தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக கூட்டணி 160-170 தொகுதிகளில் வெல்லும் - நம்பிக்கையுடன் களம் காணும் எம்.ஆர். விஜயபாஸ்கர்

அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலில், 160 முதல் 170 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்று ஆளும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சரும் கரூர் தொகுதி வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் அதிமுக கடைப்பிடிக்கும் தேர்தல் வியூகம், செந்தில்பாலாஜியின் உள்ளூர் போட்டி போன்றவை குறித்து பேசினார். அதில் இருந்து.

உங்கள் தொகுதி மக்களிடம் எதை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறீர்கள்?

ஒரு ஆளும் கட்சி ஐந்து வருட ஆட்சிக்குப் பிறகு மக்களிடம் சென்றால் ஏராளமான கேள்விகள் வரும். ஆனால், பத்து வருட ஆட்சியை நிறைவு செய்து விட்டு மக்களிடம் வாக்கு கேட்டு செல்கிறோம். எந்தவித பிரச்னைகளும் இல்லை. இதற்குக் காரணம் மக்களுக்கான திட்டங்களை எந்த குறையும் இல்லாமல் நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். விவசாயிகள் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்களை சட்டமாக்கி விட்டு மக்களை சந்திக்கிறோம். அந்த வகையில் அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

மேலும், தமிழக முதலமைச்சர் ஏழை மக்களுடைய சிரமங்களை அறிந்து, வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, 6 இலவச கேஸ் சிலிண்டர், இலவச வாஷிங் மெஷின், குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி, சோலார் அடுப்பு ஆகிய திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. திமுகவினர் என்றுமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை. திமுகவினர் சொல்வதை செய்ய மாட்டார்கள், ஆனால், அதிமுகவினர் சொல்வதை கட்டாயம் செய்வார்கள். எனவே, கரூரில் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவு எப்படி இருக்கிறது?

கூட்டணி கட்சிகளைப் பொருத்தவரை, இப்பகுதியில் பாமகவினர் குறைவாகவே உள்ளனர். பாஜக உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளும் எங்களுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

செந்தில்பாலாஜியும், நீங்களும் ஒரே கட்சியில் இருந்தபோது இப்பகுதியில் சேர்ந்து வாக்கு சேகரித்திருப்பீர்கள். இப்போது எதிரெதிர் களத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்கள். மக்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

செந்தில் பாலாஜி பதவிக்காக வேறு கட்சிக்கு சென்றவர். இந்த தொகுதி என்றைக்குமே அதிமுகவின் கோட்டைதான். இவற்றை செய்திருக்கிறோம், இவற்றையெல்லாம் செய்யப் போகிறோம் என மக்களிடம் எடுத்துக்கூறி நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம். மக்களின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கிறது.

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறதே?

போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை என எதுவுமே கிடையாது. தமிழக முதல்வர் அனைத்தையும் கொடுத்து விட்டார். தொழிலாளர் ஓய்வூதியத்தில் அரியர் தொகை மட்டுமே இப்போது நிலுவையில் உள்ளது. அதுபற்றியும் முதலமைச்சரிடம் கூறியுள்ளோம்.

கொரோனா காலத்தில் பேருந்துகளை இயக்காமல் இருந்தபோதும் முழு சம்பளம் கொடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் பாதி சம்பளம் தான் வழங்கினார்கள். ஆனால், நமது முதல்வர், தொழிலாளர்களின் சிரமங்களை அறிந்து முழு சம்பளத்தை கொடுத்தார். வரும் காலங்களில் போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து இடர்பாடுகளும் சரி செய்யப்படும். நிச்சயமாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது?

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என உறுதியாக தெரிவிக்கிறேன். 160 முதல் 170 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும். 2016ஆம் ஆண்டு அம்மா ஜெயலலிதா போட்டியிட்ட போதும், அனைத்து ஊடகங்களும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என கருத்துக் கணிப்பு வெளியிட்டனர். ஆனால், நிலைமை தலைகீழானது. மக்கள் மனதில் யார் இடம் பிடித்திருக்கிறார்களோ, அவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவர் ஒரு விவசாயி. விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். பெரும்பான்மையான விவசாயிகளின் மனதில் இடம் பிடித்த முதல்வர் எடப்பாடியார் தான் மீண்டும் அம்மாவின் அரசை தமிழகத்தில் அமைப்பார்.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: