தமிழக அமைச்சர்களை எச்சரித்த அண்ணாமலை - கொதிக்கும் திமுக

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தி.மு.க அமைச்சர்களுக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. `அமைச்சர் சேகர்பாபு, `நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா?' என மிரட்டல் தொனியில் பேசியதால், `தொட்டுப் பாரு தெரியும்' என அண்ணாமலை பதில் சொன்னார். இது மிரட்டலா?' என கேள்வி எழுப்புகின்றனர் தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள்.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். மின்வாரியத்தில் மின் கொள்முதலில் ஊழல் நடப்பதாகத் தெரிவித்தார். இதற்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
4 சதவீத கமிஷனா?
இதையடுத்து, `தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த சில மாதங்களாக பணம் எதுவும் விடுவிக்கப்படவில்லை. திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் 29.64 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பில் தொகையில் நான்கு சதவீத கமிஷன் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது' என அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, அண்ணாமலை வெளியிட்ட ஸ்க்ரின் ஷாட் ஒன்றில், வங்கிக் கணக்கு, தொகை, கண்காணிப்புப் பொறியாளர்கள் பட்டியல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘ஆதாரத்தைக் கேட்டால் வாரிய அலுவலத்துக்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்றுகூட தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட எக்செல் சீட் கையில் இருந்தும் அந்தத் தொகையை 29.99 கோடியென சரியாக எழுதக் கூட தெரியாமல், அதிமேதாவியாக நான்கு சதவீத கமிஷன் என பொய்ப் புகார் கூறி அவப்பெயர் ஏற்படுத்தும் அண்ணாமலை, இதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்' எனக் கோபத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ` மின்வாரியத்தில் சில ஒப்பந்ததாரர்களின் பில்கள் மட்டும் கிளியர் செய்யப்படுகின்றன. மின்வாரியத்தில் பி.ஜி.ஆர் என்ற நிறுவனத்துக்கு அடுத்தடுத்து ஒப்பந்தங்களைக் கொடுக்கிறார்கள். தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதே காரணம். ஒரு மனிதன் எதிரில் அமர்ந்து பேசும்போது தரம், தராதரம் வேண்டும். செந்தில் பாலாஜியை ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் பதில் சொல்ல வைப்பேன்' என்றார்.
அண்ணாமலையின் எச்சரிக்கை
மேலும் `ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக நேர்மையாக வேலை செய்கிறவர்களை ஊழல்வாதியாக மாற்றுகின்றனர். மாற்று அரசியல் என்று சொன்னார்கள் என்றால், இந்த அரசு ஊழலை நிறுத்த வேண்டும். ஒவ்வோர் அமைச்சரின் ஊழலையும் வெளியில் கொண்டு வருவோம். அவர்களுக்கு மோதி யாரென்று தெரியவில்லை. எங்கள் மீது கை வைக்கிறோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அவர்கள் கை வைப்பதற்காகக் காத்திருக்கிறோம். எங்கள் மீது கை வைத்தால் தானே பா.ஜ.க என்னவென்று தெரியும். பா.ஜ.க மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும்,' என்றார்.
தி.மு.க அரசின் ஊழல் புகார்களை அடுக்கிய அண்ணாமலை, `வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும்' எனக் கூறிய வார்த்தைகள், அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசும்போது, “தமிழ்நாட்டில் அ.தி.மு.கவை அழித்துவிட்டு எதிர்க்கட்சியாக பா.ஜ.க செயல்பட வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். இந்த எண்ணம், அண்ணாமலையை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லப் போவதில்லை. முதல்வர் குறித்து அவதூறாகப் பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் வளர வேண்டியவராக இருப்பதால், சொல்ல வேண்டிய கருத்தை நாகரிகமாக சொல்ல வேண்டும்,” என்றார்.
கேள்வி கேட்டதால் ஒப்பந்தம் ரத்து

பட மூலாதாரம், Getty Images
அண்ணாமலையின் பேச்சு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே? என பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் சி.டி.நிர்மல்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``பா.ஜ.கவில் உள்ளவர்களை மிரட்டி தி.மு.க வழக்கு போடுகிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் போட்டுள்ளனர். கல்யாணராமன் பேசியிருந்தாலும் குண்டர் சட்டத்தில் போடக் கூடிய வழக்கா அது? மேலும், `சோற்றில் உப்பு போட்டுச் சாப்பிடுவதாக இருந்தால் பதில் சொல்லச் சொல்லுங்கள்' என செந்தில் பாலாஜி சொல்கிறார். இதை எப்படிப் பார்ப்பது? போக்குவரத்துத்துறையில் இனிப்பு ஒப்பந்தத்தை அண்ணாமலை கேள்வியெழுப்பியதால் ரத்து செய்துவிட்டனர். நாங்கள் கேள்வி எழுப்பாமல் இருந்திருந்தால் அந்த 100 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை தனியாருக்குக் கொடுத்திருப்பார்கள். இதனைச் சுட்டிக் காட்டுவை எங்களின் பொறுப்பாகப் பார்க்கிறோம்," என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, `நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா?' என மிரட்டல் தொனியில் பேசியதால், `தொட்டுப் பாரு தெரியும்' என அண்ணாமலை பதில் சொன்னார். இது மிரட்டல் தொனியல்ல. தி.மு.க அமைச்சர்கள்தான் அநாகரிமாக பதில் அளிக்கின்றனர்.
`நீங்கள் எல்லாம் கேள்வி கேட்கலாமா?' என கூறும் தி.மு.க, பிறகு எதற்காக ஒப்பந்தங்களை ரத்து செய்கிறது? மின்சாரத்தை தனியாரிடம் ஒரு யூனிட் 20 ரூபாய்க்குக் கொள்முதல் செய்கின்றனர். மற்ற மாநிலங்களில் எல்லாம் 4 ரூபாய் 50 காசுக்கு கொள்முதல் செய்கின்றனர். ஆந்திரா, தெலுங்கானாவில் 3 ரூபாய் 75 பைசாவுக்கு வாங்குகின்றனர். தமிழ்நாட்டில் 2016 - 17 ஆம் ஆண்டில் காற்றாலை நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பணத்தைக் கொடுக்கவில்லை.
கேள்வியே கேட்கக் கூடாதா?

பட மூலாதாரம், TN BJP
ஆனால், அண்மையில் மிக விரைவாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு பில் கிளியர் செய்ததால்தான் சந்தேகம் எழுந்தது. இதனை கேள்வி கேட்பதால் அடுத்தடுத்த விவாதங்கள் கிளம்புகின்றன. செய்தியாளர்களிடம் தான் கூறியதையே சேகர்பாபு மறுத்துப் பேசியுள்ளார். இதனை தனிப்பட்ட விரோதமாக தி.மு.க எடுத்துக் கொள்கிறது. மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது அறிவாலயத்தில் வைத்தே சி.பி.ஐ விசாரணை நடைபெற்றது. இதுதான் அதிகார துஷ்பிரயோகம். இவ்வாறெல்லாம் பா.ஜ.க செய்வது இல்லை. சட்டப்படியாக எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் கேள்வியே கேட்கக் கூடாது என்றால் எப்படி?" என்கிறார்.
``கடந்த காலங்களில் பா.ஜ.க தலைவர்களின் அணுகுமுறைக்கும் அண்ணாமலையின் அணுகுமுறைக்கும் வித்தியாசம் உள்ளதாகக் கூறப்படுகிறதே?" என்றோம். ``அப்போது இதுபோன்ற கடினமான சூழல்கள் இல்லை. சமூக நீதிக் கண்காணிப்புக் குழு, பாடநூல் கழகம், திட்டக் கமிஷன் என தனக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் பதவி கொடுப்பதற்காக மொத்த அரசு இயந்திரத்தையும் தி.மு.க பயன்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழலில் அதற்கேற்ப எதிர்வினையாற்ற வேண்டிய சூழலில் பா.ஜ.க உள்ளது" என்கிறார்.
தி.மு.க சொல்வது என்ன?
“பா.ஜ.கவுடன் கருத்தியல்ரீதியாக பல இடங்களில் தி.மு.க முரண்படுகிறது. ஆனால், தனிப்பட்ட வன்மம் இருந்ததில்லை. ஆனால், அண்ணாமலையின் பேச்சு முழுக்கவே தனிமனித வெறுப்பு பிரச்சாரம் தான். இங்கு சமூகநீதிக்கும் உரிமைக்கும் திராவிடக் கட்சிகள் பேசியபோது, சுயமரியாதை என்ற ஒன்றைக் கற்றுக் கொடுத்தனர். அப்படித்தான் இந்த அமைப்பு முன்னுக்கு வந்தது.
அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் இறந்தபோது, அவர் எவ்வளவோ விமர்சனங்களை தி.மு.க மீது முன் வைத்திருந்தாலும் அவரது இறப்புக்கு தி.மு.க நிர்வாகிகள் சென்றனர். அதாவது, தனிமனித உறவு என்பது வேறு, தத்துவார்த்தம் என்பது வேறு. அண்ணாமலையோ, `நான் பல்லை உடைப்பேன்' என்று பேசுவதெல்லாம் மிகவும் பிற்போக்குத்தனமானது" என்கிறார், தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` அண்ணாமலை இன்னமும் அதிகாரி மனநிலையிலேயே இருக்கிறார். காயத்ரி ஜெயராம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகியை தி.மு.க தலைமை நீக்கியது. அதுவே, தனது கட்சியை சேர்ந்த நிர்வாகி மீது பெண் ஒருவர் புகார் கொடுத்தபோது அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் உரிமைக்காக தொடங்கப்பட்டவை. இந்த அடிப்படையே தெரியாத அண்ணாமலை, மக்கள் மன்றத்தில் நிராகரிக்கப்படுவார்.
அடுத்தகட்ட நடவடிக்கை?

தொடர்ந்து முதல்வரை கொச்சைப்படுத்தும் விதத்தில் அவர் பேசி வருகிறார். மாநிலத்தின் பல உரிமைகளை மத்திய அரசு மறுக்கிறது. அதை நிரூபிக்கும் விதமாக, `எங்களிடம் உள்துறை உள்ளது, பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம்' என்றெல்லாம் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது? இதனை காவல்துறை மனநிலை எனக் கூறி காவல்துறையை கொச்சைப்படுத்த விரும்பவில்லை" என்கிறார்.
தி.மு.க அமைச்சர்களின் வார்த்தைகளும் கடுமையாக உள்ளதாக பா.ஜ.க விமர்சிக்கிறதே? என்றோம். ``நீங்கள் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். மின்துறை அமைச்சரும், இந்து அறநிலையத்துறை அமைச்சரும் பா.ஜ.க என்ற கட்சியை தத்துவார்த்தரீதியாக விமர்சிக்கிறார்களே தவிர, தனிப்பட்ட முறையில் மிரட்டவில்லை. அண்ணாமலையோ, ஒட்டுமொத்த அமைப்பையும் மிரட்டுகிறார். அமைச்சர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற மரியாதையில்லாமல் பேசுவதால், தனிப்பட்ட விளக்கங்களை அவர்கள் கொடுத்து வருகின்றனர். பா.ஜ.கவை தனி மனிதரீதியாக அவர்கள் விமர்சிக்கவில்லை" என்கிறார்.
மேலும், `` பொதுவெளியில் அண்ணாமலை ஓர் ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதற்கு பொறுப்புள்ள அமைச்சராக பதில் சொல்கிறார். அதேநேரம், அவதூறுகளுக்கு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மீது எடுத்தவுடனே நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் நடவடிக்கை எனப் பேசுவார்கள். மக்களிடம் விளக்கி முடித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி நகர்வோம்" என்கிறார்.
அரசியல் முதிர்ச்சியின்மையா?
`` அண்ணாமலையின் அணுகுமுறையானது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அவர் எச்சரிக்கும் தொனியைப் பார்த்தால், போலீஸ் மனநிலையில் இருந்து அவர் இன்னமும் வெளியில் வரவில்லை என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒருவரை மிரட்டும் வகையில் பேசுவதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கலாம். இரு கட்சியினரிடையே மோதலை ஏற்படுத்தி அதன்மூலம் கட்சியை வளர்க்கும் போக்கை அவரிடம் பார்க்க முடிகிறது" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` தங்களை முன்வரிசையில் நிறுத்திக் கொள்வதற்காக அனைவருடனும் அவர் வம்பு இழுப்பதாகவே பார்க்க முடிகிறது. மக்கள் இதனை ரசிக்க மாட்டார்கள். இதுபோன்ற மிரட்டல் பேச்சுக்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். தான் சொல்ல வரும் விஷயத்தை பண்பாட்டுடன் விவரிப்பதே சரியானது. ஒருவரை கடுமையாக விமர்சித்து அதன்மூலம் யாராவது சண்டைக்கு வந்தால் மீண்டும் தகராறு செய்வது என்ற பாணியைக் கையாள்கின்றனர். இது தவறானது" என்கிறார்.
``தி.மு.க நிர்வாகிகளின் கருத்துகளும் எல்லை மீறிச் செல்வதாக பா.ஜ.கவினர் குற்றம் சுமத்துகிறார்களே?" என்றோம். `` தி.மு.க அல்லது பா.ஜ.க என எந்தத் தரப்பாக இருந்தாலும் கண்ணியமான விமர்சனங்கள்தான் அவசியமானது. அண்ணாமலையின் ஆத்திரமூட்டும் பேச்சுக்கு தி.மு.க இரையானால், அது பாரம்பரியமான ஒரு கட்சிக்கு எந்த வகையிலும் பலன் கொடுக்காது. ஊழலுக்கு ஆதாரம் கேட்டு அண்ணாமலை கொடுக்கவில்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கைக்குப் போகலாம். மத்தியில் ஆட்சியில் இருப்பதால், அந்த மமதையில் விமர்சனங்களை முன்வைப்பது என்பது தவறானது. அதற்காக ஆட்சியில் இருப்பவர்கள் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பதும் தவறானது" என்கிறார்.
பிற செய்திகள்:
- போராட்டக்காரர்களை சுட்ட சூடான் ராணுவம் - 7 பேர் பலி, நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா
- 'என் உடல்நிலையில் தொய்வு உண்மைதான், ஆனால்...' - விஜயகாந்த் உருக்கம்
- விஷ மோதிரம் மூலம் மன்னரைக் கொல்ல சௌதி இளவரசர் யோசனை: முன்னாள் அதிகாரி
- காற்று வெளியேற வைக்கும் 8 உணவுகள்: 'பின் விளைவுகள்' ஆபத்தானவையா?
- வட்டிக்கு பணம் கொடுத்தவர் வெட்டிக் கொலை: 3 சிறுவர்கள் கைது
- இலங்கை சென்ற இந்திய கடற்படைக் கப்பல்கள் - கூட்டுப் போர்ப் பயிற்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












