ஸ்க்விட் கேம்: தென் கொரியாவின் சுயமுகத்தை வெளிப்படுத்தும் நெட்பிளிக்ஸ் சீரிஸ்

பட மூலாதாரம், Netflix
- எழுதியவர், ஃபெர்னாண்டோ டுவார்டே
- பதவி, பிபிசி
தென் கொரியாவின் தொடரான ஸ்க்விட் கேம், அக்டோபர் மாதத் தொடக்கத்தில் 90 நாடுகளில் மிக அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட தொடராகியுள்ளது. அந்த ஆசிய நாட்டில் நிலவும் சிக்கலான சமூக அவலங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது இதன் வெற்றியாகும்.
கதையில் உள்ள மர்மங்களைக் கடந்து, இத்தொடர், தென் கொரியாவில் நிலவும் மக்கள் பிரச்சனைகளையும் உயிரைப் பணயம் வைத்து, தங்கள் வாழ்வையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு தொகையைப் பரிசாகப் பெறத் துணியும் மக்களின் நிலையைப் படம் பிடிக்கிறது.
2020 ஆம் ஆண்டில், ஆங்கிலமல்லாத மொழியின் சிறந்த திரைப்படமாக ஆஸ்கர் விருது பெற்ற பேராசைட் திரைப்படத்தை அடியொற்றி எடுக்கப்பட்டுள்ளது இந்தத் தொடர். சியோலில், நேரெதிர் சூழலில் உள்ள இரண்டு குடும்பங்களின் கதைகளைக் கூறும் இந்த பேரசைட் திரைப்படம் சிறந்த இயக்குநர் உள்ளிட்ட ஐந்து ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது.
தென் கொரியாவின் சமூகச் சிக்கல்கள் வெளி நாட்டினருக்குத் தெரியாமல் இருந்த நிலையை மாற்றி, அவற்றை வெளிப்படுத்தியிருக்கிறது இத்தொடர்.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில ப்ளாட் ஸ்பாய்லர்கள் உள்ளன
பெண்களுக்கு எதிரான கருத்து

பட மூலாதாரம், Getty Images
உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளியின் 2021 பதிப்பின்படி, அதிக பாலின சமத்துவம் உள்ள நாடுகளின் பட்டியலில் தென்கொரியா 102 என்கிற மோசமில்லாத ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்க்விட் கேம், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கு பெண்களின் பொருத்தத்தைப் பற்றிய விவாதங்கள் மூலம் இந்தக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. முதலீட்டு வங்கியாளரான சோ சாங்-வூ, பெண் பங்கேற்பாளர்கள் குழுப் பணிகளில் பங்கேற்பதைத் தடுக்கப் பல முறை முயற்சிக்கிறார்.
ஆனால், பெண் கதாபாத்திரங்கள் இந்தத் தொடரில் அமைக்கப்பட்டிருப்பது விமரிசனத்துக்குள்ளானது.
குறிப்பாக, மி-நியோ என்ற பெண் கதாபாத்திரம், ஒரு ரவுடியான டியோக்-சு-வின் அணியில் சேர, அவனுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதாகக் காட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஸ்க்விட் கேம் எழுத்தாளரும் இயக்குநருமான ஹ்வாங் டோங்-ஹியூக் சமூக ஊடகங்களில் எழுந்துள்ள இந்த விமரிசனங்களை மறுத்துள்ளார். தினசரி கொரிய செய்தித்தாளான ஹான்கூக் இல்போவுக்கு அளித்த பேட்டியில், அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், "மோசமான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் போது" கதாபாத்திரங்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்ற கற்பனையே இது என்றும் கூறியுள்ளார்.
வடகொரியாவில் இருந்து தப்பி வந்தவர்களின் நிலை

பட மூலாதாரம், Netflix
ஸ்க்விட் கேம் வட கொரியாவிலிருந்து ஓடி வந்தவர்களின் பிரச்சனையையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தொடரில், போட்டியாளர் சே-பியோக் (மாடல் ஜங் ஹோ-யியோன் நடித்தார்) அண்டை நாட்டின் அடக்குமுறை ஆட்சியில் இருந்து தப்பும் போது பிரிந்த தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க, பணம் வெல்லும் என்கிற நம்பிக்கையில் இந்தக் குழுவில் இணைகிறார்.
பெருந்தொற்றுக்கு முன், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட கொரியர்கள் தென் கொரியாவில் தஞ்சம் அடைந்தனர். சியோலில் பல மீள்குடியேற்றத் திட்டங்கள் மற்றும் நன்மைகள் இருந்தாலும், இவர்கள் தவறாக நடத்தப்படுவது, பாகுபாடு மற்றும் சந்தேகப் பார்வை போன்ற சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.
ஸ்க்விட் கேம் அதன் சில அம்சங்களைக் காட்டுகிறது, இதில் கொரிய மொழி பேசாதவர்கள் தவிர்க்கப் படுவதாகக் காட்சி உள்ளது. சே-பியோக் தனது அசல் உச்சரிப்பை மறைத்து வழக்கமான சியோல் பேச்சுவழக்கில் பேசுவது போன்ற காட்சி, நிஜ வாழ்க்கையில் பல அகதிகளின் நிலையைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
அந்தப் பெண், அனாதை விடுதியில் இருக்கும் தனது தம்பியிடம் பேசும் போது மட்டுமே தனது சுய பேச்சு வழக்கில் பேசுகிறார்.
வறுமை

பட மூலாதாரம், Getty Images
தென் கொரியாவில் வறுமையைப் பற்றி விவாதிக்கும்படி கோரினால் யாருக்கும் வியப்பு ஏற்படுவது இயல்பே. இந்த ஆசிய நாடு ஐக்கிய நாடுகள் மனித மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையில் 23 வது இடத்தைப் பெற்று, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினை விடச் சிறந்த நிலையில் உள்ளது.
ஆனால் நிகழ்ச்சியின் முக்கிய கதாபாத்திரமான ஜி-ஹுன் டிராகன் மோட்டார்ஸால் பணிநீக்கம் செய்யப்பட்டு, இரண்டு முறை வர்த்தகத்தில் தோல்வியுற்று, அவரது நோய்வாய்ப்பட்ட தாயுடன் வாழ்கிறார் என்றும் தனது மகளுக்கு ஒரு நல்ல பிறந்தநாள் பரிசு வாங்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறார் என்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வறுமையிலிருந்து மீள முடியாத தோல்வியடைந்த ஒரு தொழிலாளராக அவர் சித்தரிக்கப்படுகிறார்.
தேசிய செல்வ விநியோகத்தை அளவிடும் ஜினி குறியீட்டில், சில வட ஐரோப்பிய நாடுகளான நார்டிக் நாடுகள் மற்றும் அமெரிக்காவை விட தென் கொரியா சிறந்த நிலையில் உள்ளது. அப்படி இருக்கும் போது, இந்தத் தொடரின் கருப்பொருளை இப்படி அமைத்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
ஆசிய நாட்டில் சமத்துவமின்மை அதிகரித்து வருவதால் இப்படிச் செய்திருக்கலாம். தென் கொரியாவில் முதல் 20% உயர் வருமானத்திரனர், கடைசி 20% வருமானத்திரை விட 166 மடங்கு அதிக சொத்து வைத்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) புள்ளிவிவரங்கள், தென்கொரியாவில் உள்ள 51 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட 17% பேர் கோவிட் -19 தொற்றுநோய்த் தாக்குதலுக்கு முன் வறுமையில் வாழ்ந்தனர்.
கோஷிடெல்ஸ் மற்றும் கோஷிவோன் என்று அழைக்கப்படும் 2 மீட்டர் அகலம் உள்ள சிறு அறைகளைக் கொண்ட வீடுகள் அங்கு அதிகம். ஒரு குடும்பத்தின் பல தலைமுறையினர், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாக அடைபட்டு வாழ்வதும் அங்கு சகஜம்.
ஆனால், பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட போராடுகிறார்கள்: தென்கொரியாவில் வீட்டுக்கடன் இப்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகியுள்ளது. இது ஆசியாவிலேயே மிக அதிகமாக உள்ளது.
புலம் பெயர்ந்தோர் மீதான சுரண்டல்கள்

பட மூலாதாரம், Getty Images
ஸ்க்விட் கேம் கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமான ஒன்று அலி என்ற பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த ஒரு தொழிலாளியின் கதாபாத்திரம். அவரது தென்கொரிய முதலாளி அவரது ஊதியத்தை பல மாதங்களாக நிறுத்தி வைத்ததையடுத்து, தனது மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு, இந்தப் போட்டியில் சேரும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்.
பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தென்கொரியாவில் அதிகம் இல்லை. ஆனால் அலியின் பின்னணிக் கதை, சில வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த நாட்டில் அனுபவிக்கக்கூடிய கடின உழைப்பு மற்றும் சுரண்டலை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த இரு தசாப்தங்களில் கொரிய அரசு, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை நிறைவேற்றிய போதிலும், மனித உரிமை குழுக்களின் கூற்றுப்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமைகள் இன்னும் மோசமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெரு நிறுவனங்களின் அரசியல் நட்புறவு

பட மூலாதாரம், Getty Images
ஸ்க்விட் கேமின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று சோ சாங்-வூ, ஒரு முதலீட்டு வங்கியாளர், அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து நிதியை மோசடி செய்ததற்காக அவமானப்படுத்தப்பட்டதையடுத்து அவர் இந்தச் சவால்களில் இணைகிறார்.
கடந்த சில ஆண்டுகளில், தென் கொரியா அதன் வணிக மற்றும் அரசியல் உயரடுக்கு சம்பந்தப்பட்ட ஊழல்களால் அதிர்ந்தது, ஊழல் விசாரணை, 2016 ல் அதன் முதல் பெண் ஜனாதிபதி பார்க் கியூன்-ஹேயை வீழ்த்தியது.
சீனாவுடனான சிக்கலான உறவு

பட மூலாதாரம், Getty Images
ஸ்க்விட் கேமில் ஒரே ஒரு இடத்தில், வட கொரியாவின் நட்பு நாடான சீனாவைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அதில், சை-பியோக்கின் தாயார் சீன நிலப்பகுதி வழியாக தென் கொரியாவை அடைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்தத் தொடர் சியோலுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பதற்றத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆனது. விளையாட்டில் போட்டியாளர்கள் அணிந்திருக்கும் பச்சை நிற டிராக்ஸூட்டுகள் 2019 சீன திரைப்படமான "டீச்சர், லைக்" இல் அணிந்திருந்த ஆடைகளை ஒத்திருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.
இது சமூக ஊடகங்களில் சூடான விவாதங்களுக்கு வழிவகுத்தது, ஆனால் அது நாட்டில் ஸ்க்விட் கேம் தொடரின் வெற்றியைத் தடுக்கவில்லை. சீனாவில் நெட்ஃபிக்ஸ் தடை செய்யப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் சேவைகள் தொடர்கின்றன. சீனாவின் மிகப்பெரிய திரைப்படம் மற்றும் புத்தக ஆய்வு தளமான டௌபனில் கிட்டத்தட்ட 300,000 மக்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 10 க்கு 7.6 மதிப்பெண் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ஈ-காமர்ஸ் தளங்கள் பச்சை டிராக்ஸூட்கள் உள்ளிட்ட ஸ்க்விட் கேம் தொடர்பான பொருட்களை விற்பனை செய்யவும் தொடங்கிவிட்டன. ஒரு அத்தியாயத்தில் இடம்பெறும் கொரிய இனிப்பான டல்கோனா விற்கும் கடைகள் கூட ஷாங்காயில் உள்ளன.

பட மூலாதாரம், Netflix
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் உடையக்கூடிய மிட்டாய் துண்டுகளில் போட்டியாளர்கள் பொறிக்கப்பட்ட வடிவங்களைச் வெளியே எடுக்க வேண்டும்.
டிக்டோக்கில் வீடியோக்களில் "டல்கோனா மிட்டாய் சவால்" பரவி வருகிறது. அவற்றில் ரசிகர்கள் அந்தத் தொடரில் வருவது போலவே மீண்டும் செய்து காட்டுகிறார்கள்.
ஸ்க்விட் கேம் ஒரு உணவுப் பண்டத்திற்கு எதிர்மறையான விளம்பரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம், ஆனால் இந்தத் தொடரின் புகழ் கொரிய கலாச்சாரத்தின் மீதான உலகளாவிய ஈர்ப்பு அதிகரிப்பதை வெளிப்படுத்துகிறது.
பிற செய்திகள்:
- கேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
- ரஷ்யாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை கடந்தது
- அதிமுகவை கைப்பற்ற விரும்புகிறாரா சசிகலா? முயற்சிகள் வெற்றி பெறுமா?
- வியாழன் அருகே சூரிய குடும்பத்தின் பிறப்பு ரகசியம்: 'தோண்டி பார்க்க' கிளம்பிய நாசாவின் லூசி
- டி20 உலக கோப்பை - எத்தனை ஆட்டங்கள், யாருடன் மோதுகிறது இந்தியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












