தமிழ்நாடு அரசின் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு - முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு விவரம்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், ஏற்கனவே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பின்வரும் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
1. அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் ஆகியவை இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றன.
2. அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் (both contact and non contact sports) நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக (Therapeutic purposes) நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.
பின்வரும் செயல்பாடுகளுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
1. அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.
2. திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
3. கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
4. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
5. மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர்சாதன பொது பேருந்து போக்குவரத்து, நூறு சதவிகிதம் பயணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படும்.
5. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் நூறு சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
6. தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.
7. திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
பின்வரும் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்

1. கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
2. கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
3. கடைகளில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
4. கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
5. கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
6. பொதுமக்கள் பண்டிகை மற்றும் சமுதாய நிகழ்வுகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












