உணவு, உடல்நலம்: காற்று வெளியேற வைக்கும் 8 உணவுகள்: 'பின் விளைவுகள்' ஆபத்தானவையா?

பட மூலாதாரம், Getty Images
உங்கள் உடலில் காற்றுப் பிரிகை நிகழ்வது மிகவும் இயல்பானதுதான். சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 5 லிருந்து 15 முறை வாயு வெளியேறும்.
உங்களுக்கு உண்டாகும் சிறு அசௌகரியங்கள் மற்றும் சங்கடங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மனித உடலிலிருந்து காற்று வெளியேறுவது என்பது நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறீர்கள் என்பதையே குறிக்கும்.
மனித உடலில் இருந்து காற்று வெளியேறக் காரணமான உணவுகள் இதயத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள உதவுபவை.
கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து மிகுந்த சில உணவுகளை உங்கள் உடலின் செரிமான மண்டலத்தால் உடைத்து நுணுக்க முடியாது.
ஆனால் செரிமான மண்டலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் அந்த வேலையை திறம்படச் செய்யும்.
சரி.. எந்தெந்த உணவுகள் உங்கள் உடலில் இருந்து அதிகமாக காற்று வெளியேறக் காரணமாக இருக்கின்றன.
காற்று வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன், எந்த சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்? அதற்கான பதில் இதோ.
ஆனால், அந்தப் பதிலை அறியும் முன்பு கட்டாயம் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த உணவுகள் காரணமாக அதிகம் காற்று வெளியேறுகிறது என்பதால் இவை உங்கள் உடலுக்கு தீங்கான உணவுகள் என்று பொருளாகாது. அனைத்தையும் போதுமான அளவில் உட்கொள்வதே உடல் நலத்துக்கு நல்லது.
காற்று வெளியேறக் காரணமாகும் 8 உணவு வகைகள்
1. கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகள்
கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். இதன் காரணமாக இந்தக் உணவுகள் உங்கள் உடலுக்குள் நீண்ட நேரம் தங்கி இருக்கும். அப்பொழுது நொதித்து நுரைக்கும்.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளில், கந்தகம் (சல்ஃபர்) உள்ள அமினோ அமிலமான மெத்தியோனைன் (methionine) இருக்கும்.
குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சல்ஃபரை ஹைட்ரஜன் சல்பைடு-ஆக மற்றும். இதுதான் நீங்கள் காற்றை வெளியேற்றும்போது முட்டை அழுகியது போன்ற துர்நாற்றம் உண்டாகக் காரணம். நீங்கள் உண்ணும் பிற உணவுகளின் மணத்தையும் இது மாற்றி விடுகிறது.
2. மொச்சை
மொச்சை மற்றும் பிற அவரை வகை பருப்புகளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. அவற்றில் ராஃபினோஸ் (raffinose) என்ற ஒரு வகை சர்க்கரையும் இருக்கும். இந்த நுணுக்கமான வேதிப்பொருளை உடலால் மிகவும் சரியாகச் செரிமானம் செய்ய முடியாது. இந்த சர்க்கரை குடலுக்குள் செல்லும்போது, குடலின் நாளங்கள் சக்தி பெறுவதற்காக இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும். இதன் விளைவாக ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் சல்ஃபர் வாயுக்களை உண்டாக்கும்.
இவை உங்கள் உடலில் இருந்து காற்றுப் பிரியக் காரணமாக அமையும்.
3. முட்டை

பட மூலாதாரம், Getty Images
பெரும்பாலானவர்கள் நினைப்பது போல முட்டை நம்மில் பலரையும் காற்று வெளியேற்ற வைக்காது. ஆனாலும் சல்ஃபர் அதிகமாக இருக்கும் மெத்தியோனைன் அமினோ அமிலம் முட்டையில் இருக்கும்.
எனவே நீங்கள் முட்டை சாப்பிடும் பொழுது சங்கடம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு உங்கள் உடலில் காற்று வெளியேறாமல் இருக்க வேண்டுமென்றால், அவற்றுடன் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் அல்லது மொச்சை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
4. வெங்காய வகைகள்
வெங்காயம், வெள்ளைப் பூண்டு போன்றவற்றில் ஃப்ரக்ட்டன் (fructan) எழும் ஒருவகை கார்போஹைட்ரேட் உள்ளது.
ஃப்ரக்ட்டன் வகை கார்போஹைட்ரேட் வயிறு ஊதூதல் மற்றும் காற்றுப் பிரிகை அதிகமாக நிகழக் காரணமாக இருக்கும்.
5. பால் பொருட்கள்
மாட்டுப் பால் மற்றும் ஆட்டுப் பாலில் லேக்டோஸ் (lactose) வெறும் ஒரு வகை சர்க்கரை இருக்கும்.
உங்கள் வயிற்றுக்குள் காற்று அதிகமாக சேர்வதற்கு லேக்டோஸ் வழிவகுக்கும்.
உலக மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகிதம் பேருக்கு, லேக்டோஸ் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாத, ஏதாவது ஒரு வகையில் சிறு பின் விளைவுகளைக் கொண்டுள்ளனர்.
பால் பொருட்கள் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் காற்றுப் பெருகி, வயிறு ஊதுதல் நடக்கும்.
6. கோதுமை, ஓட்ஸ், பார்லி போன்றவை
காற்றுப் பிரிகை அதிகம் நிகழ வைக்கும் ஃப்ரக்ட்டன் வகை கார்போஹைட்ரேட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஓட்ஸ், கோதுமை போன்ற தானியங்களில் அதிகமாக இருக்கும்.

பட மூலாதாரம், IGOR STEVANOVIC / SCIENCE PHOTO LIBRARY
எனவே இவற்றால் செய்யப்படும் ப்ரெட், பாஸ்தா, ஹோல்ஹ்ரெய்ன்உணவுகள் உள்ளிட்டவை உங்கள் வயிற்றில் காற்று அதிகமாகச் சேர்வதற்கு வழிவகுக்கும்.
அதுமட்டுமல்லாமல் கோதுமை, பார்லி, புல்லரிசி (நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும் ஒரு வகை சிறு தானியம்) போன்றவற்றில் க்ளூட்டன் (gluten) அதிகமாக இருக்கும்.
க்ளூட்டன் அதிகமுள்ள உணவை நீங்கள் உட்கொண்டால் அதற்கு பின்பு காற்றுப் பிரிவது அதிகமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.
7. காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், முளைப்பயிறு போன்ற உணவுகள்
காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், முளைப்பயிறு உள்ளிட்ட உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். இவற்றின் காரணமாக இந்த உணவுகளைச் செரிமானம் செய்வதற்கு உங்கள் உடம்புக்கு சற்று நேரம் ஆகும்.
இதன் காரணமாக உங்கள் குடல் நாளங்களில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த உணவுகளை தங்கள் ஆற்றலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும்.
பாக்டீரியாக்கள் இந்த உணவுகளை நுணுக்கும் போது காற்று உண்டாகும். இந்த வகை உணவுகளில் சல்ஃபரும் இருக்கும் என்பதால் காற்று வெளியேறும் பொழுது உண்டாகும் துர்நாற்றம் உங்களுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் சங்கடத்தைத் தரலாம்.
8. சில வகை பழங்கள்

ஆப்பிள், மாம்பழம், பேரிக்காய் போன்ற பழங்களில் ஃப்ரக்டோஸ் எனும் இயற்கையான சர்க்கரை அதிகமாக இருக்கும். இவற்றோடு ஆப்பிள் பேரிக்காய் போன்ற பழங்களில் நார்ச் சத்தும் அதிகமாக இருக்கும் .
ஃப்ரக்டோஸ் அதிகமாக இருக்கும் பழங்களைச் செரிக்க வைப்பது சிலரது உடலுக்கு சற்று கடினமாக இருக்கும். உங்கள் உடலில் இருக்கும் செரிமான மண்டலம் இந்த ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரையை அவ்வளவு எளிதில் நுணுக்க முடியாது. இதன் காரணமாகவும் காற்று அதிகம் உண்டாகும்.
அதிமுக்கிய எச்சரிக்கை
காற்று வெளியேறுகிறது என்பதால் இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது உகந்ததல்ல.
ஏனென்றால் உங்கள் உடலில் இருந்து காற்று பிரியாமல் இருக்க வேண்டும் என்பதைவிட இவற்றின் மூலம் கிடைக்கும் சத்துகள் உடலில் சேர வேண்டும் என்பதே முக்கியம்.
நார்ச்சத்து மிகுந்த உணவுகளை நீங்கள் அதிகம் உட்கொள்ளாமல் இருப்பது தெரியவந்து திடீரென அதிகமான நார்ச்சத்து உள்ள பொருட்களை உட்கொண்டால் உடலுக்கு அசௌகரியமாக இருக்கும். தேவையற்ற 'பின்' விளைவுகளை தவிர்ப்பதற்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் வராமல் தவிர்ப்பது அவசியம்
ஒருவருக்கு மலச் சிக்கல் உண்டானால் வயிற்றில் உண்டாகும் காற்றின் அளவும் அதிகமாகும்.
மலச்சிக்கல் வரும் அபாயத்தை தவிர்ப்பதற்கு உங்கள் உடலில் போதுமான அளவு நீர் சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவு குடலிலேயே உணவு தங்கியிருக்கும் பொழுது அது தொடர்ந்து நொதித்துக் கொண்டே இருந்து காற்றை உண்டாக்கும். அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை சகிக்க முடியாது.

பட மூலாதாரம், Shutterstock
இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் மறக்காமல் நீர் அருந்தவும். (அதற்காக உணவு உண்ண முடியாத அளவுக்கு அதிகமாக அல்ல.) நீர்ச்சத்து நாள் முழுவதும் உங்கள் உடலில் இருப்பதை உறுதி செய்யவும்.
குளிர்பானங்கள் - ஏப்பம், காற்று
நுரைத்து பொங்கும் வகையிலான குளிர்பானங்கள் காரணமாகவும் காற்றுப் பிரிகை நிகழலாம். இந்த வகை குளிர் பானங்களைக் குடித்தால் உங்களுக்கு ஏப்பம் வரலாம். அத்தோடு உங்களுக்கு வழக்கமாக நிகழும் காற்று வெளியேறும் அளவைவிட அதிகமாக காற்று உடலில் இருந்து வெளியேறும். சிவிங்கம் சாப்பிட்டாலும் இதே நிலைதான்.
இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் சூப் போன்ற நீர் ஆகாரங்களை ஸ்பூன் மூலம் குடித்தால், அவற்றை உறிஞ்சும் பொழுது உங்கள் உடலுக்குள் காற்றும் சேர்ந்துதான் உள்ளே செல்லும். உள்ளே சென்ற காற்று எப்படியாவது வெளியே வந்துதானே ஆக வேண்டும்?
காற்று அதிகம் வெளியேறுவதால் நீங்கள் கவலைப்பட வேண்டுமா?
பெரும்பாலான நேரங்களில் இதற்கான பதில் இல்லை என்பதுதான். ஆனால் சில நேரங்களில் மிகவும் அதிகமான அளவு காற்று வெளியேறுவது உங்கள் உடல் நலத்தில் ஏதாவது ஒரு கோளாறு இருப்பதை காட்டுகிறது.
எனவே அத்தகைய சூழ்நிலையில் மருத்துவரை அணுக வேண்டும். சில வகை மருந்துகளை உட்கொண்டாலும் கூட துர்நாற்றத்துடன் காற்று வருவதும் ஒரு 'பின் விளைவாக' இருக்கும்.
பிற செய்திகள்:
- ரிக்ஷா இழுப்பவரிடம் ரூ. 3.47 கோடி வரி கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ்
- எகிறும் பங்குச் சந்தை: இப்போது முதலீடு செய்தால் லாபத்தை அள்ளலாமா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பதில்
- ஈவு இரக்கமில்லா ஆப்ரிக்க கன்னிப்பெண் மெய்க்காப்பாளர்களின் அறியப்படாத வரலாறு
- காடுகளை அழிக்க இப்படியொரு சட்டத் திருத்தமா? - இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












