"என் மீதான ஊழலை புகாரை நிரூபிக்க முடியுமா?" சவால் விடுக்கும் நாராயணசாமி

நாராயணசாமி

பட மூலாதாரம், NARAYANASAMY TWITTER

தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதை நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்திகளைச் சந்தித்த நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமித்ஷா என் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதையே வேலையாக வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

"பிரதமர் புதுச்சேரி வந்தபோது வழக்கம் போல, என்னையும் காங்கிரஸ் கட்சியையும் குறை சொல்லி பரப்புரையில் ஈடுபட்டார். எங்களுடைய ஆட்சியில் நான் ஊழல் செய்ததாக என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். பிரதமருக்கு நான் சாவால் விடுக்கிறேன். மத்தியில் உங்களுடைய ஆட்சி இருக்கிறது. நான் ஊழல் செய்திருந்தால் அந்த ஊழலை நிரூபிக்க நீங்கள் தயாரா?" என்று நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

"ஐந்தாண்டு காலம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் நான் முதல்வராக இருந்துள்ளேன். இந்த கூட்டணி ஆட்சியில் நானோ என் துறையைச் சேர்ந்தவர்களோ ஊழல் செய்திருந்தால், ஓய்வு பெற்ற அல்லது இப்போது பதவியில் இருக்கின்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்கு உத்தரவிடுங்கள். அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். பிரதமர் அதை அறிவிப்பாரா? அவர் சொன்ன ஊழல் புகாருக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்," என்று நாராயணசாமி கூறினார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"காரைக்கால் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை வசைபாடியதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை. பிரதமர் மோதி ரூபாய் 15 ஆயிரம் கோடி கொடுத்ததாகவும், அதை நான் கையாடல் செய்துவிட்டதாகவும், அதில் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொண்டு மீதியைக் காந்தி குடும்பத்திற்குக் கொடுத்தாக என் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்."

"ஆனால், தேர்தல் துறை இது தொடர்பாக எந்த பதிலையும் கொடுக்கவில்லை," என்றார் நாராயணசாமி.

"மத்திய ஆளும் கட்சியின் அதிகாரத்தால், புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் சுதந்திரமாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியவில்லை. தேர்தல் துறை பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறையினர் இதை கண்டுகொள்வதில்லை. நிர்வாகமும் பாஜகவிற்கு முழுமையாக ஆதரவு கொடுக்கின்றனர். ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது," என்றார் நாராயணசாமி.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக நேரடியாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவதாக நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: