பருவநிலை மாற்ற ஆவணங்களைத் திருத்த நாடுகள் முயற்சி: கசிந்த ஆவணங்கள் காட்டும் செய்தி

நிலக்கரி மூலம் இயங்கும் அணல் மின் நிலையத்தின் புகைப்போக்கி.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜஸ்டின் ரௌலட் & டாம் ஜெர்கன்
    • பதவி, பிபிசி நியூஸ்

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது தொடர்பான முக்கியமான அறிவியல் அறிக்கை ஒன்றை திருத்துவதற்கு பல நாடுகள் முயற்சி செய்தது கசிந்த சில ஆவணங்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

இந்த ஆவணங்களை பிபிசி பார்த்தது.

பெட்ரோலியம் போன்ற புதைபடி எரிபொருள்களை வேகமாக கைவிடவேண்டிய தேவை பற்றி அழுத்தம் தரவேண்டாம் என்று சௌதி அரேபியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.வை கோகின்றன என்பதை கசிந்த இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

அதே நேரம் பசுமையான தொழில்நுட்பங்களுக்கு மாறிச் செல்வதற்கு ஏழை நாடுகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்பதை சில பணக்கார நாடுகள் கேள்வி கேட்பதையும் இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் சிஓபி26 பருவநிலை உச்சி மாநாடு நடக்கவுள்ள நிலையில், நாடுகள் மேற்கொண்டுவரும் இத்தகைய லாபி செய்யும் முயற்சிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கும், புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்கவும் தாங்கள் செய்யவேண்டியவை குறித்து குறிப்பாக பொறுப்பேற்றுக்கொள்ளும்படி இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாடும் கேட்டுக்கொள்ளப்படலாம். இந்த நிலையில், ஐ.நா. பரிந்துரைகளில் தங்களுக்கு ஏற்ற மாற்றங்களை செய்துகொள்ள நாடுகள் முயற்சி செய்வதை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

அறிவியல் ஆவணங்களின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பான ஐ.நா. அறிக்கை ஒன்றை தயாரிக்கும் பணியில் இருந்த விஞ்ஞானிகள் குழுவுக்கு அரசுகள், கம்பெனிகள், தங்கள் நலன்களை இதில் கொண்டிருக்கும் பிற தரப்பார் ஆகியோர் 32 ஆயிரம் கடிதங்களை அளித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை என்று அழைக்கப்படும் இந்த அறிக்கையை பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டுக் குழு (ஐபிசிசி) என்ற அமைப்பு தயாரிக்கிறது. ஒவ்வொரு 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் பருவநிலை மாற்றம் மிக தீவிரமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், உச்சிமாநாடு நடக்கவுள்ள நிலையில் இந்த அறிக்கை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க என்னவிதமான நடவடிக்கைகள் தேவை என்று அரசுகள் முடிவு செய்வதற்கும், கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தைக்கான அடிப்படைகளை வழங்கவதிலும் இந்த அறிக்கை முக்கியப் பங்கு வகிக்கும்.

பல அரசுகள் அனுப்பிய இந்த கடிதங்கள் பெரும்பாலானவை, பிபிசி படித்தவரை, ஆக்கபூர்வமாகவும், இறுதி அறிக்கையின் தரத்தை மேம்படுத்தும் வகையிலுமே இடம் பெற்றிருந்தன.

இந்த கடிதத் தொகுப்பும், சமீபத்திய வரைவு அறிக்கையும் கிரீன்பீஸ் யு.கே. அமைப்பின் புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கு கசிந்து அவர்கள் அதை பிபிசி நியூசுக்கு அனுப்பி வைத்தனர்.

புதைபடிவ எரிபொருள்கள்

இப்போதைய வரைவு அறிக்கை கூறும் வேகத்தில் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை குறைக்கவேண்டியதில்லை என்று பல நாடுகளும், அமைப்புகளும் வாதிடுவதை கசிந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

"எல்லா நிலைகளிலும் முடுக்கப்பட்ட, அதிவிரைவான இடர் நீக்கு நடவடிக்கைகளுக்கான தேவை," என்பது போன்ற தொடர்கள் வரைவு அறிக்கையில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று சௌதி எண்ணெய் அமைச்சகத்தின் ஆலோசகர் ஒருவர் கோரியள்ளார்.

நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை மூடுவது அவசியம் என்ற முடிவை ஒரு மூத்த ஆஸ்திரேலிய அரசு அதிகாரி நிராகரிக்கிறார். ஆனால், சிஓபி26 மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது.

சௌதி அரேபியா பெரிய எண்ணெய் உற்பத்தி நாடு என்பதும், ஆஸ்திரேலியா மிகப் பெரிய அளவில் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா என்ன சொன்னது?

கட்டுப்படியாகும் விலையில் மின்சாரத்தை வழங்குவதில் "பெரிய சவால்கள்" இருப்பதால் பல பத்தாண்டுகளுக்கு இந்தியாவில் மின் உற்பத்திக்கான முக்கிய மூலாதாரமாக நிலக்கரியே இருக்கும் என்று இந்திய அரசோடு தொடர்புடைய மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தை (சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மைனிங் அன்ட் ஃப்யூயல் ரிசர்ச்) சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் ஐபிசிசி விஞ்ஞானிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தியா உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி பயன்படுத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு.

கரியமிலவாயுவை காற்றில் இருந்து வடிகட்டிப் பிரித்து அதனை நிரந்தரமாக புவிக்கடியில் புதைக்கும் புதிய, விலை அதிகம் கொண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும் என்று சில நாடுகள் வாதிடுகின்றன.

புதைபடிவ எரிபொருள்களை பெரிய அளவில் உற்பத்தி செய்யும், பயன்படுத்தும் சௌதி அரேபியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் ஆகியவை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

சிசிஎஸ் என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் மூலம் எரிபொருள், தொழில்துறை மாசுபாடுகளை பெரிய அளவில் குறைக்கமுடியும் என்று இவை கூறுகின்றன.

"கார்பன் மூலாதாரங்களை நோக்கி செல்வது பூஜ்ஜியமாக வேண்டும், புதைபடிவ எரிபொருள்களை படிப்படியாக ஒழிக்கவேண்டும் என்பதே ஆற்றல் அமைப்பு துறையில் கார்பன் நீக்க நடவடிக்கைகளின் மையமாக இருக்கும்" என்ற முடிவுரையை நீக்கவேண்டும் என்கிறது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சௌதி அரேபியா.

அர்ஜென்டினா, நார்வே, ஒபெக் கூட்டமைப்பு ஆகியவை இந்த அறிக்கை தொடர்பான அதிருப்திகளை வெளியிட்டுள்ளன. புதைபடிவ எரிபொருள்கள் வெளியிடும் மாசுபாட்டை உறிஞ்சும் சி.சி.எஸ். தொழில்நுட்பத்தை சாத்தியமான கருவியாக அங்கீகரிக்கவேண்டும் என்கிறது நார்வே.

வரைவு அறிக்கையில் சிசிஎஸ் தொழில்நுட்பத்துக்கு எதிர்காலத்தில் ஒரு பங்கு உண்டு என்று குறிப்பிட்டாலும், அதன் சாத்தியப்பாட்டில் நிச்சயமற்ற நிலை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்குமேல் அல்லது 2 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்கவேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு புதைபடிவ எரிபொருளை பயன்படுத்திக்கொண்டே சிசிஎஸ் மூலமாக காற்றை சுத்தப்படுத்துவது என்பது எந்த அளவுக்கு பயன்படும் என்பதில் பெரிய நிச்சயமின்மை இருக்கிறது என்கிறது வரைவு அறிக்கை.

கடற்கரையோர எரிவாயு களம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நார்வேயின் கடற்கரையோர எரிவாயு களமான ஸ்லெய்ப்னெர் 1996 முதல் சிசிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

புதைபடிவ எரிபொருளுக்காக லாபி செய்வோர் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் பருவநிலை தொடர்பான செயல்பாட்டை நீர்த்துப் போகச் செய்வதில் வகிக்கும் பாத்திரம் குறித்த பகுப்பாய்வு குறிப்பை நீக்கவேண்டும் என்று ஐபிசிசி விஞ்ஞானிகளைக் கோரியுள்ளது ஆஸ்திரேலியா.

இதைப் போலவே லாபி செயல்பாடு, அரசியல் செயல்பாடு, வாடகை எடுக்கும் வணிக மாதிரிகள் போன்றவை தொடர்பான குறிப்புகளை நீக்கும்படி ஐபிசிசியிடம் கேட்டுள்ளது ஒபெக்.

இது பற்றிக் கேட்டபோது பிபிசிக்கு அளித்த ஒபெக் "கார்பன் உமிழ்வை சமாளிக்க பல பாதைகள் உள்ளன. ஐபிசிசி அறிக்கையிலேயே அவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நாம் பயன்படுத்தவேண்டும். கிடைக்கிற ஆற்றல்களையும், சுத்தமான, அதிகத் திறனுள்ள ஆற்றல்களையும் பயன்படுத்தி நாம் உமிழ்வைக் குறைக்கவேண்டும். இதில் எவர் ஒருவரும் பின்னே விடப்படக்கூடாது," என்று தெரிவித்துள்ளது.

சார்பற்ற அறிவியல்

தமது அறிவியல் பரிசீலனை நடைமுறைக்கு நாடுகள் அளித்துள்ள கருத்துகள் மையமானவை என்றும், ஆனால், அவற்றை எல்லாம் அறிக்கையில் சேர்க்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை என்றும் ஐபிசிசி தெரிவித்துள்ளது.

"எல்லா பக்கத்தில் இருந்தும் வரும் லாபிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் எங்கள் செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது", என்று பிபிசியிடம் கூறியுள்ளது ஐபிசிசி.

ஐபிசிசி அறிக்கைகள் சார்பற்றவை என்பதில் எந்த ஐயமும் இல்லை என்கிறார் ஐபிசிசியின் மூன்று பெரிய அறிக்கைகளை தொகுக்க உதவிய முன்னணி பருவநிலை மாற்ற விஞ்ஞானியும், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியருமான கொரின்னி லே குவெரீ.

யார் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்காமல், நாடுகள், அமைப்புகள் அனுப்பிய கருத்துகள் முழுவதும் அறிவியல் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட்டன, என்றும், அவற்றை ஏற்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் மீது எந்த அழுத்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் லாபி முயற்சிகளாக இருக்குமானால், அவற்றுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லாவிட்டால் அவை நிராகரிக்கப்பட்டன என்றார் அவர்.

வல்லுநர்களும், அரசுகளும் அறிவியலை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

ஐபிசிசி நடைமுறையில் அரசாங்கங்கள் பங்கேற்பு முக்கியமானது என்றார் 2015 பாரீஸ் பருவநிலை மாநாட்டை மேற்பார்வையிட்ட கோஸ்டா ரிகா ராஜீய அதிகாரி கிறிஸ்டியானா ஃபைகுரெஸ்.

"எல்லோருடைய குரலும் அங்கே இருக்கவேண்டும். அதுதான் நோக்கம். இது ஒற்றை இழை அல்ல. பல இழைகளால் நெய்யப்பட்ட துணி அது," என்று அவர் கூறினார்.

பருவநிலை அறிவியலில் ஐபிசிசி ஆற்றிய பணிக்காக 2007ல் ஐநாவுக்கு ஒரு நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

குறைவான இறைச்சி சாப்பிடுவது

இறைச்சி சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது பசுமை இல்ல வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு அவசியம் என்பதற்காக முன்வைக்கப்படும் ஆதாரங்களை பிரேசிலும் அர்ஜென்டினாவும் எதிர்க்கின்றன.

இந்த இரண்டு நாடும் மாட்டிறைச்சி மற்றும் மாட்டுத்தீவன உற்பத்தியில் உலகிலேயே முன்னிலையில் உள்ளவை இந்த நாடுகள்.

உணவின் மூலமாக பசுமை இல்ல வாயு வெளியேற்றம் நடப்பது குறித்து காட்டும் வரைபடம்.
படக்குறிப்பு, உணவின் மூலமாக பசுமை இல்ல வாயு வெளியேற்றம் நடப்பது குறித்து காட்டும் வரைபடம்.

"உமிழ்வுகள் அதிகம் நடக்கக் காரணமான மேற்கத்திய உணவுகளுக்குப் பதிலாக தாவர உணவுகள் மூலம் பசுமை இல்ல வாயு உமிழ்வை 50 சதவீதம் வரை குறைக்கலாம்," என்று வரைவு அறிக்கை கூறுவதை பிரேசில் மறுக்கிறது.

தாவர உணவுகள் உதவியோடு பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது தொடர்பான சில வாக்கியங்களை மாற்றவோ, நீக்கவோ வேண்டும் என்று இரண்டு நாடுகளும் அறிக்கையை எழுதும் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

மாட்டுக்கறி கார்பன் மிகை உணவு என்று கூறுவதை அவை எதிர்க்கின்றன.

சிவப்பு இறைச்சி மீதான வரி, சர்வதேச அளவில் இறைச்சி இல்லாத திங்கள் கிழமை கடைபிடிக்க வேண்டுகோள் என்பது தொடர்பான குறிப்புகளை நீக்கவேண்டும் என்று அர்ஜென்டினா கோரியுள்ளது. இறைச்சியும் கார்பன் உமிழ்வை குறைக்க முடியும் என்பதற்கும் ஆதாரம் இருப்பதாக அது கூறியுள்ளது.

தாவர உணவுகள் தம்மளவில் பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று குறிப்பிட்ட பிரேசில் பல்வேறுபட்ட உற்பத்தி முறைகளில் ஏற்படும் உமிழ்வுகள் தொடர்பாகவே கவனம் இருக்கவேண்டும், உணவு வகைகள் மீது கவனம் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளது பிரேசில்.

அமேசான் உள்ளிட்ட காடுகளில் அழிவு ஏற்படுவது அதிகரித்துள்ள நிலையில், இதெல்லாம் அரசாங்க கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே நடப்பதாக குறிப்பிடுவதை எதிர்க்கிறது பிரேசில்.

ஏழை நாடுகளுக்கான நிதியுதவி

கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைவதற்கு வளரும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் நிதியுதவி செய்யவேண்டும் என்பது தொடர்பாக குறிப்பிடும் பகுதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பது தொடர்பாகவே சுவிட்சர்லாந்து நாட்டின் பல கருத்துகள் இடம் பெற்றிருந்தன.

வளர்ந்த நாடுகள் ஆண்டுதோறும் வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர் பருவநிலை மாற்ற நிதியாக 2020 வாக்கில் தரவேண்டும் என்று 2009ம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த இலக்கு இன்னும் எட்டப்படாமலே உள்ளது.

Chart showing climate finance provided to developing countries

ஸ்விட்சர்லாந்தின் கருத்தை ஒட்டியே ஆஸ்திரேலியாவும் கருத்து தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளின் பருவநிலை மாற்ற வாக்குறுதிகள் வெளியில் இருந்து வரும் நிதியுதவியை சார்ந்து செய்யப்பட்டவை அல்ல என்று கூறும் ஆஸ்திரேலியா நிதியுதவி தொடர்பாக போதிய நம்பகமான வாக்குறுதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, அகவயமான கூற்று என்று நிராகரித்துள்ளது.

பருவநிலை மாற்ற நிதியுதவி ஒரு முக்கியமான கருவி, ஆனால் அதுமட்டுமே ஒரே கருவி அல்ல என்று ஸ்விட்சர்லாந்து அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். அத்தகைய நிதியுதவி தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் சக்தியுள்ள அனைவரும் உதவி செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

அணுசக்திக்கு மாறுதல்

பருவநிலை மாற்ற இலக்குகளை எட்டுவதில் அணு ஆற்றல் வகிக்கக்கூடிய பாத்திரம் குறித்து மேலும் நேர்மறையான அணுகுமுறை தேவை என்று பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளிலுமே அணு சக்திக்கு எதிராக பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்று இந்தியாவும் தெரிவித்துள்ளது. அணு சக்தி ஒரு நிறுவப்பட்ட தொழில்நுட்பம் என்றும், சில நாடுகளில் மட்டுமே அதற்கு அரசியல் ஆதரவு உள்ளது என்றும் இந்தியா வாதிட்டுள்ளது.

நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான ஐ.நா.வின் 17 இலக்குகளில் ஒன்றை அடைவதற்கு மட்டுமே அணுசக்திக்கு நேர்மறை விளைவு உண்டு என்று விவரிக்கும் ஓர் அட்டவணையை செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் விமர்சனம் செய்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :