எடப்பாடி பழனிசாமி vs ஓ. பன்னீர்செல்வம்: சசிகலா தொடங்கிய சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் பிளவு பெரிதாகிறதா?

பட மூலாதாரம், Aiadmk
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.கவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது தொடர்பாக எழுந்துள்ள இரு வேறு குரல்கள், அ.ம.மு.க வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ''அ.தி.மு.கவில் உள்ள சில அறக்கட்டளைகளில் சசிகலாதான் இன்னமும் பொறுப்பில் இருக்கிறார். அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆரின் உறவுகளும் உறுதியாக உள்ளனர்,'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஓ. பன்னீர்செல்வம்
பசும்பொன்னில் தேவர் குருபூஜை நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, குருபூஜையில் அணிவிப்பதற்காக அ.தி.மு.க தரப்பில் கொடுக்கப்பட்ட தங்கக் கிரீடம் மற்றும் தங்கக் கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து ஒப்படைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் சசிகலா தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் விருப்பம். அவரை அ.தி.மு.கவில் இணைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவு செய்வார்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கம் தொண்டர்களுக்காகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது," என்றார்.
மேலும், "அண்ணா வகுத்துக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவைதான் அ.தி.மு.கவின் அடிப்படைக் கொள்கை. அரசியல் இயக்கத்துக்குத் தலைமை தாங்கியிருப்பவர்கள், பிறரை அரசியல்ரீதியாக விமர்சிக்கும்போது கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அது தொண்டனாக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி," என்றார். இந்த வார்த்தைகள் எடப்பாடி பழனிசாமியை நோக்கிக் கூறப்பட்டவையாக பார்க்கப்படுகின்றன.
சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் பேசிய வார்த்தைகள், அ.தி.மு.கவின் மற்றொரு பிரிவினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
"சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பி.எஸ் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்," என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். தொடர்ந்து, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும், `இதனை சாதிக் கட்சியாக மாற்ற விட மாட்டோம்,' என்றார்.
சுற்றுப்பயணம் தொடங்கிய சசிகலா

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் செவ்வாய் கிழமையன்று கிளம்பிய சசிகலாவுடன் இளவரசியும் பயணம் செய்ய உள்ளார். 27ஆம் தேதி தஞ்சையில் டி.டி.வி.தினகரன் மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்ற பிறகு மதுரை சென்று ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். பின்னர், திருநெல்வேலி உள்பட சில மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சுற்றுப் பயணத்தை கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகிகள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
``சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்த்துக் கொள்ளும் முடிவில் ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறாரா?" என அ.தி.மு.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் கேட்டோம். `` ஆமாம். சசிகலா வந்தால்தான் கட்சி காப்பாற்றப்படும். இல்லாவிட்டால், தொடர் தோல்விகளால் அ.தி.மு.க அழிந்துவிடும். தவிர, வெறுமனே பேசியதோடு ஓ.பி.எஸ் கடந்து போய்விடக் கூடாது," என்கிறார்.
``மதுரையில் ஓ.பி.எஸ் பேசியதற்குக் காரணமே எடப்பாடிதான்" எனக் குறிப்பிட்ட புகழேந்தி, `` சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய தரக்குறைவான வார்த்தைகள்தான் பிரச்னைக்குக் காரணம். ஒரு முதலமைச்சராக இருந்தவர், சசிகலாவை தரக்குறைவாக பேசியதை ஓ.பி.எஸ் விரும்பவில்லை. அதனால்தான், `அண்ணா வழியில் வந்த நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிராகப் பேசுவது தவறானது' என்றார். அவர் குறிப்பிட்டது எடப்பாடியைத்தான்.
ஆ.ராசாவுக்கு எதிராக பேசியது சரியா?
தனது தாயை தி.மு.க எம்.பி ஆ.ராசா தவறாகப் பேசியதாகக் கூறி தேர்தலில் எடப்பாடி பிரசாரம் செய்தார். ஆ.ராசா கூறியதையே மாற்றிப் பேசி வாக்கு சேகரித்தார். சசிகலாவும் பெண்தான். அவரைப் பற்றி மட்டும் எடப்பாடி பழனிசாமி பேசலாமா? தேவர் குருபூஜை முடிந்த பிறகு இந்த விவகாரத்தை ஓ.பி.எஸ் மறந்துவிடக் கூடாது. குருபூஜையில் சசிகலாவை ஓ.பி.எஸ் வரவேற்றுக் கூட்டிச் செல்ல வேண்டும். அங்கு அவரை வைத்தே தங்கக் கவசத்தை அணிய வைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்," என்கிறார்.

பட மூலாதாரம், @EPSTAMILNADU TWITTER PAGE
மேலும், ``சசிகலாவை சேர்த்தால், இறந்து போய்விடுவேன் என கே.பி.முனுசாமி பேசுகிறார். அவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த வேப்பனஹள்ளி மக்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர் நல்லபடியாகவே இருக்கட்டும். அ.தி.மு.கவில் நல்ல மாற்றங்கள் வரும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாதான் பொதுச் செயலாளர் எனக் கூறி கையொப்பமிட்டவர்களில் நானும் ஒருவன். அப்போது போயஸ் தோட்டம் சென்று அவரைக் கூட்டி வந்தபோது கே.பி.முனுசாமி ஏன் அமைதியாக இருந்தார்? சாதி அரசியலை அவர் வளர்த்ததால்தான் ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்தார். பின்னர், ஆட்சிக்கு எதிராக ஓ.பி.எஸ் வாக்களித்தார். அதன்பிறகு இரு தரப்பும் ஒன்று சேர்ந்தன. அந்த சூழல்கள் எல்லாம் மாறியதைப் போல தற்போதும் காட்சிகள் மாறும்," என்கிறார்.
சசிகலாவை சேர்க்க விரும்புவது ஏன்?
``இரட்டை இலையை மதுசூதனன், செம்மலை, ஓ.பி.எஸ் ஆகியோர்தான் சட்டப்படி பெற்றனர். இதில், மதுசூதனன் இறந்துவிட்டார். செம்மலையின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. ஓ.பி.எஸ்ஸை புறக்கணித்துவிட்டு இரட்டை இலை சின்னத்தை யாரும் வைத்திருக்க முடியாது. தவிர, இரட்டை இலைக்கு சிக்கல் வருவதை கட்சியில் யாரும் விரும்ப மாட்டார்கள். சின்னம் இல்லாமல் போனால் டிராக்டர் சின்னத்தில் நின்று விவசாயி எடப்பாடி ஜெயித்து விடுவாரா? அ.தி.மு.கவுக்கு உள்ள பலம் என்பதே இரட்டை இலை சின்னமும் எம்.ஜி.ஆர் என்ற பெயரும்தான்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
தொடர்ந்து பேசுகையில், `` சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஓ.பி.எஸ் நினைக்கிறார். காரணம், தென்மாவட்ட தேர்தல் நிலவரத்தை உணர்ந்து வைத்திருப்பதால்தான். அது ஓரளவுக்கு உண்மையும்கூட. அ.தி.மு.க என்பது முக்குலத்தோர், கவுண்டர்கள், முத்தரையர்கள், அருந்ததியர்கள், மீனவர்கள் ஆகியோரது வாக்குவங்கியால் உருவாக்கப்பட்டது. தற்போது அந்த வாக்கு வங்கியானது சேதாரத்தில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
முக்குலத்தோர் வாக்கு என்பது 8 சதவிகிதமாக உள்ளது. அதில் 2 சதவிகிதம்தான் அ.தி.மு.க பக்கம் உள்ளது. அ.தி.மு.கவில் இவர்கள் ஒன்று சேரவில்லையென்றால், அந்த வாக்குகள் தி.மு.க பக்கம் சென்றுவிடும். பசும்பொன் தேவரின் இறுதி ஊர்வலத்தின்போது பின்னால் அமர்ந்திருந்த இரண்டு அரசியல்வாதிகளில் ஒருவர் அண்ணா, மற்றொருவர் எம்.ஜி.ஆர். அந்தக் காலத்தில் இருந்தே அவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களாக இருந்தனர். காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக முக்குலத்தோர் சமூகம், தி.மு.க பக்கம் இருந்தது. அதில் காமராஜர் எதிர்ப்பும் இருந்தது. 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது அந்த வாக்குகள் அ.தி.மு.க பக்கம் சென்றுவிட்டன. அவர்கள் பழையபடி தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டார்கள்" என்கிறார்.
அறக்கட்டளை நிர்வாகத்தில் சசிகலா
``கட்சிக்குள் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்றுதான் எம்.ஜி.ஆர் குடும்பமும் விரும்புகிறது. கடந்த நான்கு வருடங்களாக எம்.ஜி.ஆரின் நினைவில்லம் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் யாரும் எட்டிப் பார்க்கவில்லை. தங்களின் கைக்காசை போட்டுத்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் நினைவில்லத்தை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க தரப்பில் இருந்து அவர்களுக்கு எந்த உதவிகளும் சென்று சேரவில்லை. அண்ணா தி.மு.க தொடர்புடைய பல அறக்கட்டளைகளில் சசிகலா நிர்வாகியாக இருக்கிறார். இதையும் தாண்டி அவரை சேர்த்துக் கொள்ள மாட்டோம் எனக் கூறுவதற்கு எடப்பாடிக்கும் உரிமையில்லை, கே.பி.முனுசாமிக்கும் உரிமையில்லை.
ஆட்சி இருந்த வரையில் இந்தப் பிரச்னைகள் எல்லாம் வெளியில் வரவில்லை. ஆட்சி அதிகாரம் போன பிறகு பிரச்னைகள் வரத் தொடங்கியுள்ளன. இந்தக் கட்சி பிளவை நோக்கிச் செல்லக் கூடாது என்றால் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது அவசியம்," என்கிறார் ஷ்யாம்.
அ.தி.மு.க சொல்வது என்ன?
அ.தி.மு.கவில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, அக்கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` பொதுக்குழு எடுத்த முடிவின்படிதான் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில், எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் பொதுக்குழு கூடித்தான் முடிவு செய்யும். மேலும், சட்டமன்றத் தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக சசிகலா கூறினார். டி.டி.வி.தினகரனும் தனியாகக் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அரசியலில் இருந்தே ஒதுங்கிய சசிகலா, கட்சியில் இருந்து விலகிச் சென்றதாகத்தானே அர்த்தம்?" என்கிறார்.
மேலும், `` ஓ.பி.எஸ் பேசியதை வைத்து அதனை சர்ச்சை எனக் கூற முடியாது. `யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்' என அவர் கூறினார். அப்போது, `பொதுக்குழு முடிவு செய்யும்' என அவர் கூறியிருக்க வேண்டும். பொதுக்குழுவில் இருந்து சசிகலாவை நீக்கியிருக்காவிட்டால் தனிப்பட்ட நபர்கள் முடிவெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இதனை ஒரு பொருளாக முன்வைத்து, பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய சூழல் வந்ததாகத் தெரியவில்லை" என்கிறார் ஆவடி குமார்.
அவரிடம், ``கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுக்குழுவே கூடவில்லையே?" என கேட்டோம்.
``ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். கடந்த ஆண்டு தேர்தல் காரணமாக விலக்கு பெற்றிருந்தார்கள். அதேநேரம், கட்சியின் செயற்குழு நடந்தது. இந்த ஆண்டு பொதுக்குழுவை கூட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று பதிலளித்தார் ஆவடி குமார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












