ஒரு தலை காதல் விபரீதம் - பெண்ணின் கணவரை கொலை செய்த கோவில்பட்டி இளைஞர்

கோவில்பட்டி கொலை
படக்குறிப்பு, மகாலட்சுமி - சூரியராகவன் தம்பதி

ஒரு தலையாக காதலித்த பெண்ணின் கணவரை கொலை செய்ததாக கோவிட்பட்டியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுளார். அத்துடன் கொலை சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரே வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் குமாரகிரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சூரிய ராகவன். இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். சூரியராகவன் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் வழக்கம் போல் சூரியராகவன் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், சூரியராகவன் மீது மிளகாய் பொடியை தூவி அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினார்.

இதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த எட்டயபுரம் காவல் நிலைய அதிகாரிகள், சூரிய ராகவனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற இளைஞரை எட்டயபுரம் காவல்துறையினர் திருச்செந்தூரில் வைத்து கைது செய்தனர்,

அவரிடம் விசாரணை நடத்தியபோது, மகாலட்சுமியும் தானும் உறவினர்கள் என்பதால் பள்ளியிலிருந்தே இருவரும் நட்பு கொண்டிருந்ததாகவும் மகாலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

கோவில்பட்டி கொலை
படக்குறிப்பு, சூரிய ராகவனை கொலை செய்ததாக கைதாகியுள்ள ஆனந்தராஜ்.

இது குறித்து போலீஸ் தரப்பில் மேலும் கூறியபோது, "நல்ல வேலை கிடைத்த பிறகு மகாலட்சுமி வீட்டிற்கு சென்று அவரை பெண் கேட்கலாம் என நினைத்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார் ஆனந்தராஜ். இந்த நிலையில், சொந்த ஊருக்கு அவர் திரும்பியபோது மகாலட்சுமியும் சூரியராகவனும் காதலித்து வந்தது ஆனந்தராஜுக்கு தெரியவந்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டது.

"அத்துடன், இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது பற்றி ஆனந்தராஜுக்கு தெரிய வரவே மகாலட்சுமியை கொலை செய்ய அவர் திட்டமிட்டிருக்கிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகாலட்சுமியை கொலை செய்ய எட்டயபுரம் பேருந்து நிலையம் வந்து ஆனந்தராஜ் காத்திருந்தபோது, அங்கு காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டதை பார்த்து விட்டு தமது முடிவை அவர் தள்ளிவைத்துள்ளார்."

"பின்னர் சூரிய ராகவனை தனது வீட்டுக்கு வந்து டிவியை சரிசெய்து தருமாறு அழைத்து கொலை செய்ய ஆனந்தராஜ் சதி செய்துள்ளார். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்பதால் புதன்கிழமை காலை யில் எட்டயபுரம் டிவி மெக்கானிக் கடை வைத்திருக்கும் சூரிய ராகவன் கடைக்குச் சென்று கடையில் இருந்த அவர் மீது மிளகாய் பொடியை தூவி பின் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ஆனந்தராஜ் தப்பி ஓடியுள்ளார்," என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை வேறொருவர் திருமணம் செய்ததை ஏற்க முடியாத ஆத்திரத்தில் சூரிய ராகவனை கொலை செய்தததை அவரே ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :