அமித் ஷாவின் ஜம்மு-காஷ்மீர் பயணத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மஜித் ஜஹாங்கீர்
- பதவி, ஸ்ரீநகரிலிருந்து, பிபிசி இந்திக்காக
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை காலை ஸ்ரீநகர் சென்றடைந்தார்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவர் தரையிறங்குவதற்கு முன்பே காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல இடங்களில் கனமழை மற்றும் பனிப்பொழிவு இருந்தது.
2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசியலமைப்பின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அமித் ஷா அங்கு செல்வது இதுவே முதல்முறை.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர், 11 பொதுமக்களை கொன்றுள்ள நிலையில் அமித்ஷாவின் இந்தப்பயணம் அமைந்துள்ளது.
காஷ்மீரின் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இறந்தவர்களில் அடங்குவர். இந்தக் கொலைகளுக்குப் பிறகு, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், காஷ்மீரி பண்டிட்டுகளும் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீருக்கு அமித் ஷாவின் பயணம் தொடங்குவதற்கு முன்பே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிப்பாக ஸ்ரீநகரில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோப்ப நாய்கள், துல்லியமாக குறிபார்த்துச்சுடும் வீரர்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள 'தல் ஏரியும்' பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் உள்ளது.
ஸ்ரீநகரின் ராஜ்பவன் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு பொதுப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சரின் வருகைக்கு முன்னதாக பாதுகாப்புப் படையினரும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த 23 நாட்களில் 18 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்றதாக காவல்துறை கூறியுள்ளது.
அமித் ஷா வருகைக்கு முன்பே, காஷ்மீரில் பெரிய அளவில் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்யவேண்டாம் என்று காவல்துறை அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும், இதுவரை நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சரியான ஆவணங்கள் உள்ள மோட்டார் சைக்கிள்களும்கூட இந்த நடவடிக்கைக்கு இலக்காகியுள்ளன.
இது உள்துறை அமைச்சரின் வருகைக்காக செய்யப்படவில்லை என்றும், இந்த நடவடிக்கை தீவிரவாத வன்முறை தொடர்பானது என்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் குறித்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களில் சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் இளைஞர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர்களின் காஷ்மீர் பயணம்
ஜம்மு - காஷ்மீரில் மக்களுடன் இணையும் மோதி அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு மாத காலத்தில் பல மத்திய அமைச்சர்கள் ஜம்மு -காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2018-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவில்லை. 2018 ஆம் ஆண்டில், பாஜக தனது ஆதரவை திரும்பப்பெற்றதை அடுத்து பாஜக-பிடிபி கூட்டணி அரசு வீழ்ந்தது.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சரியான நேரம் வரும்போது தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 3 ஆண்டுகளாக கூறி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறியிருந்தார்.
370 வது பிரிவு ரத்துசெய்யப்பட்ட பிறகு, காஷ்மீரின் அரசியல் நடவடிக்கைகளில் நீண்ட தேக்க நிலை காணப்படுகிறது. மூன்று முன்னாள் முதல்வர்கள் உட்பட காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நாளில் கைது செய்யப்பட்டனர்.
மறுபுறம், ஜம்மு-காஷ்மீரிலும் எல்லை வரையறுப்புக்கான இறுதி கட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது முடிந்த பிறகு, தேர்தல் நடத்தப்படும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவதன் பின்னணியிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு துபாய் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்த நேரத்தில் உள்துறை அமைச்சரின் ஜம்மு -காஷ்மீர் பயணம் அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்யப்போவதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் துபாய் அரசு தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்வது பற்றியும், இந்தியா - துபாயின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு பின்னடைவு பற்றியும் பேச்சு நிலவுகிறது.
முஸ்லிம் நாடுகள் இந்தியாவுடன் தங்கள் உறவை வலுப்படுத்துவது, பாகிஸ்தானுக்கு நல்ல அறிகுறி அல்ல என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பயணம் ஏன் முக்கியம்?
அமித்ஷாவின் ஜம்மு காஷ்மீர் பயணத்தை மிக முக்கியமானதாக பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் கருதுகின்றனர்.
"காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சரின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது அனைவரையும் ஊக்குவிக்கும். காஷ்மீரில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களும் இதனால் ஊக்கம் பெறுவார்கள்,"என்று பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழல் இல்லாததால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பயணத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக, காஷ்மீர் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"காஷ்மீரில் சமீப நாட்களாக தொழிலாளர்கள், பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மறுபுறம், ஜம்முவின் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை நடந்து வருகிறது. இவற்றுக்கு இடையில்,உள்துறை அமைச்சரின் வருகை இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது,"என்று காஷ்மீரைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஹாரூன் ரேஷி குறிப்பிட்டார்.
370 பிரிவு ரத்து செய்யப்பட்ட உடனேயே, காஷ்மீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்பட்டுவிட்டது என்றும், இந்தப்பிரிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் இந்திய அரசு கூறியது என்று ரேஷி சுட்டிக்காட்டினார்.
"பாஜக அரசு சொன்ன விஷயங்களில் உண்மை இல்லை என்பதை நிலைமை பின்னர் நிரூபித்தது. இரண்டு வருட அனுபவம் நம் முன்னால் உள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. காஷ்மீர் பிரச்சனையின் எதிரொலி தொடர்ந்து கேட்கிறது. இனி ஊடுருவல் முற்றிலுமாக நின்றுவிடும் என்று பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசு கூறியது. ஆனால் பூஞ்சின் சமீபத்திய நிகழ்வுகள், ஜம்மு -காஷ்மீரின் நிலைமை சரியாக இல்லை என்பதைக்காட்டுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்த விஷயங்கள் அனைத்தையும் உள்துறை அமைச்சர் கருத்தில் எடுத்துக் கொள்ளும்போது, அவரும் இதை ஒப்புக்கொள்வார். ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதும் தெரியவரும். இவை அனைத்தும் உள்துறை அமைச்சரின் காஷ்மீர் பயணத்தை முக்கியமாக்குகிறது," என்று ரேஷி சொன்னார்.

பட மூலாதாரம், @AmitShah
அமித்ஷாவுக்கு முன்னால் இருக்கும் வேறு பிரச்சனைகள்
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஜம்மு காஷ்மீர் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுவதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன என்று முன்னாள் பேராசிரியரும் ஆய்வாளருமான நூர் அகமது பாபா கூறுகிறார்.
"2019 ஆம் ஆண்டில் ஜம்மு -காஷ்மீரில் மாற்றங்கள் செய்யப்பட்ட நேரத்தில் அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தார். இந்த மாற்றங்களை அமல்படுத்துவதில் அவர் முன்னிலை வகித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சொல்லும்படியான அரசியல் நடவடிக்கைகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த காலகட்டத்தில் ஜம்மு -காஷ்மீரின் அரசியல் கட்சிகளுடன் பிரதமர் சந்திப்பு ஒன்றை மட்டுமே நடத்தினார். பிறகு தொடர் நடவடிக்கை எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை,"என்று அவர் தெரிவித்தார்.
"தங்களை நம்பிக்கைக்கு பாத்திரமாக எடுத்துக்கொள்வார்கள் என்றும் காஷ்மீர் புறக்கணிக்கப்படவில்லை என்ற செய்தி இதன் மூலம் அளிக்கப்படும் என்றும் மக்கள் நம்பினர். தற்போது ஸ்ரீநகரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டிற்கு உள்துறை அமைச்சர் சென்று நீங்கள் தனியாக இல்லை என்று உறுதியளித்தார். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு, உள்துறை அமைச்சர் ஊக்கம் அளிப்பதை இது குறிக்கிறது," என்கிறார் பாபா.
"காஷ்மீரில் தற்போது அமலில் இருக்கும் கொள்கைகளை மாற்ற வேண்டுமா என்பதையும் உள்துறை அமைச்சர் ஆராய்வார். ஜம்மு -காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படவில்லை, எல்லை வரையறுப்பு விவகாரம் உள்ளது, மாநில அந்தஸ்த்தை திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இவை அனைத்தின் மத்தியில், உள்துறை அமைச்சர் என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிடுவார் என்று மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், மக்களின் கவலைகள் அதிகரித்துள்ளன. மேலும் இந்த கவலைகளைப்போக்க உள்துறை அமைச்சர் ஏதாவது உத்தரவாதம் அளிப்பாரா என்றும் மக்கள் பார்க்கிறார்கள்,' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக ஸ்ரீநகரின் நவ்காம் பகுதியை அடைந்து கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி பர்வேஸ் அகமத்தின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். கடந்த மாதம், தீவிரவாதிகள் பர்வேஸ் அகமதை அவரது வீட்டின் அருகே சுட்டுக் கொன்றனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா 2019 ஆம் ஆண்டில் ஸ்ரீநகரில் உள்ள , ஜம்மு -காஷ்மீர் காவல் ஆய்வாளர் அர்ஷத் கானின் வீட்டிற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஷத் கான் ஒரு தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்.
பர்வேஸின் வீட்டிற்குச் சென்ற பிறகு, உள்துறை அமைச்சர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒரு கூட்டத்தை நடத்தினார், அதில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் குறித்து அதிகாரிகளிடமிருந்து பதில்களைக் கோரியுள்ளார்.
சமீபத்தில் கொல்லப்பட்ட சில சிறுபான்மை மக்களின் குடும்பங்களையும் உள்துறை அமைச்சர் ஸ்ரீநகரில் சந்திக்க உள்ளார். இது தவிர அமித் ஷா, பல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திப்பார்.

பட மூலாதாரம், @AmitShah
மீதி இரண்டு நாட்களுக்கு என்ன திட்டம்
உள்துறை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாள்) ஜம்மு சென்று மாலையில் ஸ்ரீநகர் திரும்புகிறார். அவர் ஜம்முவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றவிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்தத் தகவலை ஜம்மு காஷ்மீர் பாஜக பிரிவு பொதுச் செயலாளர் அசோக் கெளல் பிபிசியிடம் தெரித்தார்.
உள்துறை அமைச்சர் ஜம்மு பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் அதன் பிறகு ஜம்மு ஐஐடி-க்கு செல்வார் என்றும் அவர் கூறினார். உள்துறை அமைச்சர் ஜம்மு பல்கலைக்கழகத்தில் பாஜக தொண்டர்களையும் சந்திப்பார் என்று கூறப்பட்டது.
உள்துறை அமைச்சரின் இந்த பயணம் ஜம்மு காஷ்மீரில் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக உள்ளுர்வாசியான குர்ஷித் அகமது தெரிவித்தார். பொதுமக்களுக்கு நிம்மதியைத்தரும் சில நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
உள்துறை அமைச்சர் இது போல காஷ்மீருக்கு அடிக்கடி வந்து கொண்டே இருந்தால், இடைவெளி முடிவுக்கு வரக்கூடும் என்று அவர் சொன்னார்.
காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி, மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறும் வாய்ப்பு உருவாகக்கூடும் என்பதாலும் உள்துறை அமைச்சரின் பயணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று குர்ஷித் கூறினார்.
ஒவ்வொருவர் மனதிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் அறிவிப்புகளை தனது பயணத்திற்குப்பிறகு உள்துறை அமைச்சர் வெளியிட்டால், இந்தப்பயணத்தின் முக்கியத்துவம் மேலும் தெரியவரும் என்கிறார் குர்ஷித் அகமது.
பிற செய்திகள்:
- காடுகளை அழிக்க இப்படியொரு சட்டத் திருத்தமா? - இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
- எகிறும் பங்குச் சந்தை: இப்போது முதலீடு செய்தால் லாபத்தை அள்ளலாமா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பதில்
- இந்தியா-பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சுவாரசியமான வரலாறு
- அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 10 நாட்டு தூதர்களை 'வரவேற்கப்படாத நபர்களாக' அறிவிக்க எர்துவான் உத்தரவு
- தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு - முழு விவரம்
- ஆஸ்கார் விருதுக்கு செல்லும் 'கூழாங்கல்' சினிமா எப்போது ரிலீஸ் ஆகும்? இயக்குநர் தகவல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












