கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்?

நீர் யானைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீர் யானைகள்

காட்டு விலங்கினங்கள் பல அழியும் நிலைக்குச் செல்வதும், அவற்றை மீட்க அரசுகளும், வனத்துறைகளும் திட்டமிடுவதும் கேள்விப்பட்ட செய்தி.

ஆனால், ஒரு வகை நீர் யானைகளுக்கு கொலம்பிய அரசு கருத்தடை செய்துகொண்டிருக்கிறது. அது ஏன்? அவற்றுக்கு ஏன் போதை மருந்தின் பெயரால் கோக்கைன் நீர் யானைகள் (கோக்கைன் ஹிப்போ) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?

கொலம்பியாவைச் சேர்ந்த பாப்லோ எஸ்கோபார் என்பவர் உலக அளவில் பிரபல போதை மருந்து கடத்தல் வியாபாரியாகவும், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவராகவும் அறியப்படுகிறார். அவர் கடந்த 1993ஆம் ஆண்டு காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாப்லோ ஏகோபார் சட்ட விரோதமாக பல விலங்கினங்களை இறக்குமதி செய்து வளர்த்து வந்தார், அதில் ஓர் ஆண், ஒரு பெண் நீர் யானைகளும் அடக்கம். அவைதான் கொக்கைன் ஹிப்போ என்று அழைக்கப்படுகின்றன.

அந்த நீர் யானைகள் இனப்பெருக்கம் செய்து அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது 80 நீர் யானைகள் உள்ளன.

அவற்றில் 24-க்கு வேதிப் பொருள் மூலம் கருத்தடை செய்துள்ளது கொலம்பிய அரசு.

இந்த நீர் யானைகள் ஆப்பிரிக்காவுக்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய நீர் யானைக் கூட்டம் என்றும், இது கொலம்பியாவில் இருக்கும் உள்ளூர் தாவரங்களை அழிப்பதாகவும் கொலம்பியாவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பலரும் இந்த நீர்யானைகள் கொல்லப்பட வேண்டும் அல்லது கருத்தடை செய்யப்பட வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நீர் யானைகள்

பட மூலாதாரம், RAUL ARBOLEDA/GETTY IMAGES

படக்குறிப்பு, நீர் யானைகள்

1993ஆம் ஆண்டு பாப்லோ கொல்லப்பட்ட பின், ஹசிண்டே நெபொலெஸ் (Hacienda Nápoles) என்கிற அவரது சொகுசு எஸ்டேட்டில் இருந்த விலங்கினங்கள், பல விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்கப்பட்டன.

ஆனால் அங்கிருந்த நீர்யானைகள் எந்த பூங்காவுக்கும் வழங்கப்படவில்லை.

"நீர்யானைகளை போக்குவரத்து செய்வது மிகவும் சிரமமாக இருந்தது, எனவே அதிகாரிகள், அவ்விலங்கினத்தை அங்கேயே விட்டுச் சென்றனர். காலப் போக்கில் அதுவே இறந்துவிடும் என கருதினர்." என கொலம்பியாவின் உயிரியல் நிபுணர் நடலெ கெஸ்டெல்ப்லான்கோ இவ்வாண்டின் தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார்.

நீர் யானைகளை வேட்டையாட தென் அமெரிக்காவில் எந்த ஒரு உயிரினமும் இல்லாததால், அதன் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு பிரச்சனை தீரவில்லை, அந்நாட்டின் முக்கிய நீர்வழியான மக்டலெனா ஆறு மூலம் நீர்யானைகள், கொலம்பியாவின் பல பகுதிகளுக்கும் பரவத் தொடங்கின என்கின்றனர் நிபுணர்கள்.

நீர் யானைகள் உள்ளூரில் இருக்கும் சூழலியலை பல விதத்தில் பாதிக்கலாம் என நீர் யானைகளைக் குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உதாரணமாக அழிவின் விளிம்பில் இருக்கும் மனாடீ (Manatee) என்கிற விலங்கினம் இடம்பெயர்வது தொடங்கி, கொலம்பியாவின் நீர்வழித்தடங்களின் வேதிப் பண்பு மாறுவது, அதனால் மீன் இனங்கள் பாதிக்கப்படுவது வரை பல பிரச்சனைகளை பட்டியலிடுகின்றனர். நீர் யானைகள் குறித்த மற்ற சில ஆராய்ச்சிகளில், அவை சூழலுக்கு உதவலாம் எனவும் கூறுகின்றன.

பாப்லோ எஸ்கோபார் 1980களில் மெடெலின் என்கிற போதை மருந்து கும்பலை உருவாக்கினார். பல்வேறு கடத்தல், குண்டு வெடிப்பு சம்பவங்கள், கொலைகளில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் அவர் கருதப்பட்டார். கொலம்பியாவில் பயங்கரமான குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படுகிறார் பாப்லோ எஸ்கோபார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :