டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செய்த 'நன்மை'

கோலி

பட மூலாதாரம், Getty Images

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோசமாகத் தோல்வி அடைந்திருந்தாலும், மற்றொரு வகையில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி மறைமுகமாக நன்மை செய்திருக்கிறது.

டி20 உலகக் கோப்பை இரண்டாவது பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.

பாகிஸ்தான் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. முதலில் இந்தியாவையும், அடுத்ததாக நியூஸிலாந்தையும் அந்த அணி தோற்கடித்தது.

ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது பிரிவைப் பொறுத்தவரை, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய மூன்று அணிகள்தான் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புள்ள அணிகள் எனக் கருதப்படுகிறது. ஆனால் அவற்றில் இரண்டு அணிகளுக்கு மட்டுமே அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

இப்போது இந்தப் போட்டியில் இருக்கும் இந்தியாவையும், நியூஸிலாந்தையும் தோற்கடித்ததன் மூலம் பாகிஸ்தான் அணி வலுவான அணியாக எழுச்சி பெற்றிருக்கிறது. அரையிறுதியை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது என்றே கூறலாம்.

வரும் ஆட்டங்களில் மிகப் பெரிய தோல்விகளைச் சந்திக்காவிட்டால், அந்த அணி நிச்சயமாக அரையிறுதியில் ஆடும். ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து என பலவீனமான அணிகளுடன் மட்டும்தான் அந்த அணி இனி ஆட வேண்டியிருக்கிறது. இந்த மூன்று அணிகளையும் வெல்வது பாகிஸ்தானுக்கு பெரிய சவாலாக இருக்காது என்று கருதப்படுகிறது.

ஆனால் மற்ற இரு பலமான அணிகளாகக் கருதப்படும் இந்தியாவும் நியூஸிலாந்தும் அரையிறுதிக்குச் செல்வதற்கு கடுமையாக உழைத்தாக வேண்டும்.ஏனென்றால் இரு அணிகளில் ஒரு அணிக்குத்தான் அரையிறுதிக்கான வாய்ப்புக் கிடைக்கும் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இந்தியா அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு

ஒருவேளை நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தால், இந்தியாவுக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு மேலும் கடினமாகி இருந்திருக்கும்.

ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்திருப்பதால் அந்த அணியின் ரன் ரேட் +6.5 என மிக உயரத்தில் இருக்கிறது. இப்போதைய நிலையில் இந்திய அணி பட்டியலில் 5-ஆவது இடத்தில் இருக்கிறது.

கோலி அவுட்

பட மூலாதாரம், Getty Images

நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளையும் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய அணிகள் தோற்கடித்தால் சம அளவிலான புள்ளிகளைப் பெறும். ஏற்கெனவே பாகிஸ்தான் இந்தியாவைத் தோற்கடித்திருப்பதால் அணிக்கு 8 புள்ளிகள் கிடைத்திருக்கும். ஆனால் அந்த அணி நியூஸிலாந்தையும் தோற்கடித்திருப்பதால், அதிகபட்சமாக 10 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. ஒரு பிரிவில் ஒரு அணி பெற முடிகிற அதிகபட்ச புள்ளிகள் இதுவே.

இப்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கு அரையிறுதிப் போட்டிக்கான இடம் கிடைத்துவிட்டது என்றே கூறலாம். ஒருவேளை நியூஸிலாந்துடன் அந்த அணி தோற்றுப் போயிருந்தால், மற்ற அணிகளை வெல்லும் பட்சத்தில் அந்த அணியின் புள்ளிகள் அதிகபட்சமாக 8-ஆக இருந்திருக்கும். அடுத்ததாக வரும் 31-ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா நியூஸிலாந்திடமும் தோற்றுப்போனால் நியூஸிலாந்துக்கு 10 புள்ளிகள் கிடைத்திருக்கும். ஒருவேளை இந்தியா வென்றால்கூட ரன் ரேட்டை கணக்கில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றுவிட்டது. இப்போது இந்தியா நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். ஆனால் நியூஸிலாந்து தொடர்ந்து பூஜ்ஜியத்திலேயே இருக்கும். அடுத்து வரும் போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெறும்பட்சத்தில் இந்தியாவுக்கு 8 புள்ளிகள் கிடைத்துவிடும்.

நியூசி பாக்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிடம் தோற்றுவிட்டால், அடுத்துவரும் போட்டிகளில் நியூஸிலாந்து வெற்றி பெற்றாலும் ஆறு புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செய்த நன்மை என்ன?

பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு இந்தியாவின் அரையிறுதிக் கனவு தங்களின் வெற்றி தோல்வியை மட்டுமல்லாமல் பிற அணிகளின் ஆட்டங்களையும் சார்ந்திருக்கிறது. இரண்டு அணிகள் ஒரே புள்ளியைப் பெற்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் இடம் தீர்மானிக்கப்படும்.

பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளின் ஆட்டத்துக்கு முன்பு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூட்யூப் சேனலில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். "பாகிஸ்தான் நியூஸிலாந்தை தோற்கடித்தால், அது இந்தியா அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை அதிகரிக்கும். பாகிஸ்தான் தோற்றால் நிலைமை சிக்கலாகும். ரன் ரேட்டையும் கவனித்து இந்தியா ஆட வேண்டியிருக்கும்" என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் பாகிஸ்தான் நியூஸிலாந்தை வீழ்த்தி, இந்தியாவுக்கு மறைமுகமாக நல்லது செய்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :