புதுச்சேரி தனித்துவத்தை இழப்பது ஏன்? நிதி சிக்கல், வேலையின்மை, தொழில்துறை சரிவு - காரணம் என்ன?

புதுச்சேரி ரயில் நிலையம்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி - தன் பெயருக்கு ஏற்ப புதுமைகள் கொண்ட மாநிலமாகவே பார்க்கப்படுகிறது. ஆன்மிகம், சுற்றுலா என்ற இரண்டும் புதுவையின் ஈர்ப்பு.

எனவே இங்கு வந்து செல்லும் வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும், வந்து குடியேறும் வெளியூர்காரர்களும் அதிகம்.

புதுச்சேரியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வேலைவாய்ப்பிற்கும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் இதுவும் காரணமாக அமைகிறது. ஆனால், தற்போது இதில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது தற்போது.

புதுச்சேரி மக்கள் நலத் திட்டம், தொழில் துறை, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் எதிர்பாராத அளவிற்கு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புதுச்சேரியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது விமர்சகர்கள் கருத்து.

நிதி நெருக்கடியால் ஸ்தம்பிக்கும் புதுச்சேரி

இந்திய ரூபாய்

பட மூலாதாரம், Getty Images

"புதுச்சேரி அரசுக்கு விற்பனை வரியும், கலால் வரியும்தான் வருவாய் ஆதாரமாக இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில் செலவு 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. ஆனால் வருவாய் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குறைவாகவே இருக்கிறது. மீத நிதிக்கு மத்திய அரசைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மானியமும் தற்போது குறைந்துவிட்டது. இதனால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது.

தற்போது புதுச்சேரி அரசுக்கு ரூ. 8,863 கோடி கடன் சுமை உள்ளது. இது புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு தனி நபர் மீதும் சுமார் 63 ஆயிரத்திற்கும் அதிகமான கடன் இருப்பதற்கு சமம். தமிழகத்துடன் ஒப்பிடும்போது தனிநபர் மீதுள்ள கடன் சுமை புதுச்சேரியில் அதிகமாக உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடக் கூடிய திட்டச் செலவினங்களுக்கான நிதி போதுமனாக இருப்பதில்லை. இங்கிருக்கும் நிதி அரசின் திட்டமில்லா செலவினங்களுக்கு மட்டுமே பயன்படும் அளவிற்கு இருக்கிறது. இந்த நிதி பிரச்னை கடந்த இரண்டு ஆட்சிக் காலமாக நீடித்து வருகிறது," என்கிறார் சமூக செயல்பாட்டாளர் இளங்கோவன்.

புதுச்சேரி ஒன்றிய பிரதேசமாக இருப்பது ஒரு காலத்தில் பலமாக இருந்தது. பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது போல மருத்துவம், கல்வி, தொழில்துறை, பொருளாதாரம். வேலைவாய்ப்பு என அனைத்தும் அமைந்தது. எந்த ஒரு தேவைக்கும் பிற மாநிலங்களை சார்ந்து இல்லாமல், தனித்தன்மை வாய்ந்ததாகவே புதுச்சேரி இருந்தது.

தொழில்துறை நிறுவனங்களின் வீழ்ச்சி

குறிப்பாக 1980களுக்குப் பிறகு புதுச்சேரியில் வரிச்சலுகை அறிவித்த பிறகு, நிறைய தொழிற்சாலைகள் வரத்தொடங்கின. தொழிற் பேட்டைகள் உருவாக்கப்பட்டு, நிறைய தொழிற்சாலைகள் புதுச்சேரியில் நிறுவப்பட்டன. இதனால், வெளி மாநிலத்தைச் சேர்த்தவர்கள் இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காகப் புலம்பெயர்ந்து வந்தனர். நாளடைவில் புதுச்சேரி தொழிற்சாலைகளுக்கு இருந்த வரிச்சலுகைகள் குறையத் தொடங்கவே, புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளும் படிப்படியாக குறையத் தொடங்கின.

"ரங்கசாமி முதல்வராக இருந்தபோது புதுச்சேரிக்கு மத்திய அரசு அளிக்கும் நிதிக்கு துறை வாரியாக தனிக்கணக்குத் தொடங்கப்பட்டது. உபரி நிதி உள்ள துறைகளில் இருந்து பற்றாக்குறை உள்ள துறைகளுக்கு நிதியை திருப்பிக்கொள்ளும் பழைய முறை இதனால் தடுக்கப்பட்டு, உபரி நிதி மீண்டும் மத்திய அரசுக்கே சென்றது. அப்போதிலிருந்து மக்களுக்கான நலத் திட்டங்களைச் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியிலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி காலத்திலும் மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு பேரிடர் காலங்களில், புதுவைக்குத் தேவையான நிதியை வழங்கியது. ஆனால் இந்த காலகட்டத்திற்குப் பிறகு 2014ல் இருந்து புதுச்சேரிக்கு எந்த சூழ்நிலையிலும் தேவையான நிதி வழங்காமல் மறுக்கப்பட்டு வந்தது. மாநில வளர்ச்சித் திட்டப் பணிகள், புயல், மழை கொரோனா பெருந்தொற்று போன்றவற்றுக்கு ஒன்றிய பிரதேச அரசு வலியுறுத்தும் நிதி வழங்கப்படவில்லை," என்று கூறுகிறார் இளங்கோவன்.

காலியாக இருக்கும் அரசுப் பணியிடங்கள்

புதுச்சேரியில் அதிகபட்சமாக கல்வித்துறையில்தான் அதிக அளவில் அரசு ஊழியர்கள் வேலை செய்கின்றனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் அந்த துறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 15 ஆண்டுகளில் கடுமையாகச் சரிந்துள்ளதுதான் என்று கூறுகிறார் சமூக செயற்பாட்டாளர் அருள்தாசன்.

"குறிப்பாக சுமார் 1.20 லட்சம் பேர் படித்த அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 80 ஆயிரமாக சரிந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய அரசுப் பள்ளிகளுக்கான காலி இடங்கள் சில பகுதியில் நிரப்பப்படாமல் இருக்கிறது.

இதே நிலைதான் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு துறையிலும் நிகழ்கிறது. பல ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இருக்கும் ஊழியர்களை வைத்துச் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்த காரணத்தால், அரசு துறைகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாகவே உள்ளது. இதனால் அரசு சார்பில் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதி அடிப்படையில் குறிப்பிட்ட அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கினாலும் கூட, பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வித் தகுதிக்கு உடையவர்கள் அந்த வேலையாவது கிடைக்காதா என்று நிற்கும் அவல நிலை புதுச்சேரியில் இருக்கிறது," என்கிறார் அருள்தாசன்.

புதுச்சேரியின் பிரதான தொழில்களின் சரிவே நெருக்கடிக்கு காரணம்

பருத்தி ஆலை

பட மூலாதாரம், Getty Images

அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்டவற்றில் கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை வேலைக்கு வாய்த்த காரணத்தினால் நஷ்டத்திற்குத் தள்ளப்பட்டன. இதனால் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடும் சூழல் உருவாகியது. இதுமட்டுமல்லாமல் புதுச்சேரியின் பிரதான தொழிற்சாலைகளான ரோடியார், சுதேசி, பாரதி உள்ளிட்ட பஞ்சாலைகள் மூடப்பட்டன. புதுச்சேரியில் ஆண்டாண்டு காலமாக இந்த ஆலைகளை நம்பி வாழ்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியின் பிரதான தொழில் அம்சங்களில் ஒன்றாக நெசவு தொழில் இருந்தது. அரசு சார்பில் நெசவாளர்களை ஊக்குவிக்க தனி தொழில் நிறுவனங்கள் இருந்தது. இதன் மூலமாக புதுச்சேரியில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வந்துள்ளனர்.

இவர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை அரசு சார்பு நிறுவனங்களில் விற்பனை செய்தனர். குறிப்பாக இவர்களது தொழிலை ஊக்குவிக்கும் விதமாகப் புதுச்சேரி மக்களுக்குக் கொடுக்கப்படும் இலவச வேஷ்டி, சேலை திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது இலவச துணிக்குப் பதிலாகப் பணம் கொடுக்கும் முறை அமலான பிறகு இவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் படுத்துவிட்டது.

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெசவு, மீன்பிடி, விவசாயம், பஞ்சாலை உள்ளிட்டவை பிரதான தொழிலாக இருந்தன. இவையனைத்தும் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அரசாங்கத்தின் தவறான கொள்கை முடிவுகளால், நெசவு பஞ்சாலை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

காந்தி சிலை, புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

"புதுச்சேரியில் வேளாண் பங்கு மிக முக்கியானதாக திகழ்ந்தது என்று கூறலாம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் இரண்டு பிராந்தியங்களிலும் நெல், மணிலா (வேர்க் கடலை), பருப்பு வகைகள், கரும்பு, சிறு தானியங்கள், வாழை மற்றும் காய்கறிகளும் அதிகம் பயிரிடப்பட்டது. புதுச்சேரியில் மட்டும் 25 ஆயிரம் ஹெக்டேருக்கு மேலாக விவசாய நிலங்களில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் அறுவடை செய்யப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் விவசாயம் சார்ந்த வேலையில் அதிக மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்தனர். ஆனால், தற்போது ரியல் எஸ்டேட் மூலமாக நிலங்கள் விற்கத் தொடங்கியதைத் தொடர்ந்து விவசாய நிலங்கள் பெருமளவு குறையத் தொடங்கியது. இதனால் தற்போது புதுச்சேரியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் இல்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைப் போல புதுச்சேரியில் ஆறுகள் இல்லை. பெரும்பாலும் ஏரிகளும் குறைந்த அளவிலேயே இருந்தாலும் அவைகளும் அனைத்தும் சிறிய ஏரிகளாக இருக்கின்றன. இங்குள்ள விவசாயிகள் அதிகமானோர் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். அதிலும் அரசு நிறுவனங்கள் மூலமாக விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரம், விதை பொருள் வழங்கப்பட்டு வந்தது. நிதிப் பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற உழவர் உதவி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கான உரிய இடுபொருள் கிடைக்காமல் வெளி மாவட்டங்களுக்கு சென்று வாங்கும் சூழல் ஏற்பட்டது. மேலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் காரணமாக வேளாண் ஒழுங்கு முறை விற்பனை நிலையங்களுக்கு தங்களது பொருளை உரிய விலைக்கு விற்க முடியாத சூழல் ஏற்பட்டது," என்று கூறுகிறார் அருள்தாசன்.

வேலைவாய்ப்பின்மையால் இடம் பெயரும் இளைஞர்கள்

புதுச்சேரி இளைஞர்கள்

கடந்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சமயத்தில் புதிய தொழில் கொள்கை புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு எண்ணிக்கையில் தொழில் தொடங்க நிறுவனங்களும் முன்வரவில்லை. சில நிறுவனங்கள் சில தொடங்கப்பட்டாலும் உள்ளூர் இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு அங்கே கிடைக்கவில்லை என்பதே உண்மை.

பெரும்பாலாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெயரளவுக்கு உள்ளூர் இளைஞர்கள் சிலரை வேலைக்கு அமர்த்தினர். அதுவும் கிடைக்கக்கூடிய சொற்ப நபர்களுக்கான வேலைகள் கூட பெரும்பாலும் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் கிடைக்கிறது. இதன் காரணமாக பொறியியல், தகவல் தொழில்நுட்பம் படித்த மாணவர்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.

"குறிப்பாக புதுச்சேரியில் உள்ள 30 சதவீத இளைஞர்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு வேலைக்குச் செல்கின்றனர். 15 சதவீதத்தினர் உள்ளூரில் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். மிதமுள்ள 55 சதவீதத்தினர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். வேலைவாய்ப்பின்மையால் இந்தியாவில் புதுச்சேரிக்கு தான் முதலிடம் உள்ளது," என்கிறார் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழிகாட்டுனர் வீரராகவன்.

புதுச்சேரியில் தொழில்துறை நிறுவனத்திலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பிராண்ட் என்று சொல்லக் கூடிய ஒருங்கமைக்கப்பட்ட நிறுவனம் இங்கே எதுவுமில்லை. இங்கிருக்கும் தொழில்துறை நிறுவனங்கள் உள்ளூரில் வேலை செய்பவர்களுக்கு அதிக பட்சமாக 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்குகின்றனர். அதற்கு மேல் சம்பாதிக்க விரும்பும் இளைஞர்கள் புதுச்சேரியில் வேலை செய்ய விரும்புவதில்லை.

அதிக சம்பளம் வாங்கக்கூடிய பிராண்ட் நிறுவனங்கள் இங்கே இல்லாமல் இருப்பதுதான் இளைஞர் பெருமளவு வெளியே செல்கின்றனர். தகவல் தொழில்நுட்ப பூங்கா புதுச்சேரி கொண்டு வருவதற்கான திட்டம் வகுத்துள்ளனர். அப்படி புதுச்சேரிக்கு உயரிய நிறுவனங்கள் வரும் பட்சத்தில், இங்கிருக்கும் இளைஞர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைத்தும்," என்கிறார் வீரராகவன்.

நவீனமயமாக்க வேண்டும்

புதுச்சேரியில் இருக்கும் தொழிற்சாலை

"புதுச்சேரியில் இதுவரை மூட தொழிற்சாலைகள், ஆலைகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தை இங்கே புகுத்த வேண்டும். இதனால் தொழிற்சாலைகள் நவீனமயமாகும், அப்படிச் செய்வதன் மூலமாக புத்துயிர் பெரும் தொழிற்சாலைகள் மூலமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்குப் புதுச்சேரியில் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். புதுச்சேரியின் தற்சார்பு பொருளாதாரமும் உயரும். புதுச்சேரி புதிதாக மாற்றம் காண இங்கே யாரும் விரும்பவில்லை. இது ஒரு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்த பூமியாகும். இது பழைய நிலைமைக்குத் திரும்பினாலே போதும், புதுச்சேரி மக்களும் சரி, பொருளாதார வளர்ச்சியும் செழுமையாக இருக்கும்," என்கிறார் சமூக செயல்பாட்டாளர் கண்ணன்.

அரசு ஈட்டும் வருவாயைக் கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே செலவிட நேர்கிறது. புதுச்சேரி பழைய நிலைக்குத் திரும்ப ஒரே வழி, புதுச்சேரி அரசின் கடன் மற்றும் வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்வதே என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

"அரசு புதுச்சேரிக்கு முன்பு வழங்கிவந்த 80 சதவீத மானியமானது 25 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதில் குறைந்துள்ள நிதியானது அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே அதற்கான உரிய மானியம் வழங்க வேண்டும். சுற்றுலா பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்கும் புதுச்சேரியில், தற்போது கொரோனா காலகட்டத்தில் வரி சுமை காரணமாக சுற்றுலா பயணிகளும் குறைந்துவிட்டனர். வரியைக் குறைந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் திட்டங்களை மேம்படுத்தி மாநில வருவாயை உயர்த்தலாம்," என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: