பொறியியல் படிப்புகள்: 5 ஆண்டுகளில் இல்லாத மாணவர் சேர்க்கை - 4 காரணங்கள்

பட மூலாதாரம், annauniv.edu
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, 95 ஆயிரத்தைக் கடந்ததை ஆச்சர்யத்துடன் கல்வியாளர்கள் கவனிக்கின்றனர். ` பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது எனக் கூறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. அதற்குக் காரணம், ஐ.டி துறையில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள்தான்' என்கின்றனர் கல்வியாளர்கள். என்ன நடந்தது?
ஓர் இடம்கூட நிரம்பாத 6 கல்லூரிகள்
தமிழ்நாட்டில் 440 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 1,51,870 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள் என சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர், கடந்த மாதம் 27 ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் நடந்தது. நான்கு சுற்றுகளாக நடந்த கலந்தாய்வில் 89,187 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். மேலும், முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பாமல் விடப்பட்ட இடங்களுக்கான துணை கலந்தாய்விலும் 5,882 இடங்கள் நிரம்பின.
மொத்தமாகக் கணக்கிட்டால் 95,069 இடங்கள் நிரம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `கடந்த ஐந்தாண்டுகளாக நடந்துவரும் மாணவர் சேர்க்கையை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சற்றே அதிகம்' என்கின்றனர் கல்வியாளர்கள். குறிப்பாக, கடந்த 2018-19 கல்வியாண்டில் 509 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டன. அப்போது காலியாக இருந்த 1,78,000 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் 71,900 மாணவர்கள் சேர்ந்தனர். 2019-20 கல்வியாண்டில் 479 பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,72,940 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் 83,396 இடங்கள் நிரம்பின.
தொடர்ந்து, 2020-21 ஆம் கல்வியாண்டில் 461 கல்லூரிகளில் காலியாக இருந்த 1,63,154 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் 69,752 இடங்கள் நிரம்பின. அதுவே, 2021-22 கல்வியாண்டில் 440 கல்லூரிகளில் காலியாக இருந்த 1,51,870 இடங்களில் 95,069 இடங்கள் நிரம்பியுள்ளன. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் கூடுதலாக நிரம்பியுள்ளன. இதில், 16 கல்லூரிகளில் 100 சதவிகித இடங்கள் நிரம்பிவிட்டன. 113 கல்லூரிகளில் 80 சதவிகிதத்துக்கும் மேலான இடங்கள் நிரம்பியுள்ளன. 6 கல்லூரிகளில் ஓர் இடங்கள்கூட நிரம்பவில்லை. கடந்த ஆண்டு 13 கல்லூரிகளில்தான் 100 சதவிகித இடங்கள் நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க வைத்த 4 காரணங்கள்
`` அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்காக அரசு கொடுத்த கல்வி உதவித் தொகையும் சேர்க்கை அதிகரிப்பதற்கு முதல் காரணம். அந்த அடிப்படையில், 7,800 அரசுப் பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். தவிர, கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை அதிகப்படியான மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தேர்வு செய்துள்ளனர். இரண்டாவதாக, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணை மாணவர்கள் பெற்றனர். கோவிட் காரணமாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டன. இதனால், 550க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மாணவர்கள் மத்தியில் இந்த மதிப்பெண் ஏற்படுத்திய நம்பிக்கையே, பொறியியல் படிப்புகளை நோக்கி வருவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது" என்கிறார், கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமார்.

`` மதிப்பெண் அதிகமாக கொடுத்ததால், பொறியியல் படிப்பில் நம்மால் சேர முடியும் என்ற நம்பிக்கையும் மாணவர்களுக்கு வந்துள்ளது. மூன்றாவதாக, நான் தனிப்பட்ட முறையில் அறிந்த உண்மை என்னவென்றால், பொறியியல் முடித்துவிட்டு ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்த்து வருகிற பலர் கோவிட் சூழலில் தங்களின் சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கிருந்தபடியே அலுவல் வேலைகளைப் பார்த்து வந்தனர். இதனைக் கவனித்த மாணவர்களுக்கு ஐ.டி துறையின் மீது ஆர்வம் வந்துள்ளது. அதனால்தான், இந்தமுறை கணினி அறிவியல், ஐ.டி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக நடந்துள்ளது. நான்காவது, கோவிட் பேரிடர் நேரத்திலும் பெரிய ஐ.டி நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கவில்லை. ஆள் தேர்வு அதிகமாக நடந்ததும் ஒரு காரணம்" என்கிறார் செல்வகுமார்.
மேலும், `` தமிழ்நாட்டில் உள்ள முதன்மைக் கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் என அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. காரணம், பாடப்பிரிவுகளையும் தாண்டி நல்ல கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான். கணினி அறிவியல் விரும்பிய மாணவர்கூட, கட்ஆஃப் குறைவாக இருந்தாலும் நல்ல கல்லூரி என்ற அடிப்படையில் வேறு பாடப்பிரிவுளை தேர்வு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது" என்கிறார்.
இடைவெளியை உணர்ந்த மாணவர்கள்
பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்ததன் பின்னணியை வேறு கோணத்தில் விளக்குகிறார், மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியவர், `` பொறியியல் படிப்புகளின் மீது மக்களுக்கு ஆணித்தரமான நம்பிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன. காரணம், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. மாணவர்கள் படிக்கின்ற படிப்புக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே இடைவெளிகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. பொறியியல் படித்தால் அந்த இடைவெளியை நிரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அடுத்ததாக, எந்தவொரு தொழிலாக இருந்தாலும் தொழில்நுட்பம் தெரியாமல் வாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை. அப்படியிருக்கும்போது, `பொறியியல் படித்துவிட்டு தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டால் என்ன?' என மாணவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்" என்கிறார்.

தொடர்ந்து, `` கடைசி ஆறு மாதங்களை கவனித்தால் அனைத்து ஐ.டி கம்பெனிகளிலும், ஆள் தேர்வு குறித்த தகவல்கள் வெளிவருகின்றன. ஒரு சிலர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்க உள்ளதாக வரும் தகவல்களை மாணவர்கள் கவனிக்கின்றனர். எனக்கு நடந்த சம்பவம் ஒன்று. என்னிடம் வந்த மாணவர் ஒருவர், மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதியிருந்தார். `பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது' என அவரது உறவினர் கூறியதை நம்பி நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.
மவுசு குறைந்த மெக்கானிக்கல், சிவில்
தற்போது அதே உறவினர், `நீட் தேவையில்லை, பொறியியல் படித்தால் உடனே வேலை கிடைக்கும்' எனக் கூறியுள்ளார். ஒரு காலத்தில், `பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது' எனக் கூறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. அதற்குக் காரணம், ஐ.டி துறையில் உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள்தான். உலகமே ஆட்டோமேஷனை நோக்கி நகரும்போது, ஐ.டி துறையின் வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. கோவிட் சூழலுக்குப் பிறகு பெரிய கம்பெனிகளின் பங்கு வர்த்தகமும் அதிகரித்துள்ளது" என்கிறார்.
``அதேநேரம், 100 கல்லூரிகள் வரையில் 20 சதவிகித மாணவர்கள்கூட சேரவில்லை. ஒவ்வொரு வருடமும் கல்லூரிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மாணவர்களின் திறன்களை வளர்க்கக் கூடிய கல்லூரிகளுக்கு மட்டுமே மவுசு அதிகரித்துள்ளது. `எதாவது ஒன்றைப் படித்தால் போதும்' என்ற மனநிலையில் மாணவர்கள் இல்லை. `எந்தப் பிரிவுகளுக்கு டிமாண்ட் அதிகம்?' என்பதை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்து கொள்கின்றனர். இதனால் பொறியியல் படிப்புகளின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர்" என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.
``எந்தப் பாடப்பிரிவுகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது?" என்றோம். `` கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, செயற்கை நுண்ணறிவு என கணினி சார்ந்த 14 படிப்புகள் உள்ளன. அதை நோக்கித்தான் மாணவர்கள் படையெடுத்துள்ளனர். மெக்கானிக்கல், சிவில் போன்ற படிப்புகளில் இணைவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தப் படிப்புகள் மிகவும் தேவை. இவை கணினி சார்ந்த பாடப்பிரிவுகளாக மாற்ற வேண்டும்.
கணினி அறிவியல் படித்த மாணவர்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஹாட்ஸ் ஸ்டாரில் 1 கோடிப் பேர் பார்த்துள்ளனர். அந்தளவுக்கு இணையத்தளத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்சார்களின் தேவைகளும் அதிகரித்துள்ளன. எலக்ட்ரானிக், கணினி சார்ந்த படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இது போகப்போக அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- இலங்கையின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியில் தமிழர்கள் இல்லை
- தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடுகிறாரா ஆளுநர் ஆர்.என். ரவி? - சர்ச்சையின் பின்னணி
- சசிகலா தொடங்கிய சுற்றுப் பயணம்: இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் பிளவு பெரிதாகிறதா?
- இரும்புச் சத்துள்ள உணவை சாப்பிட்டால் சோம்பல் நீங்குமா?
- விண்வெளி அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












