கொரோனா தடுப்பூசி: 100 கோடி டோஸ் என்ற மைல் கல்லை இந்தியா அடைந்தது எப்படி?

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.

தற்போது 100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை 278 நாட்களில் எட்டியுள்ளது இந்தியா. முதன்முறையாக ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில் 30 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 70.7 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்து வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு மேலும் வேகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

100 கோடி டோஸ் மைல்கல்லை சீனா கடந்த ஜூன் மாதம் கடந்திருந்த நிலையில் இந்தியா தற்போது அந்த சாதனையை அடைந்துள்ளது.

278 நாட்களில் 100 கோடி பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்றால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 36 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று பொருள். இது சராசரியாக இருந்தாலும், ஒரே சீராக தடுப்பு மருந்து வழங்கப்படவில்லை. சில நாட்களில் சராசரியை காட்டிலும் மிக அதிகமாகவும், சில நாட்களில் குறைவாகவும் வழங்கப்பட்டன.

இந்த வரலாற்று சாதனையை கொண்டாட இந்தியா முடிவு செய்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் இதுகுறித்த படம் மற்றும் பாடல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

இதுவரை இந்தியாவில் 3.6 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 லட்சத்து 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது உலகளவில் மூன்றாவது எண்ணிக்கையாகும். முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன.

தடுப்பு மருந்து இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவருக்கு இருடோஸ் தடுப்பு மருந்தை வழங்க வேண்டும் என்றால் நாள் ஒன்றுக்கு 1.2 கோடி டோஸ்கள் வழங்க வேண்டும்.

அதேபோன்று 45 வயதுக்கு மேல் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 7 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்தும் செலுத்தப்படாமல் உள்ளது என சுகாதார பொருளாதார நிபுணரான ரிஜோ எம். ஜான் பிபிசியிடம் தெரிவித்தார்.

தடுப்பூசி குறித்த தயக்கத்தை நீக்கச் செய்து அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பு மருந்தை செலுத்துவதுதான் மிகப் பெரிய சவால் என ஜான் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய பிரதமர் மோதியின் 71ஆம் பிறந்தநாளையொட்டி 2 கோடி டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன.

அக்டோபர் மாதம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 53 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

செப்டம்பர் 19 - அக்டோபர் 18 வரை இது தினசரி சராசரி 60 லட்சமாக அதிகரித்தது.

இருப்பினும் தொடக்கத்தில் இந்தியாவின் தடுப்பு மருந்து இயக்கம் மிக மெதுவாகவே செயல்பட்டது.

போக்குவரத்து பிரச்னைகள், விநியோக தடை, தடுப்பு மருந்து குறித்த தயக்கம், மோசமான இரண்டாம் அலை ஆகியவை தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கையைப் பாதித்தன.

இந்தியாவில் இலக்கை அடைய இன்னும் இரண்டே மாதங்கள்தான் உள்ளன. அதற்குள் 90 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும்.

ட்ரோன்கள் மூலம் தடுப்பூசி

இந்தியாவில் மொத்தம் 61 ஆயிரம் பொது மற்றும் தனியார் சுகாதார மையங்களில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

வட கிழக்கு மாநிலங்களில் மலைப்பகுதிகளில் ட்ரோன்களின் மூலம் தடுப்பூசிகளை கொண்டு செல்லும் திட்டமும் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளது.

அந்தமான் தீவுகளின் கிழக்கு பகுதிகளிலும் ட்ரோன்கள் மூலம் தடுப்பு மருந்தை கொண்டு செல்ல இந்தியா திட்டமிட்டுள்ளது. அங்கு நீர் வழிப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது. இந்த ட்ரோன்கள் அதிகபட்சமாக 4.5 கிலோ எடை அல்லது 900 டோஸ்களை கொண்டு செல்லும். 70 கி.மீட்டர் தூரம் வரை இது பயணிக்கக்கூடும்.

அதேபோன்று இந்தியாவின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாக 20 ஆயிரத்துக்கும் குறைவான புதிய தொற்றுகளே பதிவாகி வருகின்றன.

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், EPA

`பெண்கள் குறைவாகவே தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்`

கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவது ஒரு பக்கம் வேகமாக சென்றாலும் பெண்கள் குறைவான அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசு தகவல்படி ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் 6 சதவீதம் குறைவாகவே தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் போக்குவரத்து அற்ற பகுதிகளும், தடுப்பு மருந்து குறித்த அச்சமும் நிலைமையை மேலும் மோசாக்கியுள்ளன.

தினசரி ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ஒட்டுமொத்த விகிதத்தைப் பார்த்தால் நகரங்களிலேயே அதிகம்பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பாளராக இருந்தாலும், இங்கும் தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.

தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களிடம் போதிய ஆர்டர்களை முன்னகூட்டியே கொடுக்க மோதி அரசு தவறிவிட்டது. ஏப்ரல் மாதம் இந்தியாவை அச்சுறுத்திய மோசமான இரண்டாம் அலையால் இந்தியாவில் தடுப்பு மருந்து வேகம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பு மருந்து செலுத்த நிற்குக் கூட்டம்

பட மூலாதாரம், EPA

இந்தியாவில் என்னென்ன தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் - அஸ்ட்ராசெனீகாவின் கோவிஷீல்ட், இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கோவேக்சின் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் V ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

அதேபோன்று 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் முதல் கொரோனா தடுப்பு மருந்தையும் இந்தியா அனுமதித்துள்ளது.

தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சிலருக்கு மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுவது சகஜமான ஒன்று ஆனால் இதுகுறித்து வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மே 17ம் தேதி வரை இந்தியாவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு 23 ஆயிரம் பேருக்கு `தீங்கான பக்க விளைவுகள்` ஏற்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அதில் பல காய்ச்சல், வலி, மயக்கம், சோர்வு போன்ற அதிக ஆபத்தில்லா பக்கவிளைவுகள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அதேபோன்று தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட்ட 700 பேரை சோதித்த அரசு. ஜூன் மாதம் வரை இது போன்ற தீவிர பக்க விளைவுகளால் 488 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இருப்பினும் இந்த இறப்புகள் தடுப்பு மருந்தால் ஏற்பட்டவை என்று சொல்ல இயலாது என அரசு தெரிவிக்கிறது. அதேபோன்று தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளாமல் வரும் பாதிப்போடு ஒப்பிட்டால் இது மிக குறைந்த அளவிலான பாதிப்பே என்றும் அரசு தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :