சூரிய குடும்பத்தின் நதி மூலம் என்ன? வியாழன் அருகே ஆராய்ச்சி செய்யப் புறப்பட்ட நாசா விண்கலம் லூசி

பட மூலாதாரம், NASA/SwRI
- எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
- பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி.
மனித குலத்தின் நதிமூலத்தை அறியவும், புவியில் தொல் பழங்காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் பற்றி அறியவும் எப்போதாவது மண்ணைத் தோண்டும்போது கிடைக்கும் புதைபடிவங்கள் பெரிய அளவு உதவி செய்துள்ளன.
அதைப் போல சூரியக் குடும்பத்தின் பிறப்பு ரகசியத்தை அறிய உதவி செய்யும் புதைபடிவங்கள் என்று கருதப்படும் விண்கல் கூட்டத்தை ஆராய வியாழன் கோள் நோக்கி சனிக்கிழமை கிளம்பியது நாசாவின் லூசி விண்கலம்.
இந்த லூசி என்ற பெயரிலேயே ஒரு சுவாரசியமான கதை உள்ளது.
ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மனிதப் புதை படிவத்துக்கு லூசி என்று பெயர் வைத்தார்கள்.
இந்த லூசியை ஆராய்ந்தபோதுதான், நமது மனித இனமாகிய ஹோமோ சேபியன்ஸ் எப்படி தோன்றியது என்பது பற்றிய ஆராய்ச்சிக்கு பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன.
அதைப் போல சூரியக் குடும்பத்தின் தோற்றத்தின் ரகசியத்தை கண்டறியும் என்பதற்காகவே வியாழனை நோக்கி கிளம்பும் விண்கலத்துக்கு லூசி என்று பெயர் சூட்டியது நாசா.
வியாழன் என்னும் தலைவரை சூழ்ந்த தொண்டர்கள்
சரி, ஆதி மனிதர்களின் புதைபடிவம் அரிதாக மண்ணில் இருந்து கிடைக்கும். அதை வைத்து அவர்கள் தோற்றத்தை ஆராயலாம். சூரிய குடும்பத்தின் தோற்றத்தை ஆராய்வதற்கு எங்கே புதைபடிவம் கிடைக்கும்? அதைத் தேடுவதற்கு வியாழன் வரை ஏன் போகவேண்டும்?
செல்வாக்குள்ள அரசியல் தலைவர்கள் வந்தால் அவர்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் சூழ்ந்து வருவார்கள்தானே. அதைப் போல சூரியனை சுற்றிவரும் வியாழனுக்கு முன்னும் பின்னும் ஒரு பெரும் கூட்டமாக விண் கற்ககள் வலம் வருகின்றன.
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உள்ள குகையிலே அண்டோரப் பட்சியின் வயிற்றிலே இருக்கிறது அரக்கனின் உயிர் என்று பழங்கால கதைகளில் சொல்வார்கள் இல்லையா.
அதைப் போல, வியாழனைச் சூழ்ந்து பயணிக்கும் இந்த விண்கல் கூட்டத்திலே சூரியக் குடும்பத்தின் பிறப்பு, பரிணாமம் ஆகியவற்றுக்கான ரகசியம் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
குயவர்கள் பானை செய்யும்போது மீந்த மண் கட்டிகள் போல, கோள்கள் உருவானபோது மீந்தவையே இந்த விண் கற்கள் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
டிராஜன்கள் என்று அழைக்கப்படும் இந்த விண்கற்களை ஆராயவே ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவரல் விண்வெளி நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இந்திய நேரப்படி சுமார் 3 மணிக்கு புறப்பட்டது லூசியின் பயணம்.

பட மூலாதாரம், Jason Kuffer CC
இந்த ஆராய்ச்சிக்காக 12 ஆண்டுகளுக்கு, 98.1 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப கட்டமாக ஒதுக்கியுள்ளது நாசா. இந்த கால கட்டத்தில் ஏழு ட்ராஜன் விண்கற்களை லூசி ஆராயும்.
"இந்த டிராஜன் விண்கற்கள் வியாழனை 60 டிகிரி கோணத்தில் முன்னும் பின்னுமாக சூழ்ந்து பயணிக்கின்றன," என்று விளக்குகிறார் லூசி விண்கலத்தின் முதன்மை ஆய்வாளர் ஹால் லெவிசன். கொலரோடா, பௌல்டரில் உள்ள சௌத்வெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்தவர் இவர்.
"வியாழன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையும் இந்த விண்கற்கள் மீது செயல்படுவதால் அவை அதே இடத்தில் உள்ளன. சூரியக் குடும்பம் பிறந்த காலத்தில் அந்த இடத்தில் ஒரு பொருளை நீங்கள் விட்டிருந்தால் அது அங்கேயே இருந்திருக்கும். எனவே, கோள்கள் எதில் இருந்து பிறந்தனவோ அவற்றின் புதைபடிவம்தான் இந்த விண்கற்கள்," என்று செய்தியாளர்களிடம் கூறினார் அவர்.
ஒரு மாநகரம் அளவுக்கு அல்லது அதைவிடப் பெரியதான இந்த விண்கற்களின் வடிவம், கட்டமைப்பு, மேற்பரப்புக் கூறுகள், வெப்பநிலை, இவை எதனால் ஆனவை என்ற விவரங்களை தன் கருவிகளைக் கொண்டு லூசி ஆராயும்.
வாயுக் கோளான வியாழனை சுற்றிவரும் நிலவு என்னவிதமான பொருள்களால் ஆனதோ அதே விதமான பொருள்களால் இந்த ட்ராஜன் விண்கற்களும் ஆனவை என்றால் சூரியனில் இருந்து வியாழன் உருவான அதே தூரத்தில்தான் இவையும் உருவாகியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால், அப்படி இருக்காது என்பதுதான் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.

பட மூலாதாரம், Nasa/Glenn Benson
"ஒரு வேளை வியாழனுக்கு அப்பால் உள்ள குய்பெர் பெல்ட் (Kuiper Belt) என்று அறியப்படும் பகுதியில் காணப்படுவது போன்ற பொருள்களால் அந்த விண்கற்கள் ஆகியிருக்குமானால், அவை அந்தப் பகுதியில் உருவாகி பின்னர் ஒரு ஈர்ப்பால் வியாழன் அருகே வந்திருக்கலாம்" என்று சௌத்வெஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த இந்த ஆராய்ச்சிப் பயணத்துக்கான விஞ்ஞானி டாக்டர் கார்லி ஹோவெட் கூறுகிறார்.
600 கோடி கி.மீ. பயணம் எதற்காக?
"இந்த ஆய்வுப் பயணம் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மாதிரிகளைப் பரிசோதிக்க உதவும். சூரியக் குடும்பத்தின் வரலாற்றின் தொடக்க காலத்தில் பல பொருள்கள் முன்னும் பின்னும் கீழும் மேலும் கலப்பது நடந்திருக்கலாம் என்று கருத்தியல் ரீதியாக நாம் நினைக்கிறோம். சில பொருள்கள் தூக்கி வீசப்பட்டிருக்கலாம். சில பொருள்கள் ஈர்க்கப்பட்டிருக்கலாம். இதைப் பற்றி ஆராய இந்தப் பயணம் உதவும்" என்று பிபிசி நியூசிடம் அவர் தெரிவித்தார்.

வியாழனுக்கு முன்பாக செல்லும் 2027/28 என்ற டிராஜன் கூட்டதையும், பிறகு 2033 என்ற வியாழனை பின் தொடர்ந்து செல்லும் டிராஜன் கூட்டத்தையும் சனிக்கிழமை ஏவப்பட்ட விண்கலன் ஆராயும். மொத்தத்தில் லூசி மேற்கொள்ள இருப்பது 600 கோடி கிலோ மீட்டர் பயணம்.
இந்த விண்கலம் நல்லவிதமாக இருக்கும்வரை விண்கல் கூட்டத்தில் உள்ளே புகுந்து புகுந்து பயணிக்கும் பேட்ரோகிளஸ், மெனிடியஸ் ஆகிய விண்கற்களை கடைசியாக ஆராய்ந்த பிறகு மேலும் அதிக ட்ராஜன் விண்கற்களை ஆராயும் வகையில் இந்தப் பயணத்தை நீடிக்கும்படி நாசாவை கேட்கப் போவதாக கைநெட் எக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கொராலி ஆடம் கூறுகிறார். இந்த நிறுவனம்தான் இந்த திட்டத்துக்கு பயண வழிகாட்டல்களை வழங்குகிறது.
விண்கல் கூட்டத்தில் இருந்து வெளியே வரும்போது ட்ராஜன் அல்லாத வேறு வகை விண்கல் ஒன்றையும் இந்த லூசி விண்கலம் ஆராயும். இந்த விண்கல்லுக்கு டொனால்டு ஜான்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது. 1974ம் ஆண்டு எத்தியோப்பியாவில் மனித புதைபடிவம் ஒன்றை கண்டுபிடித்த தொல் மானுடவியல் ஆய்வாளரின் பெயர் இது.
82 வாட் மின்சாரம் போதும்
"லூசியின் இருபுறமும் இறக்கை போல உள்ள, 7 மீட்டர் விட்டம் கொண்ட சோலார் பேனல்கள் மூலம் லூசிக்கு தேவையான மின்சாரம் உற்பத்தியாகும். புவிக்கு அருகே இருக்கும்போது இது 18 ஆயிரம் வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஆனால், ட்ராஜன் விண்கற்களுக்கு நடுவே லூசியை இயக்கும்போது இந்த பேனல்களால் வெறும் 500 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சில பல்புகளை மட்டுமே இது போதுமானது. ஆனால், லூசியின் கருவிகளை இயக்க 82 வாட் மின்சாரமே போதும்," என்கிறார் விண்கலத்தை உற்பத்தி செய்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தைச் சேர்ந்த கேட்டி ஓக்மென்.
பிற செய்திகள்:
- அனிருத் பிறந்தநாள்: வெற்றி முதல் சர்ச்சைகள் வரை - சுவாரஸ்ய தகவல்கள்
- உலக நாடுகளின் பட்டினிப் பட்டியல்: பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியா
- உணவு விலையேற்றத்துக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டுமா?
- IPL 2021: சொன்னதை செய்த தோனி; 40 வயதிலும் கோப்பையை வசமாக்கிய கேப்டன் கூல்
- சிரிய பெண்ணுக்கு உலகின் சிறந்த மேயர் விருது - என்ன செய்தார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












