தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடுகிறாரா ஆளுநர் ஆர்.என். ரவி? - சர்ச்சையின் பின்னணி

பட மூலாதாரம், MKStalin facebook page
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் ஆளுநரான ஆர்.என். ரவி மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களை ஆய்வுசெய்ய ஏதுவாக தகவல்களைத் தொகுத்துவைக்கும்படி தலைமைச் செயலர் கூறிய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், முதலமைச்சரின் ஒப்புதலுடனேயே இது நடக்கிறது என்கிறது தி.மு.க.
தமிழ்நாடு அரசின் துறைகள் பற்றியும் அவை செயல்படுத்திவரும் நலத் திட்டங்கள் பற்றியும் ஆளுநர் அறிய விரும்புகிறார் என்ற தலைப்பில் அக்டோபர் 18ஆம் தேதியன்று அனைத்துத் துறைகளுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் வெ. இறையன்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், "மேதகு தமிழ்நாடு ஆளுநர் மாநில அரசின் சில துறைகளைப் பற்றியும் அவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் நலத் திட்டங்கள் பற்றியும் அறிய விரும்புகிறார்.
உங்கள் துறையின் மூலம் மாநில அரசாலும் மத்திய அரசாலும் செயல்படுத்தப்பட்டுவரும் நலத் திட்டங்கள் குறித்த தகவல்களை ஆளுநருக்கு அளிக்கும்வகையில் திரட்டிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக பவர் பாயிண்ட் பிரஷன்டேஷனைக்கூட நீங்கள் உருவாக்கலாம். இதற்கான நாள், நேரம் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கை அதிகாரபூர்வமற்ற முறையில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் சிறுபான்மை நல வாரியத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் ஆளுநரின் ஆய்வுக்குக் கண்டனம் தெரிவித்தார். "அரசியல் சாசனத்தின்படி ஆளுநருக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ அதை மதிப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தயாராக இருப்பார். ஆனால், வரம்பு மீறினால் அதற்கு மு.க. ஸ்டாலின் பயப்படமாட்டார்" என்று தெரிவித்தார்.
இதற்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டின் தலைவர் கே.எஸ். அழகிரியும் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்தார். "மாநில அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாகச் செய்தி வெளிவந்திருக்கிறது. இது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிக் கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆளுநர் குடியரசுத் தலைவரின் நியமனத்தின் அடிப்படையில் பொறுப்புக்கு வந்தவரே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு பெற்றவர்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கும், அமைச்சரவைக் குழுவிற்கும் தான் இருக்குமேயொழிய ஆளுநருக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், ஆளுநரின் தலையீடு உள்நோக்கம் கொண்டது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

பட மூலாதாரம், IRAIANBU
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்பட்டதால், உச்ச நீதிமன்றத்தால் அவரது நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல, டெல்லி மாநில ஆளுநரின் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியதால் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்படாமல் தமது வரம்புகளை மீறி, உள்நோக்கத்தோடு செயல்படுவாரேயானால், அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே, ஒட்டுமொத்த தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க., தமிழக ஆளுநரின் நடவடிக்கையால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்" எனத் தனது அறக்கையில் அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்ததையடுத்து, தனது சுற்றறிக்கை குறித்து விளக்கமளித்தார் தலைமைச் செயலர் இறையன்பு. "அலுவல் ரீதியாக துறையின் செயலர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறியிருப்பதாக அறிகிறேன்.
தமிழ்நாட்டுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டிவைத்துக் கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியாக ஒரு கடிதம் அனுப்பிவைத்துள்ளேன். திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல தகவல்களைத் திரட்டிவைத்துக்கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானதுதான்.
அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானதல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான் என்பது தெரியும்" என அறிக்கை ஒன்றை வெளியிட்டார் இறையன்பு.
ஆனால், இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தரப்பில் எதுவும் கூறப்படாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆர்.என். ரவிக்கு முன்பாக தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், தான் ஆளுநராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே கோயம்புத்தூர் சென்றபோது, அங்கிருந்த அரசின் உயர் அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து விவாதித்தார். இது போல தொடர்ந்து அதிகாரிகளைச் சந்திக்கப்போவதாகவும் கூறினார்.
அந்தத் தருணத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது. மற்ற எதிர்க்கட்சிகளும் ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்ததோடு, ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் நிலைப்பாட்டையும் விமர்சித்தனர்.
இது குறித்து அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் கூறும்போது, "இந்த ஆய்வுகள் மாநிலத்தில் 'இரண்டு தலைமை'களை உருவாக்கி, அரசு நிர்வாகத்தை அடியோடு ஸ்தம்பிக்க வைக்கும். முதலமைச்சரின் ஆய்வா, ஆளுநரின் ஆய்வா என்ற கேள்வி அதிகாரிகள் மட்டத்தில் எழுந்து, 'இரு தலைமைச் செயலகங்கள்' இயங்கும் அபாயகரமான சூழ்நிலை எழுந்து, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயலிழந்து விடும்.
எப்படி தலைமைச் செயலகத்திற்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படையுடன் தலைமைச் செயலாளர் அலுவலகத்தை வருமான வரித்துறை ரெய்டு செய்ததைத் தட்டிக்கேட்கத் திராணியில்லாமல், முதலமைச்சர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் ஒட்டிக் கொண்டிருந்தாரோ, அதேபாணியில் இப்போது எடப்பாடி பழனிசாமியும், அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சருக்கு உள்ள தட்டிக்கேட்கும் தைரியம் கூட இல்லாமல், கையறுந்த நிலையில் நிற்கிறார்" என்று குற்றம்சாட்டினார்.
இதற்குப் பிறகு பிற மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வுகளை மேற்கொண்டபோது தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடிகளைக் காண்பித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில், ஆளுநர் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது நிறுத்தப்பட்டது.
முதல்வர் சொல்லியே இது நடக்கிறது: தி.மு.க.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், ஆளுநர் தன்னிச்சையாக இதில் ஏதும் செயல்படவில்லையென தி.மு.க. தெரிவிக்கிறது. இது குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசிய தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், "இதனை எல்லோரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த முறை முதலமைச்சரும் ஆளுநரும் சந்தித்தபோது, தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென ஆளுநர் கேட்டார். இதையடுத்து, முதலமைச்சர் தலைமைச் செயலரிடம் அந்தத் தகவல்களை அளிக்கும்படி சொன்னார். அதன் அடிப்படையில்தான் தலைமைச் செயலர் இந்தத் தகவல்களைத் தயாராக வைத்திருக்கும்படி கேட்டக்கொண்டார்.
இதில் எந்த அதிகார அத்துமீறலும் கிடையாது. முதலமைச்சருக்குத் தெரிந்தேதான் இது நடந்தது" என்கிறார் கான்ஸ்டைன்டைன்.
முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுபோல ஆய்வுகளை நடத்தியதற்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு என்கிறார் அவர். "பன்வாரிலால் புரோகித் முதல்வருக்குத் தெரியாமல் இந்தக் காரியங்களைச் செய்தார். ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அதிகாரிகளைச் சந்தித்தார். இது அப்படியல்ல. ஆளுநர் என்பவர் அரசு நிர்வாகத்தின் தலைவர். முதல்வரின் அறிந்தேற்பின் பேரில் அவர் விஷயங்களைத் தெரிந்துகொள்ள உரிமை உண்டு. அதன்படியே அவர் தெரிந்துகொள்கிறார்" என்கிறார் கான்ஸ்டன்டைன்.

தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிடுவாரா ஆளுநர்?
புதிய ஆளுநராக ஆர்.என். ரவி வந்த பிறகு தி.மு.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லுவது கேலிக்கூத்து என்கிறார் அவர். "அண்ணாமலை சந்தித்த பிறகு முதல்வர் சந்தித்ததை வைத்துக் கேட்கிறார்கள். முதலமைச்சரின் அப்பாயின்ட்மென்ட் மூன்று நாட்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிட்டது. அதற்கும் வேறு சந்திப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் என்ன எடப்பாடி பழனிசாமியைப் போல ஓட்டை உடசல் அரசையா நடத்திக் கொண்டிருக்கிறோம்? ஆளுநரால் என்ன செய்துவிட முடியும்? ஆட்சியைக் கலைத்துவிடுவாரா, கலைக்கட்டும். அதற்குப் பிறகு தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தி.மு.கவே வெல்லும். மூன்று தலைமுறைக்கு தி.மு.கவே ஜெயிக்கும்." என்கிறார் அவர்.
அப்படியானால், கூட்டணிக் கட்சியான காங்கிரசிடமிருந்து தீவிரமான எதிர்ப்புக் குரல்கள் வருவது ஏன்? "அவர்கள் நடந்தது தெரியாமல் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டார்கள். அவர்களிடம் விளக்கிவிட்டோம். அவ்வளவுதான்" என்கிறார் கான்ஸ்டன்டைன்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர்களும் ஆளுநர்களும் எதிரும் புதிருமாக இருப்பது புதியதல்ல. 1991- 96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவருக்கும் அப்போதைய ஆளுநரான சென்னா ரெட்டிக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
பிற செய்திகள்:
- சசிகலா தொடங்கிய சுற்றுப் பயணம்: இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் பிளவு பெரிதாகிறதா?
- இரும்புச் சத்துள்ள உணவை சாப்பிட்டால் சோம்பல் நீங்குமா?
- விண்வெளி அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா
- பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக் கல்லூரிகள் மீது வழக்கு
- கொடூரக் கொலைகாரரிடம் சிக்கியவர் யார் என 45 ஆண்டுகளுக்கு பின் தெரிந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












