் சந்தித்த போது பிராய்ட் 70 வயதானவராக இருந்தார். மேரி ஆர்வம் ஏற்படுத்தும் எண்ணம் கொண்ட, புத்திசாலித்தனம் கொண்ட, பணக்கார பெண்மணியாக அவருடன் வாதங்கள் செய்தார்'' என்கிறார் பேராசிரியர் அமௌராவ்க்ஸ்.
பாரிஸ் நகரில் உளவியல் பகுப்பாய்வில் முன்னணி நபராக மேரி பொனாபார்ட்டே பேசப்பட்டார். ஒரு இளவரசியாக தன்னுடைய டைரியில் பல நோயாளிகள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரியாவை நாஜி ஜெர்மனி படைகள் கைப்பற்றிய போது, பிராய்டை மேரி காப்பாற்றினார். தனது பணம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி பிராய்ட் மற்றும் குடும்பத்தினர் வியன்னாவில் இருந்து தப்பி லண்டன் செல்ல ஏற்பாடு செய்தார். அதன்பிறகு பிராய்ட் அங்கு வாழ்ந்தார்.
``எனது 82வது வயதில், ஜெர்மானிய ஆக்கிரமிப்பின் விளைவாக வியன்னாவில் இருந்து நான் வெளியேறி இங்கிலாந்துக்கு வந்தேன். சுதந்திரமாக என் வாழ்வை கழிக்கலாம் என்று நான் நம்பினேன்'' என்று 1938ல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் பிராய்ட் கூறியுள்ளார்.
சுதந்திரமான பெண்மணி

பட மூலாதாரம், Getty Images
தொழில்முறை முதிர்ச்சி பெற்ற நிலையில், பெண்களின் பாலின உறவு குறித்த தனது கருத்தாக்கத்தில் இருந்து அவர் முரண்பட்டார்.
``தனது முதன்மையான சிந்தனைகளை மேரி பொனாபார்ட்டே முற்றிலுமாக நிராகரித்தார்'' என்று பேராசிரியல் வால்லென் தெரிவித்தார்.
``அவர் 1950 ஆம் ஆண்டில் ``பெண்களின் பாலுணர்வு'' என்ற புதிய புத்தகத்தை அவர் வெளியிட்டார். தனது முந்தைய ஆய்வு பறறிய அனைத்து கருத்துகளையும் அதில் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்'' என்று அந்த நிபுணர் தெரிவித்துள்ளார்.
``இதற்கும் உடற்கூறு அமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, எல்லாமே உளவியல் சார்ந்தவை தான் என்று அதில் மேரி கூறியிருந்தார். சுமார் 25 ஆண்டு காலம் உளவியல் பகுப்பாய்வு செய்த நிலையில் அந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருந்தார்'' என்று பேராசிரியர் வால்லென் தெரிவித்துள்ளார்.
இந்த மனநிலை மாற்றத்திற்குப் பிறகும், ``அவருடைய முதன்மையான ஆய்வு அற்புதமானது என்று இன்னும் நான் கருதுகிறேன்'' என்றும் அவர் குறிப்பிடுகிறார். பொனாபார்ட்டே புரட்சிகரமான பெண் என்று அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
பொனாபார்ட்டே, ``கவர்ச்சியானவர். அவருடைய துயரமான குணாதிசயம் இருந்தாலும், என் கதாநாயகிகளில் அவரும் ஒருவர்'' என்று பேராசிரியர் டாக்டர் லாய்ட் கூறியுள்ளார்.
பெண்கள் பாலுறவு பற்றி வரும்போது, ``தனது உடல் பற்றி அவர் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் , அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் இருந்த அறிவு மற்றும் புரிதல்களில் அவர் முன்னோடியாக இருந்தார்'' என லாய்ட் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸில் மேரி பொனாபார்ட்டே குறித்த தகவல்களை பல ஆண்டுகளாக வரிசைப்படுத்திய பேராசிரியர் அமௌராவ்க்ஸ், ``மேரி அற்புதமான பெண்மணி,'' இலக்கியம், அரசியல் மற்றும் அந்த காலக்கட்டத்தில் ராஜ குடும்ப வட்டார தொடர்புகளின் கலவையாக இருந்தார் என்று கூறியுள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரபலமாக இருந்த அனைவரையும் அவர் அறிந்திருந்தார். ``பெண்ணிய இயக்கத்தினருக்கும் அவர் உற்சாகம் தரும் நபராக இருந்தார்'' என்று அவர் கூறியுள்ளார்.
``பாலுறவு குறித்த தனது பார்வை ஆணாதிக்க நோக்கில் இருந்தது, பெண்கள் உச்சநிலையை அனுபவிக்க ஒரே வழிதான் உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்'' என்று அமௌராவ்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
``ஆனால் அதே சமயத்தில் தன்னுடைய சிந்தனையில் அவர் சுதந்திரமாக இருந்தார். பிராய்ட் உடன் எதிர்வாதம் செய்யும் தைரியம் உளள பெண்மணியாக அவர் இருந்தார்'' என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












