கோவைக்கு வந்த யோகி ஆதித்யநாத்: கடைகள் மீது கல்வீச்சு, என்ன நடந்தது?

யோகி அதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

(இந்திய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் கல்வீச்சு நடத்தி கடையை மூட வலியுறுத்தினர் என்கிறது இந்து தமிழ்திசை நாளிதழ்.

புலியகுளம் வந்த ஆதித்யநாத், அங்கிருந்து வாகனப் பேரணியில் கலந்து கொண்டு, பிரசாரக் கூட்டம் நடக்கும், ராஜவீதி தேர்முட்டி திடலுக்கு வந்தார். அந்த இருசக்கர வாகனப் பேரணியில் வந்த வாகனங்கள், பெரிய கடைவீதியில் இருந்து நேராக சென்று, ஒப்பணக்கார வீதியில் வலதுபுறம் திரும்பி, ராஜவீதியை அடைந்து தேர்முட்டிக்குச் சென்றன.

முன்னதாக, இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட இருசக்கர வாகனங்கள், மாநகராட்சி அலுவலகம் உள்ள பெரியகடைவீதியில் இருந்து நேராக சென்று ஒப்பணக்கார வீதியை அடைந்து வலதுபுறமாக திரும்பும் போது, அங்கு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்த, இருசக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்ட ஒருவர், அங்கிருந்த கடையை மூட வலியுறுத்தி கல்வீசி தாக்கினார்.

அதைத் தொடர்ந்து கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்த தடியால், சில வியாபாரிகளை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் அங்கு வந்ததைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த பாஜகவினர் அங்கிருந்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உக்கடம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் என மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி.

45 வயதுக்கு மேல்பட்ட அனைவருக்கு கொரோனா தடுப்பூசி - இன்று தொடக்கம்

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

நாடு முழுவதும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்கிறது தினத்தந்தி செய்தி.

மேலும், இதற்கான ஏற்பாடுகள், தடுப்பூசிகள் இருப்பு, கள பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் காணொலி காட்சி வழியாக உயர் மட்ட கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள், மாநில தடுப்பூசி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

"மாநிலங்களுடனான தடுப்பூசி வினியோகத்தில் தட்டுப்பாடு இல்லை. தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் பிரச்சினை ஏதும் இல்லை. தடுப்பூசி தொடர்பான தளவாடங்களுக்கும் பிரச்சினை இல்லை. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசி வினியோகம் தொடர்ந்து செய்யப்படும்" கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியும், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட குழுவின் தலைவருமான டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.

சமையல் எரிவாயு விலை 10ரூபாய் குறைந்தது

எரிவாயு சிலிண்டர்

பட மூலாதாரம், Getty Images

சமையல் எரிவாயு உருளையின் விலை 10ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி மற்றும் 15ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த இரு மாதங்கள் மட்டும் எரிவாயு உருளையின் விலை 125ரூபாய் வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது எரிவாயு உருளையின் விலையில் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது இதனால் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதால் இந்த விலை குறைப்பு என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: