தமிழர் தாய் சமயங்களுக்குத் திரும்ப சீமான் அழைப்பு சர்ச்சையானது ஏன்? சைவம், வைணவம்தான் தமிழர் சமயங்களா?

பட மூலாதாரம், @SeemanOfficial
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
கிறிஸ்துவம் ஐரோப்பிய சமயம், இஸ்லாம் அரேபிய சமயம். சைவமும் மாலியமும்தான் (வைணவம்) தமிழர் சமயம். செக்கு எண்ணெய்க்கு திரும்பி வருவதைப் போல தாய் சமயத்துக்கு திரும்பி வரவேண்டும் என்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது.
சைவம், வைணவம் மட்டுமல்ல, சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்று பல்வேறு சமயங்களை தமிழர்களின் பல பிரிவினர் பல்வேறு காலகட்டங்களில் தழுவியுள்ளனர்.
வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்கம், வைகுண்டரின் அய்யாவழி போன்ற மார்க்கங்களும் தமிழர்களை ஈர்த்துள்ளன. இதைத்தவிர பரவலாக இருக்கும் நாட்டார் வழிபாட்டு மரபுகள் உள்ளன.
இவற்றில் ஒன்றையோ, சிலதையோ தமிழர்களின் தாய் சமயம் என்று கூற முடியுமா?
அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன?
மரச்செக்கு எண்ணெய், கருப்பட்டி
நாம் தமிழர் கட்சியின் சார்பாக `பனை திருவிழா' நிகழ்ச்சியை கடந்த 16 ஆம் தேதி சென்னையில் சீமான் தொடங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்கள் இந்துக்களே இல்லை, அவர்களை இந்துக்கள் எனக் கூறுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்" என கூறினார். மேலும், "தமிழர்கள் தங்களின் சமயங்கள் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம், மாலியம் (வைணவம்) என்று மீண்டு வர வேண்டும்" என்றார்.
அப்போது, `கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களைப் பற்றி நீங்கள் பேசுவதில்லையே?' என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, `அவை வெளியில் இருந்து வந்த சமயங்கள்தானே. அதில் ஒன்று ஐரோப்பிய சமயம், இன்னொன்று அரேபிய சமயம்' என்றார். அத்துடன், ``மரச்செக்கு எண்ணெய்க்கும் கருப்பட்டிக்கும் மாறியதுபோல, தமிழர்கள் மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்" என்று சீமான் கூறினார்.
வலுக்கும் எதிர்ப்பு
சீமானின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளிப்பட தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எழுத்தாளர் இரா.முருகவேள், `சைவம், வைணவத்துக்கு திரும்புங்கள் என்ற சீமானின் அழைப்பு, மதத்தை சீர்திருத்தும் நோக்கம் கொஞ்சமும் இல்லாத வெற்று உரை. சீமான் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இன்று இந்து மதத்தின் அடிப்படையாக சைவமும் வைணவமும்தான் இருக்கின்றன. சைவத்திலும் வைணவத்திலும் இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார்.
`உதாரணமாக, வைதீக கோவில்கள், மடங்களின் அன்றாட பூசைகள், நிர்வாகம், பரம்பரை உரிமை எல்லாவற்றிலும் பிராமணர்கள், சைவ பிள்ளைமார்கள் ஆகியோரின் ஆதிக்கமே இருக்கிறது. தலித்துகள், பெண்கள் இதை நினைத்துப் பார்க்க முடியாத நிலையே உள்ளது. சைவத்தையும் வைணவத்தையும் சுற்றி பின்னப்பட்டுள்ள ஜோதிடமும் அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்து பஞ்சாங்கமும் சமூகத்துக்கு பெரும் சுமையாக இருக்கின்றன. சாதி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதையெல்லாம் சரிசெய்யும் முயற்சிகளை எடுக்காமல் பெயரை மட்டும் மாற்றி தாய் மதம் திரும்புங்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது,' என்கிறார் முருகவேள்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
மேலும், `எந்தப் பொறுப்புணர்வும் அக்கறையும் இல்லாமல் இப்போது உள்ள வடிவத்திலேயே பெயரை மட்டும் மாற்றி சைவத்தையும் வைணவத்தையும் பின்பற்ற வேண்டும் என சீமான் சொல்கிறார். கிறிஸ்துவம், இஸ்லாம் தவிர எண்ணற்ற தாய் தெய்வ வழிபாடுகள், பழங்குடி வழிபாடுகள் இருக்க சைவமும் வைணவமும் மட்டுமே தமிழர்களின் அடையாளம் என்பது அபாயகரமான ஒன்று. சீமானின் பார்வையில் மதுரை வீரன் வழிபாடு எந்த இடத்தை பெறும்? சீமானுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வேறு நபர்களின் கட்டுப்பாட்டில் மதம் இருக்க, அங்கே போய் சேர்ந்து கொள் என்பது விசித்திரமானது. இதுதான் இந்துத்துவம்," என பதிவிட்டுள்ளார்.
தமிழர்களின் தாய் மதம் எது?
இதையடுத்து, எழுத்தாளர் இரா.முருகவேளிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``சைவமும் வைணவமும் தமிழர் மதங்கள் என சீமான் சொல்கிறார். சைவமும் வைணவமும் இல்லாவிட்டால் இந்து மதம் என்பதே இல்லை. தேவாரம், திருவாசகம் எல்லாம் சமஸ்கிருத்தத்தில் உள்ளவற்றின் தமிழ் பதிப்புகள்தான். கைலாயம், கங்கை, திருவிளையாடல் போன்றவை எல்லாம் இந்தியா முழுக்க உள்ள பொதுவான ஒன்றுதான். எனவே, சைவமும் வைணவமும் தமிழர் மதம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது," என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், ``தமிழர் மதம் என எதுவும் சொல்லப்படவில்லை. சைவம், வைணவம் ஆகியவற்றில் தமிழர், தெலுங்கர், வங்காளிகள் தொடங்கி பலர் இருக்கின்றனர். இந்து மதத்தையே இன்னொரு வடிவில் தமிழர் மதம் என சீமான் சொல்கிறார். அடுத்ததாக, `தமிழர் மதம்' என புதிதாக ஒரு வழிபாட்டு முறையை இவர்கள் சொல்லவில்லை. ஏற்கெனவே உள்ள தஞ்சை பெரிய கோவில், வடபழனி முருகன் கோவில் ஆகியவற்றையும் அதன் நிர்வாக முறைகளையும் அர்ச்சகர், பண்டாரம், சமஸ்கிருதம் ஆகியவற்றையும் அப்படியே வைத்துவிட்டு, `இது தமிழர் மதம்' என்பதை மட்டும் ஏற்க வேண்டும் என்கின்றனர். இது அபத்தமானது," என்கிறார்.
``அப்படியானால், தமிழர்களுக்கான தாய் மதம் எது?" என்றோம். `` அப்படியெல்லாம் எதுவும் இல்லை. தமிழர்களில் சைவர், வைணவர், பைளத்தர்கள், சமணர்கள், நாட்டார் தெய்வங்களை வழிபடுகிறவர்கள், தாய் வழிபாடு, மதத்தை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் எனப் பலர் இருந்துள்ளனர். அதனால் தமிழர்களுக்கு ஒரு மதம், இரு மதங்கள் என்ற அடையாளம் எதுவும் கிடையாது. இவர்கள் சொல்லும் சைவத்தையும் வைணவத்தையும் பின்பற்றியவர்கள் 20 சதவிகிதம் பேர்தான் இருந்தனர். மற்றவர்கள் எல்லாம் மாரியம்மன் உள்பட தாய் தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். அப்படியானால், கோவிலுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படாதவர்கள் எல்லாம் யார்?
நாட்டார் தெய்வங்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் மதுரை வீரன் கோவிலில் சீமான், தனது மகனுக்கு காது குத்தும் நிகழ்வை நடத்தியிருக்கலாமே? தேவாரம், திருவாசகத்துக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை மதுரை வீரன் கதைப் பாடலுக்கு இவர் எங்காவது கொடுத்துள்ளாரா? இவர்கள் பேசுவது வைதீக மதம். `முப்பாட்டன் முருகன்', `பெரும்பாட்டன் சிவன்' என்றுதான் பேசி வருகிறார். சீமான் பேசுவது இந்துத்துவ அரசியல்தான்" என்கிறார்.
இந்து என்பதற்கான அடையாளம் இல்லை

பட மூலாதாரம், @NaamTamilarOrg
"சீமான் மேற்கொள்ளும் பணிகள் எல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. பூனைக் குட்டி இப்போதுதான் வெளியே வந்து கொண்டிருக்கிறது. "தமிழர்கள் எல்லாம் இந்துக்களாகத்தான் இருக்க முடியும். இந்துக்கள்தான் தமிழர்களாக இருக்க முடியும்' என்ற கருத்து அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது. கீழடி உள்பட அகழ்வாராய்ச்சி நடக்கக் கூடிய இடங்களில் எல்லாம் சாமி சிலைகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. தமிழர்கள், இந்துக்களாக இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்கிறார், பச்சைத் தமிழகம் அமைப்பின் நிறுவனர் சுப.உதயகுமார்.
தொடர்ந்து பேசியவர், "தமிழர்கள், முன்னோர்களையும் காவல் தெய்வங்களையும் வணங்கி வந்தனர். அந்த வழிபாடு இன்றளவும் நடக்கிறது. இது முழுக்க மக்களின் அரசியலை மடைமாற்றும் வேலையாகத்தான் பார்க்கிறேன். அடிப்படையில், ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவராக சீமான் இருக்கிறார். இவரது தந்தையின் பெயர் செபாஸ்டியன். இவரது பெயர் சைமன்.
இவரின் வீட்டு முற்றத்திலேயே லூர்து மாதா சிலை உள்ளது. நான் நேரடியாக சென்று பார்த்திருக்கிறேன். கிறிஸ்துவ மதத்தில் இருந்து இவர் மாறியுள்ளதைப் பார்க்கிறேன். இவரைப் பற்றிய மத அடையாளமே கேள்விக்குள்ளாக இருக்கும்போது யாரை மகிழ்ச்சிப்படுத்த இவ்வாறு பேசுகிறார் எனத் தெரியவில்லை. அடையாள அரசியலை பேசிவிட்டு அடிப்படை அரசியலை காலி செய்வது என வலதுசாரி அரசியலை முன்னெடுக்கிறார்," என்கிறார்.
திரிக்கப்பட்டதா சீமானின் கருத்து?

பட மூலாதாரம், Idumbavanam Karthik
"சீமானின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதே?" என நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் கேட்டோம்.
"சீமானின் பேச்சை தெளிவுபடுத்த விரும்புகிறேன், செய்தியாளர் சந்திப்பில், தமிழ் இந்து என்ற கேள்வி எழுப்பப்பட்டது. `அந்தக் கருத்தில் எங்களுக்கும் ஐயா மணியரசனுக்கும் முரண்பாடு உள்ளது, அவர் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை' என்றார். மேலும், `தமிழர்கள் இந்துக்களே இல்லை என்பதுதான் எங்களின் கோட்பாடு. வில்லியம் ஜோன்ஸ் என்ற வெள்ளைக்காரர் போட்ட கையொப்பத்தின்படிதான் நாங்கள் இந்துக்களாக ஆக்கப்பட்டோம். வரலாற்றின்படி, நாங்கள் இந்துக்கள் இல்லை' என்பதை விளக்கினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் இடைமறித்துக் கேள்வி எழுப்பியபோது, `இஸ்லாம், கிறிஸ்துவம் என்பது தமிழர் சமயங்களே இல்லை, ஒன்று அரேபிய சமயம், இன்னொன்று ஐரோப்பிய சமயம்' என்று குறிப்பிட்டார். அதன் பொருள், `இஸ்லாம், கிறிஸ்துவ சமயங்களை தமிழர்கள் பின்பற்றக்கூடாது என்பதல்ல. இந்து மதம் குறித்தான கேள்விகள் அம்மதங்களுக்கு பொருந்தாது' என்பதாகும்.
இதனைக் கூறிவிட்டு முந்தைய கேள்விக்கான பதிலின் தொடர்ச்சியாக, `சைவத்தையும், வைணவத்தையும் தழுவிக்கொள்ள வேண்டும் எனக்கூறுவது இந்து மதத்தை தழுவியுள்ளவர்களைத்தானே தவிர, இஸ்லாம், கிறிஸ்துவத்தை தழுவியுள்ளவர்களை அல்ல. சீமான் கூறியது தவறாகத் திரித்துப் பரப்பப்படுகிறது" என்றார் இடும்பாவனம் கார்த்தி.
தொடர்ந்து பேசியவர், ``முதன்முதலாக நடந்த மதமாற்றம் என்பது தமிழர்களை இந்துக்களாக மாற்றியதுதான். ஆகவே, தமிழர்களின் சமயங்களான சைவத்துக்கும் மாலியம் எனக் கூறப்படும் வைணவத்துக்கும் இந்து மதத்திலிருந்து திரும்ப வேண்டும் என்கிறோம். இந்தக் கருத்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை தாய் மதத்துக்குத் திரும்புமாறு கூறியதாக திரிக்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளராக பெஞ்சமின் என்பவர் இருக்கிறார். அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராகவே இயக்கப்பணியில் தொடர்கிறார். அதேபோல, வீரத்தமிழர் முன்னணியின் மற்ற பொறுப்பாளர்களாக உள்ள அலாவுதீன், நூர்ஜகான் போன்றோரும் இஸ்லாமிய மதத்தை தழுவிக்கொண்டேதான் அப்பொறுப்பில் இருக்கிறார்கள்.
சீமான் அறிவித்தது ஏன்?
அவர்கள் சைவத்துக்கும் மாலியத்துக்கும் மாறவுமில்லை. அவர்களை யாரும் மாறச் சொல்லவும் இல்லை. இந்து மதம் என்பது வருணாசிரமக் கொள்கைகளைக் கொண்டதாக இருக்கிறது. அதற்கு மாற்று மதமாகத்தான், தமிழர் சமயங்களை முன்வைக்கிறோம். தெய்வத்தின் குரலில், `நாங்கள் இந்துக்கள் என்று கூறியதால் தப்பித்தோம்' என்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார். இந்த ஆரிய சதியைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான், கர்நாடகத்தில் லிங்காயத்துகள் அறிவித்ததுபோல இந்துக்கள் இல்லையெனும் பரப்புரையை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது" என்றார் இடும்பாவனம் கார்த்தி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"தமிழர்களை இந்துக்கள் எனக்கூறி, ஒட்டுமொத்த மக்களையும் ஆரியம் அபகரித்துக்கொண்டது. ஆரிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க மத நம்பிக்கை கொண்டவர்களுக்காக, இந்து மதத்திற்கு மாற்றாக சைவம், மாலியம் எனும் தமிழர் சமயங்களை முன்வைக்கிறோம். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். சீக்கியர்களுக்கென ஒரு மதம் இருப்பதைப் போல, தமிழர்களுக்கென இருந்த சமயங்களை மீட்டுருவாக்கம் செய்கிறோம்.
இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அவர்கள் மதத்திலேயே தொடரலாம். இது அவர்களுக்குப் பொருந்தாது. எல்லோரையும் இந்துக்கள் எனக்கூறி, தங்களோடு இணைத்துக்கொண்டு இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களையும் பகையாளிகளாகக் காட்ட முனையும் இந்துத்துவத்தை பலவீனப்படுத்தவே இந்துக்கள் இல்லையெனும் அறிவிப்பை செய்கிறோம். இந்து மதத்திலிருந்து சைவத்துக்கும் மாலியத்துக்கும் திரும்பக் கோருகிறோம்" என்று இடும்பாவனம் கார்த்தி கூறினார்.
இந்தியச் சட்டப்படி இந்துதான்
இதையடுத்து, ``சைவத்திலும் வைணவத்திலும் ஏராளமான பிரச்னைகள் இருக்கும்போது, பெயரை மட்டும் மாற்றிவிட்டு தாய் மதத்துக்கு திரும்புங்கள் எனக் கூறுவது சரியல்ல என்கிறார்களே?" என்றோம்.
அதற்கு இடும்பாவனம் கார்த்தி, ` இஸ்லாமியர், கிறிஸ்துவர் அல்லாதவர்களை இந்து என்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வந்துவிட்டனர். நான் பௌத்த மதத்தைத் தழுவுகிறேன் என அம்பேத்கர் கூறினாலும் அதுவும் இந்தியச் சட்டப்படி இந்துதான். மத மறுப்பாளரும், கடவுள் மறுப்பாளரும் சட்டப்படி இங்கு இந்துதான். தான் விரும்பாவிட்டாலும் இந்து என்ற சொல் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள்தான் என்ற வேர் ஊன்றப்பட்டிருப்பதால் அதனை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் பேசும்போது, `மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் எனப் பதிவு செய்யக் கூடாது' என்றார். `கம்பராமாயணமும் பெரியபுராணமும் சைவர்களையும் வைணவர்களையும் இந்துக்களாக மடைமாற்றம் செய்கின்றன, தமிழர்கள் இந்துக்களே அல்ல' என அண்ணா பதிவு செய்கிறார். ஆனால், 90 சதவிகிதம் இந்துக்களைக் கொண்ட கட்சி என தங்களைப் பதிவுசெய்கிறது திமுக.
'திராவிட நாட்டில் இந்துக்களுக்கு என்ன வேலை? சமத்துவத்தை விரும்புபவன் எப்படி தன்னை இந்து என கூறிக்கொள்வான்?' என அண்ணா கேட்டார். இன்றைக்கு அவரது கட்சியிலே பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கிறார்கள் என பேசுகின்றனர்" என்றார்.
கண்ணன், முருகனை மீட்கும் முயற்சி

பட மூலாதாரம், @NaamTamilarOrg
"நாட்டார் தெய்வங்கள் என சில வழிபாட்டு முறைகள் இருக்கும்போது `தமிழர் சமயம்' என தனியாக ஒன்றைக் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?" என்றோம்.
``மூத்தோர் வழிபாடு, இயற்கை வழிபாடு என்பது ஆதித் தொன்ம வழிபாடு. நடுகல் வழிபாடு போன்றவை அதில் வருகின்றன. சைவம், வைணவம் போன்ற தமிழர் சமயங்களை, இதுதான் தாய் மதம் என நாங்கள் கூறவில்லை. இந்து என்ற கட்டமைப்பை உடைக்க வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டார் வழிபாட்டை கையில் எடுக்காத ஆரியம், முருகன், கண்ணன், வருணன், இந்திரன், கொற்றவை போன்றோரைக் கையில் எடுத்துக்கொண்டது. மராட்டிய சிவாஜியை, இந்துத்துவவாதி இல்லை எனக்கூறி எவ்வாறு கோவிந்த பன்சாரே மீட்க முயன்றாரோ, அதேபோல,கண்ணன், முருகன் போன்றோரை மீட்க வேண்டிய பெரும்பணி உள்ளது.
இதில் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் அவர்களின் வழிபாட்டுக்கான ஜனநாயக உரிமையை 100 சதவிகிதம் நாம் தமிழர் கட்சி உறுதிசெய்து வருகிறது. இந்து என்ற சொல்லை மடைமாற்றுவதற்கு வேறு ஒரு பெயர் தேவைப்படுகிறது. இந்து என்பது ஆரியத்துக்குத்தான் வலிமைசேர்க்கும் என்பதை வலியுறுத்துகிறோம்.
சைவம், வைணவம் மட்டுமில்லாமல் இஸ்லாம், கிறிஸ்துவ மதத்துக்குக்கூட தமிழர்கள் திரும்பலாம். அதேநேரம், இந்து என்ற அடையாளம் வேண்டாம் என்கிறோம். அந்த மதமே தீண்டாமையின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறியது போல, `இந்து என்பது ஆரிய மாயை. அதிலிருந்து உளவியல் விடுதலை வேண்டும்' என்கிறார். அதனைத்தான் நாங்கள் கோருகிறோம்" என்று கூறினார் இடும்பாவனம் கார்த்தி.
"சைவம், வைணவம்தான் அடையாளம் என்றால் மதுரை வீரன் வழிபாட்டை சீமான் எப்படிப் பார்க்கிறார் என்கிறார்களே?" என்றோம்.
"இறந்து போன முன்னோர்கள், எங்களின் தெய்வம். இந்து என்கிற அடையாளம் வேண்டாம் என்பதுதான் கூறுகிறோம். ஆரியத்தால் திருடி சிதைக்கப்பட்ட தமிழர் சமயங்களை மீட்டுருவாக்கம் செய்து, இந்து எனும் அடையாளத்திற்குள் தமிழர்கள் கரைந்துபோகாது தடுக்க சைவத்துக்கும் மாலியத்துக்கும் மடைமாற்றம் செய்கிறோம். இது இந்து மதத்திற்கு மாற்றாக எதிர்ப்புரட்சி மூலம் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களைத் தழுவி நிற்போருக்குப் பொருந்தாது. ஆனால், அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பது போல தி.மு.கவினர் கருத்துருவாக்கம் செய்வது இழிவான அரசியலாகத்தான் பார்க்கிறேன்" என்கிறார்.
பிற செய்திகள்:
- கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்?
- பூடான்: தொலைந்த வரலாறை தேடும் 'சந்தோஷ சாம்ராஜ்ஜியம்'
- தென் கொரியாவின் சுயமுகத்தை காட்டும் ஸ்க்விட் கேமின் ஆறு பகுதிகள்
- கேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
- ரஷ்யாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை கடந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












