இனப்பெருக்கத் திட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற உலகின் கடைசி ஒற்றை கொம்பு வெள்ளை காண்டாமிருகம்

பட மூலாதாரம், Getty Images
உலகின் கடைசி வடக்கத்திய வெள்ளை ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்களில் ஒன்றுக்கு, இனப்பெருக்க திட்டத்திலிருந்து விஞ்ஞானிகள் ஓய்வு கொடுத்துள்ளனர். இந்த இனம் அழிந்துவிடாமல் இருக்க, இந்த இனப்பெருக்கத் திட்டம் நடத்தப்பட்டது.
காண்டாமிருகம் தொடர்பாக நடத்தப்பட்ட அபாய மதிப்பீட்டில், 32 வயதான நாஜின் என்கிற காண்டாமிருகத்தின் வயது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாஜினோ அல்லது அதன் மகளான ஃபடுவோ ஒரு கருவைச் சுமக்க முடியாதவையாக உள்ளன.
வெள்ளை காண்டாமிருக இனத்தின் கடைசி ஆண் விலங்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போனது. ஆனால் அதன் விந்தணு சேகரிக்கப்பட்டு, இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி, கால்நடை மருத்துவர்கள் காண்டாமிருகத்திலிருந்து கருமுட்டைகளை சேகரிக்கிறார்கள். சேகரித்த கருமுட்டைகளை இத்தாலியில் உள்ள ஒரு கருவுறுதல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஏற்கனவே இறந்த இரு ஆண் காண்டாமிருகத்திலிருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்தணு மற்றும் பெண் காண்டாமிருகத்தின் கருமுட்டையைப் பயன்படுத்தி செயற்கை முறையில் கருதரிக்கச் செய்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இதுவரை 12 கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அதை தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னக பெண் வெள்ளை காண்டாமிருகத்தினுள் செலுத்த உள்ளனர் விஞ்ஞானிகள்.
நாஜின் என்கிற பெண் காண்டாமிருகத்தின் கருமுட்டைகளை எடுப்பதற்கு முன்பே, சில அபாயங்களை மதிப்பிட்டது பயோ ரெஸ்க்யூ என்கிற இந்த இனப்பெருக்கத் திட்டத்தை முன்னெடுக்கும் விஞ்ஞானிகள் குழு.
"ஒரு விலங்கின் நலனை கருத்தில் கொண்டு, ஓர் இனத்தை பாதுகாக்கும் திட்டத்திலிருந்து ஒரு விலங்குக்கு ஓய்வு கொடுப்பது குறித்து நீண்ட காலம் ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு விலங்கு, அவ்வினத்தில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 50 சதவீதம் எனும் போது இந்த முடிவை பல முறை ஆலோசிக்க வேண்டியுள்ளது" என தலைமை கால்நடை மருத்துவர் ஃப்ராங்க் கொரிட்ஸ் மற்றும் ஸ்டீஃபன் குலு கூறுகிறார்கள்.
நாஜின் காண்டாமிருகத்தின் வயதைத் தாண்டி, அதற்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்த்த போது, அதன் கருப்பை வாய், கருப்பையில் சிறிய கட்டிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகும், நாஜின் இத்திட்டத்தின் ஒரு பாகமாக மற்ற வழிகளில் இருக்கும் என பயோ ரெஸ்க்யூ கூறியுள்ளது. உதாரணமாக ஸ்டெம் மரபணு ஆராய்ச்சி போன்றவைகளுக்கு திசு மாதிரிகளைக் கொடுக்க இது பயன்படுத்தப்படும்.
வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்கள் வேட்டை மற்றும் வாழ்விட இழப்பின் காரணமாக அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.
நாஜின் காண்டாமிருகம் செக் நாட்டில் ஒரு வன விலங்கு பூங்காவில் பிறந்தது. ஒரு தசாப்த காலத்துக்குப் பிறகு கென்யாவில் உள்ள ஒல் பெஜெடா பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்குதான் பலத்த ஆயுத பாதுகாப்புக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறது நாஜின்.
பிற செய்திகள்:
- பனிமலைகள் உருகுவதால் மனித குலத்துக்கு என்ன ஆபத்து?
- அண்ணாமலை VS செந்தில் பாலாஜி: ஊழல் தொடர்பாக ட்விட்டரில் தொடரும் மோதல்
- "ஒரு படைத்தலைவனை கூட உருவாக்க முடியவில்லையா?" மதிமுக-வில் வாரிசு அரசியல் எதிர்ப்பு புயல்
- 'ட்ரூத் சோஷியல்' என்ற பெயரில் புதிய சமூக ஊடகம் தொடங்கும் டொனால்டு டிரம்ப்
- ஒரு தலை காதல்: பெண்ணின் கணவரை கொன்ற கோவில்பட்டி இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












