மதிமுகவில் வாரிசு அரசியல்:: "ஒரு படைத்தலைவனை கூட வைகோ உருவாக்க முடியவில்லையா?"

வைகோ

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகனுக்கு கட்சிப் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் பதவி விலகிவிட்டார். ` 28 வருடங்களாக படையை நடத்திய வைகோவால், ஒரு படைத்தலைவனைக்கூட உருவாக்க முடியவில்லையா?' எனவும் ஈஸ்வரன் கேள்வியெழுப்புகிறார். என்ன நடக்கிறது?

சென்னை, எழும்பூரில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில் 20-ம் தேதி மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்பட 106 நிர்வாகிகள் பங்கேற்றனர். `வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சிப் பதவி கொடுக்கலாமா?' என்பதற்காக மட்டும் இந்தக் கூட்டம் கூடியது. கூட்டத்தில் பேசிய வைகோ, ` என் மகன் என்பதற்காக பதவி வழங்க வேண்டியதில்லை. கட்சி நிர்வாகிகளிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்திய பிறகு முடிவு செய்யலாம்' என்றார். இதையடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 104 வாக்குகளை துரை வையாபுரி பெற்றதால், அவரை தலைமைக் கழக செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியானது.

வாரிசு அரசியல் இல்லை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ``மறுமலர்ச்சி தி.மு.கவின் சட்டவிதிகளின்படி நானே அவருக்கு பொறுப்பு வழங்கியிருக்கலாம். ஆனால், வாக்கெடுப்பு நடத்தி நிர்வாகிகள் அவரைத் தேர்வு செய்துள்ளனர். துரைக்கு பதவி வழங்கப்பட்டது என்பது வாரிசு அரசியல் இல்லை. ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படியே அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட வேண்டாம் என அவரைத் தடுத்து வந்தேன். ஆனால், முழுவதுமாக தடுக்க முடியவில்லை. தொண்டர்கள் விருப்பப்படியே கட்சிப் பணிகளில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார்' என்றார்.

அதேநேரம், துரை வையாபுரிக்கு பதவி கொடுப்பதற்காக நேற்று கூடிய கூட்டத்தை அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் புறக்கணித்தனர். இதனால், `கட்சிக்குள் பூசல் வெடிக்கலாம்' எனவும் ம.தி.மு.க நிர்வாகிகள் பேசி வந்தனர். இந்நிலையில், ம.தி.மு.கவில் இருந்து விலகுவதாக கோவை வே.ஈஸ்வரன் அறிவித்துள்ளார். இனி, `மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்' என்ற பெயரில் தனி அமைப்பாக செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். `இது அரசியல் இயக்கம் அல்ல' எனவும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

MDMK meeting

எங்கிருந்து அழுத்தம் வந்தது?

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்துப் பதிவிட்டுள்ள ஈஸ்வரன், ` அரசியலில் எனக்கு நேர்மையையும் கண்ணியத்தையும் வீரத்தையும் விவேகத்தையும் கற்றுத்தந்த பொதுச் செயலாளருக்கும் எனக்கு ஒத்துழைப்பு தந்து எனது போராட்டத்தை வெற்றியடைய செய்தும் என் மீது அன்பு செலுத்திய எனது சக தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். `எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது' என்றும் எதை பொதுச்செயலாளர் சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்றுவிட நினைத்து கடிதம் எழுதினேன். ஆனால் பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னை கட்டிப் போட்டுவிட்டது. ஆனால் இன்று கனத்த இதயத்தோடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோவை ஈஸ்வரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கட்சியில் தனக்குத் தெரியாமல் காரியங்கள் நடைபெறுவதாக பொதுச் செயலாளர் கூறுகிறார். `கடந்த 2 வருடங்களாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு தனது மகன் செல்வது தெரியாது' என்கிறார். இதனை சிறிய குழந்தைகூட நம்பப் போவதில்லை. `விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்' என நீதிமன்றத்தில் பேசிய தலைவர், இப்படியொரு வார்த்தையை பொதுவெளியில் பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இத்தனை அழுத்தம் அவருக்கு எங்கிருந்து வந்தது? ஒரு மறைமுக அஜெண்டாவை வைத்துக் கொண்டு செயல்படக் கூடிய தலைவராக அவரை நான் பார்க்கவில்லை" என்கிறார்.

ஒரு படைத்தலைவன் கூடவா இல்லை?

தொடர்ந்து பேசுகையில், `` தொடக்கத்தில் இருந்தே ஒரு கட்சியின் அடுத்த தலைவராக வாரிசுக்களை முன்னிறுத்தக் கூடாது என அவர் பேசி வந்தார். நாங்களும் அதை நம்பி கடந்த 28 ஆண்டுகளாக பயணித்து வந்தோம். தி.மு.க என்றால் அங்கு வாரிசு அரசியல் இருக்கும். அதைப் பற்றிக் கவலையில்லாதவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதனை எதிர்த்துப் பேசி வந்த இயக்கத்தில் இப்படியொரு நிகழ்வை ஏற்க முடியாது" என்கிறார்.

`` வைகோவின் மகன் கட்சிக்குள் வரலாம், அவருக்குப் பதவி கொடுக்கலாம். ஏன் ஓ.பி.எஸ் மகன் ம.தி.மு.கவுக்கு வந்தால்கூட பதவி கொடுப்பதில் சிரமம் இல்லை. ஆனால் கட்சியை வழிநடத்துவதற்கு இவருக்கு மட்டுமே தகுதியுள்ளது என்றால் 28 வருடங்களாக படையை நடத்திய வைகோவால், ஒரு படைத்தலைவனைக் கூட உருவாக்க முடியவில்லையா? இந்தக் கட்சியில் தகுதி, பெர்சனாலிட்டி, ஆங்கிலப் புலமை, கவரக் கூடிய ஆற்றல் ஆகியவை உள்ள ஒருவரைக் கூடவா அவர் வளர்க்கவில்லை. அவ்வாறு உருவாக்கவில்லை எனக் கூற முடியாது. அதனை அவர் (வைகோ) விளம்பரப்படுத்தக் கூடாது என்கிறேன். கட்சியில் உள்ள யாராவது ஒருவர் வரட்டும். இப்படியொரு சூழலை ஏன் உருவாக்குகிறார்கள்?" எனக் கேள்வியெழுப்புகிறார் ஈஸ்வரன்.

இப்படியொரு திருப்பம் ஏன்?

`` 1993 ஆம் ஆண்டு ம.தி.மு.கவுக்கு இருந்த எழுச்சி, துரை வையாபுரியின் வருகையில் ஏற்படுகிறது என மாவட்ட செயலாளர்கள் கூறுகிறார்களே?" என்றோம்.``அவரது வருகையால் எழுச்சி இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் வேற விஷயம். ம.தி.மு.க தோற்ற பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் அங்கே செல்லவில்லை. மக்கள் ஆதரவு இருக்கிறதோ, இல்லையோ கட்சியின் அடிப்படை நியதிகளின்படி சரியா.. தவறா என்றுதான் பார்க்கிறோம். அவரது மகன்தான் கட்சியை வழிநடத்த முடியும் என்ற மனநிலை கட்சிக்குள் பரவலாக உள்ளது. அதனை என்னால் ஏற்க முடியவில்லை. குறிப்பாக, இந்தக் கட்சியிலேயே இப்படியொரு திருப்பம் வருவதைத்தான் ஏற்க முடியவில்லை" என்கிறார்.

வைகோ மற்றும் அவரின் மகன்

``நேற்றைய கூட்டத்தில் நீங்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் 3 பேர் பங்கேற்கவில்லை. அவர்களின் நிலைப்பாடும் இதுதானா?" என்றோம். `` அதனை அவர்களிடமே கேட்டுவிடுங்கள். நான் இனி மறுமலர்ச்சி மக்கள் இயக்கமாக செயல்படுவேன்" என்கிறார்.

``உங்கள் எதிர்ப்பை வைகோவிடம் பகிர்ந்து கொண்டீர்களா?" என்றோம். `` அவரிடம் நேரடியாக சொல்லவில்லை. ஆனால், கட்சியின் அவைத் தலைவரிடம் கூறிவிட்டேன்" என்றார்.

துரை வையாபுரியின் வருகை, ஏன் அவசியம்?

கோவை ஈஸ்வரனின் எதிர்ப்பு குறித்து ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசுவதற்காக தொடர்பு கொண்டபோது, அவர் கூட்டத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ம.தி.மு.கவின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பேட்ரிக்கிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ம.தி.மு.கவில் 28 ஆண்டுகளாக கோவை ஈஸ்வரன் இருக்கிறார். அவர் நல்ல போராட்டக்குணம் உள்ளவர்தான். நாங்கள் அதனை மறுக்கவில்லை. அவர் இளைஞரணியின் செயலாளராக இருக்கிறார். இளைஞர்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பில் அவர் இருந்தாலும் ஒரு மாவட்டத்தில் மட்டுமே அமர்ந்துள்ளார். அவரால், மக்களைத் திரட்ட முடியவில்லை. மக்களை ஈர்க்கும் முகம் இருந்தால் போதும், அதற்கு ஆங்கிலப் புலமை தேவையில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசிய பேட்ரிக், `` ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நிகழ்ச்சிகளில் துரை பங்கேற்றுள்ளார். எங்கள் கட்சியின் தலைவர் வந்தால்கூட வராத நபர்கள்கூட அவரது நிகழ்ச்சிக்காக குவிந்தனர். அனைவரையும் கவரக் கூடிய ஈர்ப்பு அவரிடம் உள்ளது. கொரோனா காலங்களில் ஏராளமான சேவைகளை அவர் செய்துள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்களை வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் கூட்டிச் செல்லக் கூடிய டிரைவராக பல மாதங்கள் வேலை பார்த்துள்ளார்.

ஸ்டாலினிடம் சீட் கேட்ட வைகோ

கட்சி நிர்வாகிகளின் சுப, துக்க நிகழ்வுகளில் அவர் பங்கேற்று வந்தார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் 99 சதவிகிதம் பேர், அவரது வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைவர் மகன் என்பதால் அவரை யாரும் ஆதரிக்கவில்லை. இந்தக் கட்சியில் நிர்வாகிகளின் உடுப்பு வேண்டுமானால் வெள்ளையாக இருக்கலாம். ஆனால், உள்ளாடைகளின் நிலை என்ன என்பது எங்களுக்குத்தான் தெரியும். இந்தக் கலம் உடையாமல் கொண்டு செல்லப்பட வேண்டும் என நினைக்கிறோம். அதனால் அவரது வருகை, அவசியமான ஒன்றாக உள்ளது" என்கிறார்.

`` பொடோவில் இருந்து வைகோ வெளியே வந்த காலகட்டத்தில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்கு எம்.பி பதவி கொடுத்தார். அப்போது தலைவரின் மகனுக்கும் ரவிச்சந்திரனுக்கும் ஒரே வயதுதான். அப்போதே துரையை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஈஸ்வரனுக்காக சீட் கேட்டு தி.மு.க தலைவரிடம் வைகோ கோரிக்கையும் வைத்தார். ஆனால், சீட் கிடைக்கவில்லை.

அந்த வருத்தம் அவருக்குள் இருக்கலாம். எங்களுக்கு கை நிறைய இடங்களை தி.மு.க கொடுத்திருந்தால் அதிகப்படியான நிர்வாகிகளுக்குக் கொடுத்திருக்கலாம். அனைவருக்கும் சிறிய வருத்தங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் ஈஸ்வரன் அவசரப்படுவதாகவே பார்க்க முடிகிறது. தவிர, ஒரு தொண்டனை இழப்பதைக்கூட தலைவர் நிச்சயமாக விரும்ப மாட்டார்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :