பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக் கல்லூரிகள் மீது வழக்கு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி நியூஸ், ஸ்ரீநகர்
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைபோட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதைக் வெற்றியைக் கொண்டாடியதாக காஷ்மீரில் உள்ள இரு மருத்துவக் கல்லூரிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஷேர் -இ - காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு எதிராக புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகிவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியதைத் தொடர்ந்து கொண்டாட்டங்கள் மற்றும் பட்டாசு வெடிக்கும் காணொளிகள் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
"அக்டோபர் 24 அன்று இரவு இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் விடுதிகளில் சட்ட விரோதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்ற சூழல் " குறித்து விசாரித்து வருவதாக பிபிசியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பகை இருந்தபோதிலும், இரு நாடுகளும் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆட இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டன.
ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவுடன் பட்டாசுகள் வெடித்ததுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களும் ஸ்ரீநகர் நகரம் மற்றும் பிற நகரங்களில் ஒலித்தன.
"இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் எந்த ஒரு நபரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. சமூக ஊடகங்களில் பரவிய சில காணொளி குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொண்டாட்டங்கள் மற்றும் முழக்கங்களைத் தூண்டிவிட்ட நபர்களை அடையாளம் காண முயற்சிப்போம், "என்று பெயர் வெளியிட விரும்பாத காவல் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
கொண்டாட்டங்களுக்கு எதிராக வேதனையை வெளிப்படுத்தியும், குற்றவாளிகளை தண்டிக்க அரசை வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டனர்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரில் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு அமித் ஷா பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பதிவுகளுக்காக பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தனிநபர்களுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான எந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றாலும், காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாகவே தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறினாலும், பிரதமர் நரேந்திர மோதியின் அதிகாரம் மிக்க அமைச்சரான அமித் ஷா ஊரில் இருந்தபோது, கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றியை மக்கள் கொண்டாடியது அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானுடன் பேசுவது குறித்த கோரிக்கைகளை அமித் ஷா நிராகரித்த சில மணிநேரங்களில் கொண்டாட்டங்கள் நடந்தன.

பட மூலாதாரம், Getty Images
"நான் பாகிஸ்தானுடன் பேசமாட்டேன். காஷ்மீரில் உள்ள என் சகோதர சகோதரிகளிடம் பேசுவேன். காஷ்மீரி இளைஞர்களுடன் பேசுவேன்" என்று இளம் ஆர்வலர்கள் கூட்டத்தில் அமித் ஷா கூறினார்.
பொதுமக்களின் கொலைகள், தீவிரவாத வன்முறைகள் ஆகியவை அண்மையில் அதிகரித்துள்ளன. ஒரு உள்ளூர் சீக்கிய ஆசிரியர், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மருந்தாளுநர், பிற இடங்களில் புலம் பெயர்ந்து வந்த 4 பேர் உள்பட குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கவல்துறையினர் கூறுகின்றனர்.
இதற்கிடையில், ஜம்முவின் பூஞ்ச்-ரஜோரி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் கடந்த 15 நாள்களாக கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்திய ராணுவத்தின் இரண்டு அதிகாரிகள் உட்பட ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








