வங்கதேசத்தில் இந்து வழிபாட்டுத் தலங்கள் உடைப்பு: இந்துக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷாஹனாஸ் பர்வீன்
- பதவி, பிபிசி பங்களா, டாக்கா
டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார் மாளவிகா மஜூம்தார். அவருடைய பிறந்தவீடு ஃபெனியில் உள்ளது. புகுந்தவீடு நோவாகாலி மாவட்டத்தில் இருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் வழிபாட்டு மண்டபங்கள் மற்றும் கோவில்கள் தாக்கப்பட்ட பகுதிகளில் ஃபெனி சதர் மற்றும் நோவாகாலி செளமுஹானியும் அடங்கும்.
"என்னுடைய இருபக்கத்து உறவினர்களும் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் இரவு முழுவதும் கண்விழித்திருந்து தங்கள் வீடுகளையும் வணிக நிறுவனங்களையும் பாதுகாத்து வருகின்றனர்,"என்று மாளவிகா மஜும்தார் கூறுகிறார்.
இந்த நாட்டில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் எவ்வளவு பாதுகாப்பு உள்ளது என்ற சந்தேகம் தன் மனதில் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.
"நாட்டில் நிலையான அரசு இருக்கும்போதிலும்கூட, இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களில் திறமையானவர்கள் யாருமே நாட்டை விட்டு வெளியேற நினைத்ததில்லை. ஆனால் இப்போது அதுதான் எங்கள் முதல் கவலையாகிவிட்டது," என்கிறார் அவர்.
"நாங்கள் இங்கே எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? எதிர்காலத்தில் நாங்கள் இங்கு வாழ முடியுமா? எங்கள் அடுத்த தலைமுறை, அதாவது என் மகளுக்கு இங்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இப்போது இந்தக் கேள்விகள்தான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது," என்று மாளவிகா சொன்னார்.
வங்கதேசத்தில், கடந்த சில வருடங்களாக, இஸ்லாத்தை அவமதிப்பதாக ஃபேஸ்புக்கில் வதந்திகள் பரவியதை தொடர்ந்து இந்து சமூக மக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்கள் அனைத்தும், ஒரு கிராமம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டன.
ஆனால் இந்த முறை துர்கா பூஜையின் போது, நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் பூஜை அரங்குகள் மற்றும் கோவில்கள் மீது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நிகழ்ந்த பெரிய அளவிலான தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை, கடந்த காலங்களில் நாடு பார்த்ததில்லை.

"நவமி அன்று பிரதமர் ஆற்றிய உரைக்குப்பின்னர் அவர்களுக்கு (இந்து மத மக்கள்) நம்பிக்கை திரும்பியது. ஆனால் அவரது உரையை புறந்தள்ளி செளமுஹானியில் 15 ஆம் தேதி நடந்த சம்பவங்களுக்குப்பிறகு பிரதமரின் பேச்சையும் நம்பமுடியவில்லை. இந்த நம்பிக்கையின்மையின் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர இதுவரை கண்ணிற்குத் தெரியும்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை" என்று வங்கதேசத்தின் இந்து, பெளத்த மற்றும் கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சிலின் பொதுச் செயலர் ராணா தாஸ்குப்தா, பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்த சம்பவங்களுக்குப் பிறகு அந்த இடங்களுக்குச் சென்ற தலைவர்கள், நேர்மையான இதயத்துடன் அங்கு சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் வெளியே காட்டிக்கொள்வதற்காக மட்டுமே இதை செய்தனர் என்று மக்கள் கருதுகிறார்கள்," என்கிறார் அவர்.
அவாமி லீக் மேற்கொண்ட முயற்சிகள்
அக்டோபர் 13 துர்கா பூஜையின் போது அதாவது அஷ்டமி தினத்தன்று கொமில்லா நகரில் இருந்து தாக்குதல் தொடங்கியது. அங்கே ஒரு வழிபாட்டு மண்டபத்திலிருந்து குர்ஆன் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பூஜை மண்டபங்கள் மற்றும் கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அடுத்த நாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிப்பதாகவும், இந்து சமூகத்திற்கு பாதுகாப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார். இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை துர்கைசிலைகள் நீரில் கரைக்கப்படும் நாளன்று டாக்கா உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மோதல்கள், வழிபாட்டு அரங்குகள் மற்றும் கோவில்கள் மீது தாக்குதல்கள் ஆகியவை நடந்தன. சனிக்கிழமையும் ஃபெனியில் மோதல்கள் ஏற்பட்டன.
கடந்த மூன்று நாட்களில் இந்த சம்பவங்களில் குறைந்தது ஆறு பேர் இறந்துள்ளனர். மூன்று நாட்களில் 60 வழிபாட்டு மண்டபங்களில் தாக்குதல், நாசவேலை, கொள்ளை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன என்று. ஏக்தா பரிஷத் தெரிவிக்கிறது.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு, அவாமி லீக் பொதுச் செயலர் ஒபைதுல் காதர் ,கட்சியின் பிற தலைவர்கள் மற்றும் பல முக்கிய அமைச்சர்களும் இந்த விவகாரம் குறித்து விவாதித்தனர். அரசு மேலும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்ற அறிக்கைகளும் வெளியாயின. அவாமி லீக்கின் தலைவர்கள் சம்பவம் நடைபெற்ற பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். கட்சியின் அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற கொறடாவுமான அபு சயீத் அல் மஹ்மூத் அவர்களில் ஒருவர். இந்த முறை எழுந்துள்ள நம்பிக்கையின்மை நெருக்கடியை அகற்ற என்ன செய்யப்படுகிறது என்று அவரிடம் வினவப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
"இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் நாங்கள் அனைவரும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினோம். எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாவிட்டாலும், நாடு அவர்கள் அனைவருடனும் இருப்பதாக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது," என்று அபு சயீத் அல்-மஹ்மூத் குறிப்பிட்டார்.
"துர்கா பூஜையின் போது, பங்களாதேஷ் முழுவதும் நாங்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தோம். அனைவரும் தங்கள் மதச் சம்பிரதாயங்களை அமைதியாகப் பின்பற்ற முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் சில இடங்களில் நாங்கள் தோல்வியடைந்தோம்."என்று அவர் சொன்னார்.
தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் செயல்படாமல் இருந்ததாகவும், சில இடங்களில் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும், ஏக்தா பரிஷத் குற்றம் சாட்டுகிறது. தாக்குதல்கள் மற்றும் மோதல்களைத் தடுப்பதில் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது என்றும் அந்த அமைப்பு கூறியது.
நிர்வாகத்தின் தோல்வி குறித்து விசாரிக்கப்படும் என்றும் அதன் பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்வாகத்தின் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அபு சயீத் அல்-மஹ்மூத் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- மோப்பம் பிடிக்கும் டூத் பிரஷ் உங்கள் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்
- ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்
- குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை - யார் இவர்?
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை
- கேரளாவை உலுக்கும் கன மழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கிய தகவல்கள்
- சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








