வைரமா, வனமா? ரூ.55,000 கோடி மதிப்புள்ள வைர சுரங்கம் பற்றிய ஆய்வு

பக்ஸ்வாஹா காடு
படக்குறிப்பு, பக்ஸ்வாஹா காடு மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
    • எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஒரு பயங்கரமான காடு எப்படி இருக்கும் என்பதை புத்தகங்களில் படித்திருக்கிறேன். டிஸ்கவரி சேனலிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த காட்டைத் தவிர தங்கள் வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லாதவர்களின் கதைகளை இப்போது நான் கேட்டேன்.

ஒரு பிற்பகலில் அமைதி நிலவும் அந்த அடர்ந்த காட்டில் தேக்கு மரங்களின் போர்வைக்கு வெளியே சிறிது வெளிச்சம் இருந்த இடத்தை அடைந்தபோது, கிழிந்த ஆடைகளை அணிந்த ஒருவர், இலைகளையும் கிளைகளையும் சேகரித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

அவர் பெயர் பகவான் தாஸ் என்றும், அவர் மூலிகைகளை சேகரித்து நோய்வாய்ப்பட்டவர்களுக்குக் கொடுப்பதால், அந்தக்காட்டுப்பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக அவரிடம் வருகிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன்.

"இந்த காட்டில் சுரங்கம் தோண்டப்பட்டால் அதன் பிறகு என்ன நடக்கும்?"என்று நான் அவரிடம் கேட்டேன்.

சில நொடிகளுக்குப் பிறகு பதிலளித்த பகவான் தாஸ் "அதன் பிறகு மக்கள் இறந்துவிடுவார்கள். இதுதான் நடக்கும். ஏனென்றால் இந்த காட்டில்தான் மருத்துவ இலைகள் மற்றும் மரங்கள் காணப்படுகின்றன. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். உயிர்களைக் காப்பாற்றும் மூலிகைகளை அவர் கொண்டுவருகிறார். பின்னர் அது எங்கிருந்து வரும் என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்கள் நினைத்தால் போராடட்டும். நான் தனியாக என்ன செய்யமுடியும்," என்றார்.

பகவான் தாஸ்
படக்குறிப்பு, பகவான் தாஸ்

நாம் இங்கு எந்த காடு பற்றிப் பேசுகிறோமோ அது பக்ஸ்வாஹா காடு என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் நடுவில் உள்ளது.

இந்த கதை 2002ஆம் ஆண்டில் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ரியோ-டின்டோ நிறுவனம், பக்ஸ்வாஹா காடுகளின் கீழ் வைரங்களைக் கண்டுபிடிக்கும் வேலையைப் பெற்றது. இது தொடர்பாக, நிறுவனம் தனது ஆலையை இங்கு அமைத்தது.

பல வருட தேடுதலுக்குப் பிறகு, 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் பூமியின் கீழ் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 950 ஹெக்டேர் காடுகள் சுரங்கத்திற்காக தேர்வுசெய்யப்பட்டன.அதன் கீழ் எல்லா கிராமங்களும் வந்தன. ஆனால் உள்ளூர் எதிர்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் காரணமாக, ரியோ டின்டோ நிறுவனம் 2016ல் தனது திட்டத்தை கைவிட்டது.

நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீடு செய்த பிறகு திடீரென ஏன் 'திட்டத்திலிருந்து விலகியது' என பல கேள்விகள் அந்த நேரத்தில் எழுப்பப்பட்டன.

அந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு 'உள்ளூர் தடைகள் மேலும் மேலும் அதிகரித்ததே' இதற்குக் காரணம் என தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

2019ஆம் ஆண்டில், ஒரு புதிய ஏலத்திற்குப் பிறகு வைர சுரங்கத்திற்கான புதிய உரிமம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் எஸ்ஸெல் சுரங்க நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 382 ஹெக்டேரில் வைர சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.

ரியோ டின்டோவின் காலத்தில் சில உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் இன்னும் இந்த காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள கிராமங்களில் வாழ்கின்றனர்.

வருமானத்திற்கு அச்சுறுத்தல்

கணேஷ் யாதவ்
படக்குறிப்பு, கணேஷ் யாதவ் அந்த வெளிநாட்டு சுரங்க நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

கணேஷ் யாதவ் அந்த வெளிநாட்டு சுரங்க நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார் ஆனால் இன்றும் அவரது இதயத்தில் ஒரு வருத்தம் இருக்கிறது.

"2004-2005ல் இருந்தே அரசும், நிறுவனமும் இந்த வேலையைச் செய்யும் தகுதியுடையவர்களாக எங்கள் குழந்தைகளை ஆக்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அன்று முதல் அதைச்செய்திருந்தால் இன்று 18 வயதாகியுள்ள இந்தப் பகுதிக்குழந்தைகள் பட்டம் பெற்றிருப்பார்கள் அல்லது தொழில்நுட்பப் பணிகளைக் கற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் புதிய நிறுவனத்தில் வேலை செய்திருக்கலாம். இப்போது ஒரு புதிய ஆலை இங்கு அமைக்கப்பட்டாலும், அதில் வேலை செய்யும் திறன் எங்கள் குழந்தைகளிடம் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

பீடி இலைகள், இலுப்பை, நெல்லிக்காய் போன்றவற்றை சேகரித்து அவற்றை விற்று, காடுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழும் சுமார் 10,000 பேர் வாழ்க்கை நடத்துகின்றனர். இதன் மூலம் கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண குடும்பம் கூட ஆண்டுக்கு ரூ. 60,000-70,000 சம்பாதிக்கிறது என கிராமவாசிகளிடமிருந்து தெரியவந்தது.

காடுகளின் விளிம்பில் உள்ள கிராமமான ஷாபுராவை அடைந்த போது, மண்ணால் பூசப்பட்டிருந்த வீடுகளிலிருந்து எனக்கு அதீத அன்பு கிடைத்தது. ஆனால் வருமானம் நின்றுபோகக்கூடும் என்ற கவலையால் பெரும்பாலான முகங்கள் வாடியிருந்தன.

' எங்களுக்கு தூசி மட்டுமே கிடைக்கும், வைரங்கள் அல்ல'

பக்ஸ்வாஹா காடு
படக்குறிப்பு, பக்ஸ்வாஹா காடு

மூன்று குழந்தைகளின் தாயான பார்வதி தன் ஓடு வேயப்பட்டிருந்த சிறிய வீட்டை சுத்தம் செய்வதில் மும்முரமாக இருந்தார். ஆனால் அவர் மனம், கடல் போல கொந்தளித்துக் கொண்டிருந்தது.

"நாங்கள் அனைவரும் காட்டுக்குச் சென்று பொருட்களை சேகரிக்கிறோம். அப்போதுதான் செலவு நடக்கும். அது இல்லையென்று ஆகிவிட்டால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களிடம் விவசாயம் செய்ய நிலம் அல்லது வேறு தொழில் இல்லை. அப்படி இருந்திருந்தால் அதன் மூலம் குழந்தைகளை வளர்த்திருக்கலாம். நாங்கள் காட்டை சார்ந்து இருக்கிறோம்," என ஈரமான கண்களுடன், அவர் கூறினார்.

பக்ஸ்வாஹாவில் சிலரை நான் சந்தித்தேன். அவர்களுக்கு வைரங்களின் மீது முன்பும் ஆர்வம் இருக்கவில்லை. இப்போதும் இல்லை. வனத்தின் எல்லையில் உள்ள ஒரு கோயிலில் கீர்த்தி தாக்கூரை நான் சந்தித்தேன்.

"காடு தோண்டப்பட்டால், பறக்கும் தூசி மட்டுமே எங்களுக்கு கிடைக்கும். எங்களுக்கு வைரமா கிடைக்கப்போகிறது? இந்தப் பகுதி மக்களுக்கு இங்கு வேலையா கிடைக்கப்போகிறது? எங்களுக்கு அதன் தூசி மட்டுமே கிடைக்கும், "என்றார் அவர்.

வைரச் சுரங்கம்

பக்ஸ்வாஹா
படக்குறிப்பு, பக்ஸ்வாஹா

இதற்கிடையில், 'பந்தர் சுரங்கத் திட்டம்' அல்லது 'பக்ஸ்வாஹா வைர சுரங்கத்தின்' யோசனை கூறப்பட்டுள்ள திட்டம் பற்றி, மத்தியப் பிரதேச அரசின் கருத்து மற்றும் சிந்தனை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

அந்த மாநிலத்தின் கனிமத்துறை அமைச்சர் பிரிஜேந்திர பிரதாப் சிங்குடன் நான் உரையாடினேன்.

"நாங்கள் சென்று சந்தித்த கிராம மக்களிடையே ஒரு நபர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது வேலைவாய்ப்பை வழங்கும் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று அவர் கூறினார்.

காடு வெட்டப்படும் என்று பயப்படுவதாக பலர் வெளிப்படையாக கேமராவில் கூறியது பற்றிய பிபிசியின் கேள்விக்கு பதிலளித்த, கனிமத்துறை அமைச்சர் , "நாங்கள் அப்படி ஒன்றை கேள்விப்படவில்லை. நீங்கள் கேள்விப்பட்டீர்கள் என்றால் அது எனக்குத்தெரியாது,''என்றார்.

"மாண்புமிகு முதலமைச்சரும் ஒரு குழுவை அனுப்பியிருந்தார். நாங்களும் சென்று தனிப்பட்ட முறையில் வெளிப்படையாக மக்களிடம் கேட்டோம். வெளியில் இருந்து வந்தவர்கள் சொல்கிறார்கள் ஆனால் உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை."என்று அவர் கூறினார்.

இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டியிருக்கும்

எஸ்ஸெல் சுரங்க நிறுவனம், வைரங்களைத் தோண்டுவதற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்ட வேண்டியிருக்கும். மத்தியப் பிரதேச அரசின் கனிம அமைச்சர் பிரிஜேந்திர பிரதாப் சிங் மற்றொரு விஷயத்தையும் கூறுகிறார்.

"நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் உள்ளூரில் பார்வையிட்டிருப்பீர்கள். நிலம் நிச்சயமாக ஒரு காடுதான். ஆனால் காடு அவ்வளவு அடர்த்தியாக இல்லை. நாங்கள் 10 லட்சம் புதிய மரங்களையும் நடவு செய்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் உண்மை அவரது அறிக்கைக்கு முற்றிலும் எதிரானது. பிபிசி குழு பல மணி நேரம் நடந்து, வைரச் சுரங்கம் தொடங்க இருக்கும், வனத்தின் நடுவில் உள்ள இடத்தை அடைந்தது.

குறைந்த அடர்த்தி என்று அரசு விவரிக்கும் காடு உண்மையில் மிகவும் அடர்த்தியாக இருப்பதால், மூன்று - நான்கு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க மணிக்கணக்கில் நடக்க வேண்டும், அதுவும் காட்டு விலங்குகளிடையே.

கரடியால் தோண்டப்பட்ட குழிகளோடு கூடவே நீல்கை எனப்படும் சிறு கொம்புடைய மான்வகை, காட்டு எருதுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பறவைகளையும் நாங்கள் கண்டோம்.

தண்ணீர் நெருக்கடி ஏற்படும்

பக்ஸ்வாஹா காடு
படக்குறிப்பு, பக்ஸ்வாஹா காடு

வைர சுரங்கத்திற்கு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும். முன்மொழியப்பட்ட வைர சுரங்கத்திற்கு ஒரு நாளைக்கு 16,050 கன மீட்டர் தண்ணீர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டம், தொடங்கும் நாளிலிருந்து 14 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு காடுகளை வெட்டுவதற்கு பதிலாக 10 லட்சம் மரங்களை நடுவது பற்றி பேசுகிறது. ஆனால் அவற்றுக்கும் தண்ணீர் தேவை.

மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், முழு புந்தேல்கண்ட் பிராந்தியத்திலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. சுரங்கத்திற்கு நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்படலாம் என மக்கள் அஞ்சுகிறார்கள். இதன் விளைவுகள் 'பேரழிவை ஏற்படுத்தும்.

நீண்டகாலமாக பக்ஸ்வாஹா காடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பணியாற்றும் ஆர்வலரான அமித் பட்நாகரை, பக்ஸ்வாஹாவுக்கு அருகிலுள்ள பிஜாவரில் நான் சந்தித்தேன்.

"இந்த பகுதியை தண்ணீரின் கண்ணோட்டத்தில் பார்த்தால், அது ' ஓரளவு தீவிர தண்ணீர் பிரச்சனை' உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. எனவே அணை கட்டுவதன் மூலம் கெயில் நதி திசை திருப்பப்படுகிறது. இதன் காரணமாக கெயில் நதி வற்றிவிடும்," என அவர் குறிப்பிட்டார்.

"இதில் இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 875 மரங்கள் வெட்டப்பட வேண்டும். இதன் காரணமாக இங்குள்ள பல நீரூற்றுகள் அழிந்துவிடும். கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்" என்று பட்நாகர் எச்சரிக்கிறார்.

'மனிதர்களின் கல்லறை மீது தொழில் வளர்ச்சி இல்லை'

பக்ஸ்வாஹா காடு
படக்குறிப்பு, பக்ஸ்வாஹா காட்டுக்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஓவியம்

ஆயிரக்கணக்கான விலங்குகளுடன், பல பழங்குடி இனத்தவர்களும் இந்த காட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்கள் இடப்பெயர்ச்சிக்கு அஞ்சுகின்றனர்.

மரங்களை வெட்டுவது, தண்ணீர், பழங்குடி மக்கள் மற்றும் விலங்குகளை இடமாற்றம் செய்வது தொடர்பான முக்கிய கேள்விகளுக்கு விடை தேடி எஸ்ஸெல் மைனிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை அணுகியபோது, இது தொடர்பாக பேச மறுத்துவிட்டது.

தற்போது, எஸ்ஸெல் சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சுரங்கம் தோண்டப்படுமா இல்லையா என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருத்தது.

பல மனுதாரர்களில் ஒருவரான நேஹா சிங்கை நான் டெல்லியில் சந்தித்தேன். அவர் சில மாதங்களுக்கு முன்புதான் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

பக்ஸ்வாஹாவில் சுரங்கத்திற்கு எதிரா தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் போடப்பட்டுள்ள மனு பற்றி பேசுவதற்கு முன்பே அவர் , "கொரோனா தொற்றுக்கு பிறகு, சுத்தமான காற்று மற்றும் ஆக்ஸிஜனின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் அதிகமாக உணர்ந்தேன். " என்றார். "தொழில்துறை வளர்ச்சி, மனிதர்களின் கல்லறையின் மீது இருக்க முடியாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை என்ஜிடி ஏற்கனவே அளித்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலம் ஒரு கேள்விக்குறி

அழிந்துவிட்டால் என்றென்றைக்குமாக கைவிட்டுப் போய்விடும் ஒன்று இந்தக்காட்டில் உள்ளது. பெரிய அளவிலான சுரங்கங்கள் இங்கு தோண்டப்பட்டால் அவற்றின் எதிர்காலம் என்ன ஆகும் என்று தெரியாது.

பக்ஸ்வாஹா காடுகளை ஒட்டிய குகைகளில் காணப்படும் ஓவியங்கள் 25,000 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கூறுகிறது.

நல்லதோ கெட்டதோ, வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் ஒவ்வொரு அம்சமும் இங்கே ஓவியங்களின் வடிவில் உள்ளன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மனிதர்கள் இருந்தார்கள், இன்றும் அவர்கள் இருக்கிறார்கள். இது எவ்வளவு காலம் நீடிக்கும், என்பதுதான் கேள்விக்குறி என ஒவ்வொரு ஓவியமும் நம்மிடம் சொல்வது போலிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :