புதுச்சேரியில் பா.ஜ.கவின் எஸ்எம்எஸ் பிரச்சாரம்: ஆதார் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மொபைல்

பட மூலாதாரம், Getty Images

புதுச்சேரியில் தனிநபர்களின் மொபைல் எண்களுக்கு பா.ஜ.கவினர் மொத்தமாக தேர்தல் பிரச்சார எஸ்எம்எஸ்களை அனுப்பிய விவகாரத்தில், அவர்களுக்கு எப்படி இந்த எண்கள் கிடைத்தன என்பது குறித்து 6 வாரங்களுக்குள் ஆதார் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் தனி நபர்களின் மொபைல் எண்களுக்கு பா.ஜ.கவினர் மொத்தமாக தேர்தல் பிரச்சார எஸ்எம்எஸ்களை அனுப்புவதாகவும் இது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் (டைஃபி) சேர்ந்த ஆனந்த் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஆதார் ஆணையத்திலிருந்து தகவல்கள் ஏதும் கசியவில்லையென்ற வாதத்தை ஆணையம் முன்வைத்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ஜ.க. சார்பில் வாதிட்ட வழக்குரைஞர், தங்கள் கட்சியைச் சார்ந்த கார்யகர்த்தாக்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில்தான் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஆதாரிடமிருந்து எந்தத் தகவலும் பெறவில்லை எனக் கூறினார். ஆதார் ஆணையத்தின் மறுப்பையும் மேற்கோள் காட்டினார்.

ஆனால், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டும்தான் இந்த எஸ்எம்எஸ் வந்ததாகக்கூறி அதற்கான ஆவணங்களை டைஃபி தரப்பு தாக்கல் செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுப்பதாகவும் டைஃபி தரப்பு தெரிவித்தது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் எஸ்எம்எஸ் மூலம் பிரச்சாரம் செய்வது தீவிரமான தனிமனித உரிமை மீறல் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்களுக்கு மட்டும் இது போல எஸ்எம்எஸ் வந்திருப்பதால் இது எப்படி நடந்தது என விசாரணை நடத்த வேண்டும்; ஆறு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறி வழக்கை ஆறு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: