அரக்கோணம் அருகே இரு பிரிவினர் மோதலில் 2 பேர் அடித்துக் கொலை - முழு விவரம்

தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சண்டையில் இரண்டு இளைஞர்கள் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி வருகிறது.
அரக்கோணத்திற்கு அருகில் உள்ள சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் புதன்கிழமையன்று மாலையில் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள குருவராஜப்பேட்டையில் இருந்த கடை ஒன்றில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பக்கத்து ஊரான பெருமாள் ராஜப்பேட்டையைச் சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தல் தொடர்பான பேச்சு வார்த்தை முற்றியதே இந்த மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு அன்று இரவு, சோகனூரைச் சேர்ந்த அர்ஜுனன், சூர்யா, மதன், சௌந்தர் உள்ளிட்ட இளைஞர்கள் பெருமாள்ராஜபேட்டை அருகே செல்லும்போது 20க்கும் மேற்பட்டவர்கள் இவர்களை கம்பு, கட்டை, கல், இரும்புக் கம்பி, கத்தி ஆகியவற்றால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகனும் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த மோதல் குறித்து தகவல் அறிந்த சோகனூர் மக்கள் மோதல் நடந்த இடத்திற்குச் சென்று படுகாயமடைந்த நான்கு பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளித்த நிலையிலும் 23 வயது இளைஞரான அர்ஜுனும் 24 வயது இளைஞரான சூர்யாவும் உயிரிழந்தனர். இதில் சூர்யாவுக்கு திருமணமாகி, மனைவியும் குழந்தையும் உள்ளனர். அற்ஜுனுக்கு திருமணமாகி பத்து நாட்களே ஆகியுள்ளன. இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் கடுமையான காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேவாலயப் பகுதியில் நேற்று இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், அவர்களைக் கலைந்துசெல்லச் செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து வேடல், குருவராஜப்பேட்டை, பெருமாள்ராஜப்பேட்டை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பதற்றத்தைத் தணிக்க, அந்தப் பகுதியில் சுமார் 50 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரிடம் காவல்துறை விசாரணை செய்துவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "சோகனூரில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஜாதிவெறியர்கள் இந்தச் செயலைச் செய்துள்ளனர். இது தொடர்பாக பா.ம.கவைச் சேர்ந்தவர்களையும் மணல் மாஃபியா கும்பலையும் கைதுசெய்ய வேண்டும். ஏப்ரல் 10ஆம் தேதி மாவட்டத் தலைமையகத்தில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்று கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- கொரோனா அச்சத்துடன் நாளை தொடங்குகிறது ஐபிஎல்: சி.எஸ்.கே. வெற்றி வாய்ப்பு எப்படி?
- திருவிழாக்களுக்கு தடை: பேருந்துகள், ஆட்டோக்களுக்கு நிபந்தனை - தமிழகத்தில் மீண்டும் கொரனோ கட்டுப்பாடுகள்
- பிரிட்டனில் உள்ள மியான்மர் தூதரகத்தில் இருந்து அந்நாட்டுத் தூதர் வெளியேற்றம்: யார் காரணம்?
- காசோலை மோசடி வழக்கில் ராதிகா, சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












