ஜெயலலிதா கார் ஓட்டுநரின் அண்ணன் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது - எடப்பாடிக்கு மேலும் நெருக்கடியா?

கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் அண்ணன் தனபால் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம், புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. `இதன்மூலம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி முற்றுவதாகவே தோன்றுகிறது. என்ன நடக்கிறது கோடநாடு வழக்கில்?

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017, ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. அப்போது நடந்த மோதலில் எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் சொந்த நாடான நேபாளத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேநேரம், இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

தொடர் விசாரணைகள்

தொடர்ந்து, கொள்ளை வழக்கில் தொடர்புடையவராகக் கூறப்பட்ட சயான், கேரளாவில் விபத்து ஒன்றை எதிர்கொண்டார். இந்தச் சம்பவத்தில் சயானின் மனைவியும் மகளும் இறந்தனர். அடுத்தடுத்து நடந்த மரணங்களின் மூலம், யாருக்காக கோடநாடு கொள்ளை நடந்தது என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன. அதேநேரம், ''எனது சகோதரரின் மரணத்துக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்'' என கனகராஜின் அண்ணன் தனபால் குற்றம் சுமத்தி வந்தார். ஒருகட்டத்தில் 2019ஆம் ஆண்டு சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு அளித்த பேட்டி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது ஆட்சியில் அ.தி.மு.க இருந்தததால் சயான், மனோஜ், மேத்யூ சாமுவேல் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கோடநாடு வழக்கில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் 3 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கனகராஜின் அண்ணன் தனபாலிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதன்மூலம், தன் பெயரை இந்த வழக்கில் சேர்க்க சதி நடப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தினார்.

4 பிரிவுகள்; செல்போன் தரவுகள் எங்கே?

தற்போது ஊட்டி நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார், இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக இருக்கும் சயான், ஜம்சீர் அலி, சந்தோஷ் சாமி, மனேஷ் சாமி, சதீஷன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணையை நடத்தினர். தொடர்ந்து கனகராஜின் அண்ணன் தனபால், கனகராஜின் மனைவி, மைத்துனர், நண்பர்கள் என நாற்பதுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சயான் (இடது) மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகக் கூறியிருந்தனர்.
படக்குறிப்பு, சயான் (இடது) மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகக் கூறியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சாட்சிகளை அழித்தல், தடயங்களை மறைத்த ஆகிய பிரிவுகளின்கீழ் கனகராஜின் அண்ணன் தனபால், அவர்களது உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் வரும் நவம்பர் 8ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்ஜை பாபா உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் பேசுகையில், ''கொள்ளைச் சம்பவம் நடைபெறுவது தொடர்பாக இருவருக்கும் முன்பே தெரிந்துள்ளது. குறிப்பாக, கனகராஜுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ள ரமேஷுக்கு முன்கூட்டியே விவரங்கள் தெரிந்துள்ளன. ஆனால், வழக்கின் மேலதிக விசாரணையின்போது மறைத்துள்ளனர். கனகராஜின் செல்போனில் இருந்த தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, நான்கு பிரிவுகளின்கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்கின்றனர்.

மேலும், ''கோடநாடு வழக்கில் சயான் போலவே, இவர்களும் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவராக காட்டிக் கொண்டே., தடயங்களை தனபால் மறைத்ததாகவும் பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த விசாரணையின் மூலம் கூடுதல் தகவல்கள் வெளிவரலாம்" என்கின்றனர் காவல் துறையினர்.

தனபால் கைது எழுப்பும் சந்தேகம்

``தொடக்கத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்திய தனபாலின் கைதை எப்படிப் பார்ப்பது?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கோடநாடு வழக்கில் தடயங்களை மறைத்த குற்றத்தை குற்றப்பத்திரிகையில் பதிவிட்டு நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புவார்கள். ஆனால், இதை ஒரு போலீஸ் நடவடிக்கையாக இதுவரையில் எடுத்ததில்லை. அவர்கள் இருவரையும் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``நான் நிறைய வழக்குகளை நடத்தியுள்ளேன். ஏ1, ஏ2, ஏ3 என ஒவ்வொரு கொலை, கொள்ளை வழக்கிலும் இருப்பார்கள். அதில், தடயங்களை மறைத்த குற்றவாளிகளின் வரிசைகள் எல்லாம் பின்னால்தான் வரும். இந்த வழக்கில் தடயங்களை மறைத்த குற்றத்தில் ஏ1, ஏ2 எனக் குறிப்பிடுவது ஆச்சர்யமாக உள்ளது. இதில் காவல்துறைக்கு ஏதோ ஒரு நோக்கம் இருப்பதாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பார்கள். அவர்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 162-இன் கீழ் வாக்குமூலம் கொடுப்பார்கள். அது ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. ஆனால், விசாரணை அதிகாரியின் குறிப்புக்கு அது பயன்படும் என சட்டம் சொல்கிறது" என்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு முற்றும் நெருக்கடி

கோடநாடு வழக்கில் தம்மை தொடர்புபடுத்த திமுக அரசு சதி செய்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கோடநாடு வழக்கில் தம்மை தொடர்புபடுத்த திமுக அரசு சதி செய்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

``இந்த வழக்கின் முக்கிய துருப்புச் சீட்டாக கைதான ரமேஷ் பார்க்கப்படுகிறாரே?" என்றோம். `` ஆமாம். அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆத்தூரில் கனகராஜ் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானபோது, அந்த இடத்துக்கு ரமேஷ்தான் முதலில் சென்றுள்ளார். அண்மையில் விஜிலென்ஸ் சோதனைக்கு ஆளான `கூட்டுறவு' இளங்கோவன், எடப்பாடிக்கு நெருக்கமானவராக இருக்கிறார். இவரது வீடும் ஆத்தூருக்கு அடுத்துள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் உள்ளது. கனகராஜின் உறவினர்களும் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள்தான். தற்போது தனிப்படை போலீஸாரும் ஆத்தூரில் முகாமிட்டுள்ளனர். இதில் ஒரு முக்கோண வளையம் வருவதை உணர முடிகிறது. இந்தக் கைதின் மூலம் தடயங்களை மறைக்க முயற்சி நடந்ததாகக் கூறுவது என்பது சற்று நெருடலாகவே உள்ளது" என்கிறார்.

மேலும், `` இந்த வழக்கில் அவர்களை பிணையில் விடுவதிலும் சிக்கல் இல்லை. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி முற்றுவதாகவே பார்க்க முடிகிறது. ஒரு விபத்தை மறு விசாரணை செய்கிறார்கள். அதனை கொலை என எடுத்துக் கொண்டால், அதற்கான தடயங்களை யார் சொல்லி மறைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. கனகராஜின் அண்ணன், தொடக்கத்தில் இருந்தே எடப்பாடி மீது குற்றம் சுமத்தி வருகிறார். அப்படியிருக்கும்போது, இவர்கள் தடயங்களை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடியோடு நெருக்கம் இருந்திருந்தால் தனபால் அமைதியாக ஒதுங்கியிருப்பார். வழக்கமாக, இதுபோன்ற முறைகளைக் கையாண்டுதான் போலீஸாரால் உண்மைகளை வரவழைக்க முடியும். அவர்கள் ஜாமீன் போடுவதை வைத்து அடுத்தகட்டத்தை முடிவு செய்யலாம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :