2ஜி தொடர்பில் நான் அளித்த பேட்டி உண்மைக்கு புறம்பானது, மன்னிப்பு கோருகிறேன்: முன்னாள் சிஏஜி வினோத் ராய்

பட மூலாதாரம், Getty Images
2ஜி அலைக்கற்றை விற்பனை விஷயத்தில் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பற்றி தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார் சர்ச்சைக்குரிய முன்னாள் இந்திய தலைமைக் கணக்காயர் (சி.ஏ.ஜி.) வினோத் ராய்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 102 2ஜி அலைக்கற்றை உரிமங்களை மிக் குறைவான உரிமக் கட்டணத்துக்கு விற்றதால் அரசாங்கத்துக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஒரு தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டதன் மூலம் இந்திய அரசியலில் மிகப் பெரிய சூறாவளி ஏற்படக் காரணமாக இருந்தவர் வினோத் ராய்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2014ம் ஆண்டு தேர்தலில் படு தோல்வி அடைந்து ஆட்சியை இழக்க காரணமாக அமைந்த குற்றச்சாட்டுகளில் இது முக்கியமானது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, பின்னாளில் குற்றமற்றவர் என்று விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந்த 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தமது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் நெருக்கடி கொடுத்ததாக தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும் தவறுதலாக அப்படிக் கூறிவிட்டதாகவும் எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் வினோத் ராய்.

பட மூலாதாரம், GETTY IMAGES/SEAN GALLUP
வினோத் ராய் பேச்சை எதிர்த்து சஞ்சய் நிருபம் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு எழுத்து மூலமாக வினோத் ராய் சமர்ப்பித்த வாக்குமூலத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் சஞ்சய் நிருபம்.
வினோத் ராய் தாக்கல் செய்த அந்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"11.09.2014 அன்று டைம்ஸ் நவ் சேனலின் அர்னாப் கோஸ்வாமிக்கு நான் அளித்த பேட்டியில் சஞ்சய் நிருபம் பற்றி சில விஷயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த பேட்டி மறுநாள் 12.09.2014 அன்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தித் தாளிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தாளிலும் வெளியானது. சாகரிகா கோஷுக்கு அளித்த பேட்டி 13.09.2014 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியானது. இந்த பேட்டி வேறு பத்திரிகைகளிலும் வெளியானது.
'நாட் ஜஸ்ட் என் அக்கவுண்டன்ட் : டயரி ஆஃப் நேஷன்ஸ் கான்சைஸ் கீப்பர்' என்ற என் நூல் வெளியான நேரத்தில் இந்த பேட்டிகள் வெளியாயின.
பேட்டி கண்டவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தமது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க நாடாளுமன்ற கணக்குக் குழு கூட்டத்தின்போதோ, நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றபோதோ காங்கிரஸ் எம்.பி. சஞ்சை நிருபம் நெருக்கடி கொடுத்ததாக தவறுதலாக, பிழையாக குறிப்பிட்டுவிட்டேன் என்பதை உணர்கிறேன்.

பட மூலாதாரம், Getty Images
பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வெளியான அந்தப் பேட்டிகளில் சஞ்சய் நிருபமுக்கு எதிராக நான் கூறியவை உண்மைக்குப் புறம்பானவை.
இந்தப் பேட்டியால் சஞ்சய் நிருபம், அவரது குடும்பத்தினர், நலன் விரும்பிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை, வலியை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, என்னுடைய பேட்டியால் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்துக்காக அவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.
இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அனுசரித்து சஞ்சய் நிருபம் இந்த விவகாரத்தை முடித்து வைப்பார் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார் வினோத் ராய்.
பிற செய்திகள்:
- சிக்கலில் சீனா: மின்சாரத்துக்கு அடுத்து டீசலுக்கும் தட்டுப்பாடு
- இயற்கைக்கு பாதிப்பின்றி உடலுறவு கொள்வது எப்படி? பாலுறவும் பருவநிலை மாற்றமும்
- ஒரே நாடு ஒரே சட்டம் - "தமிழ் இனப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணம்": விக்னேஷ்வரன்
- பொறியியல் படிப்புகள்: 5 ஆண்டுகளில் இல்லாத மாணவர் சேர்க்கை - 4 காரணங்கள்
- டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செய்த 'நன்மை'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








