ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகில் ஐந்தில் ஒரு பகுதி மின்கழிவுகளே மறுசுழற்சிக்கு வருகின்றன

பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து மதிப்பு மிக்க உலோகமான தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்திருக்கிறது பிரிட்டனின் அரசு நாணய ஆலை.

பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ராயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் மின்னணுக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யும் இத்தகைய தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்த இருக்கிறது.

மின்னணு கழிவுகளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவான அளவே மறு சுழற்சி செய்யப்படுவதாக மதிப்பிடப்படுகிறது.

"இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சுற்றுச் சூழல் சவால்களில் ஒன்றின் மீது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று ராயல் மின்டின் தலைமைச் செயல் அதிகாரி ஆன்னி ஜெசோப் கூறினார்.

மின்னணுக் கருவிகளின் மின்சுற்று அட்டைகளில் (circuit boards) இருந்து 99 சதவிகிதம் தங்கத்தைப் பிரித்தெடுக்க கனடாவின் தொடங்கு நிறுவனமான எக்சைருடன் ராயல் மின்ட ஒப்பந்தம் செய்திருக்கிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த உலோகங்களை மின்சுற்று அட்டைகளில் இருந்து வேதியியல் தொழில்நுட்பம் நொடிகளில் பிரித்தெடுக்கிறது என்று ராயல் மின்ட் கூறுகிறது

2021 ஆம் ஆண்டில் தூக்கி எறியப்பட்ட மின்னணு மற்றும் மின் சாதனங்கள் 5.7 கோடி டன்களுக்கு மேல் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஸ்மார்ட்போன்

பட மூலாதாரம், ROYAL SOCIETY OF CHEMISTRY

படக்குறிப்பு, ஸ்மார்ட்போன்களில் சுமார் 30 வெவ்வேறு தனிமங்கள் உள்ளன, அவற்றில் சில பூமியில் காலியாகிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சிக்கலை எதிர்கொள்ள எதுவும் செய்யவில்லை என்றால், 2030 க்குள் மின்னணு கழிவுகள் 7.4 கோடி டன்களை எட்டும். அதாவது ஒரு தசாப்தத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று ராயல் மின்ட் கூறுகிறது.

உயர் வெப்பநிலையில் உருக்குவதற்குப் பதிலாக, இந்தத் திட்டத்தின்படி ரொண்டா சினான் டாப்பில் உள்ள ராயல் மின்ட் ஆலையில் அறை வெப்பநிலையிலேயே விலைமதிப்பற்ற உலோகங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன.

ராயல் மின்ட் நாணய ஆலையில் இந்தத் தொடழில்நுட்பத்தின் தொடக்கநிலைப் பயன்பாடு மூலமாக ஏற்கெனவே 999.9 தூய்மையான தங்கம் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதே தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், பல்லேடியம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களையும் பிரித்தெடுக்க முடியும்.

மின்னணு கழிவுகளைக் குறைப்பதிலும், மதிப்புமிக்க உலோகங்களைக் மீட்பதிலும், புதிய திறன்களை வளர்ப்பதிலும் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய சாத்தியமான ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்று மின்டின் ஜெசோப் கூறினார்.

இந்த வேதியல் தொழில்நுட்பம் "புரட்சிகரமானது" என்று நாணய ஆலையின் தலைமைய வளர்ச்சி அதிகாரி ஷான் மில்லார்ட் கூறிகிறார்.

"இது ராயல் மின்ட் மற்றும் கழிவுகளே இல்லாத சுற்றுப் பொருளாதாரத்துக்கு பெரும் ஆற்றலை வழங்குகிறது. பூமியின் மதிப்புமிக்க வளங்களை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. பிரிட்டனில் புதிய திறன்களை உருவாக்குகிறது"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :