டி20 உலகக்கோப்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ` டி20 போட்டியைவிடவும் ஐ.பி.எல் போட்டிகளை பெரிதாக நினைத்ததன் விளைவாகத்தான் இப்படியொரு தோல்வி ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுப் போனது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 110 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
டி20 ஆட்டத்தின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இந்தத் தோல்வியை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ஷேவாக், ` இந்திய அணியின் ஆட்டம் ஏமாற்றத்தை அளித்தது. இந்திய அணியினரின் செயல்பாடுகளும் சிறப்பானதாக இல்லை. இந்தத் தோல்வி இந்திய அணியை பாதிக்கும். நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்கிறார்.
`நமது அணிக்கு இது மிகவும் கடினமான நேரம்' எனவும் பேட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள சச்சின், ` இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசுவதற்கு எதுவும் இல்லை. நமது அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. அங்கு எளிதாக சில ரன்களை எடுக்க முடியாததால், பெரிய ஷாட் விளையாட வேண்டிய நிலையில் நமது வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். வரும் ஆட்டங்களில் நமது அணி சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக்கோப்பைத் தொடரில் ரன் விகிதம், புள்ளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளோடு இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா, சில போட்டிகளில் பெரிய அளவில் ரன் எடுக்க முடியாததால் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்தார். இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷானும் கே.எல்.ராகுலும் எதிர்பார்த்ததைப்போல விளையாடவில்லை. விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரோஹித் சர்மாவும் விராட்டும் 50 ரன்களை எட்டுவதற்கு முன்பே விக்கெட்டை இழந்தனர்.
இந்தத் தோல்விகள் குறித்துப் பேசிய விராட்டும், ` நாங்கள் துணிச்சலாக விளையாடாததுதான் தோல்விக்குக் காரணம்' என்றார். இதுதொடர்பாக பேசிய பந்து வீச்சாளர் பும்ரா, ` எங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எங்கள் குடும்பத்தைப் பிரிந்து ஆறு மாதமாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம். நாங்கள் மீண்டு வருவதற்கு ஓய்வு தேவை' எனக் கூறிய வார்த்தைகளும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
`` விளையாட்டில் எந்தவொரு வீரரும் தோற்க வேண்டும் என நினைப்பதில்லை. நாட்டுக்காக விளையாடுவது என்பது பெருமையானது. விளையாட்டு வீரர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல. இதில் வெற்றி தோல்விகள் இயல்பானது. அனைத்து தருணங்களிலும் அவர்களுக்கு ஆதரவு தேவை' என இந்திய வீரர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
`` கடந்த இரண்டரை மாத காலமாக ஒரே ஊரில் இருந்து கொண்டு நமது வீரர்கள் விளையாடி வருகின்றனர். சில வீரர்கள் ஆகஸ்ட் இறுதியிலேயே அங்கு சென்றுவிட்டனர். அதுவும் ஒரு முக்கியமான காரணம். அதைத் தவிர, வீரர்கள் தேர்வும் முக்கிய காரணமாக உள்ளது" என்கிறார், கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன்.

பட மூலாதாரம், @sumanthraman twitter handle
தொடர்ந்து பேசுகையில், `` டி20 போட்டியில் அஸ்வின் விளையாடவில்லை, ஹர்திக் பாண்ட்யா ஏன் விளையாடுகிறார் எனக் கேள்வியெழுப்பியிருந்தேன். வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை எனக் கூற முடியாது. அது அவர்களின் விருப்பம். `நான் இந்த சீரிஸில் விளையாட விரும்பவில்லை' எனக் கூறிவிட்டால் யாரும் அவர்களைக் கட்டாயப்படுத்தப் போவதில்லை. ஐ.பி.எல் போட்டியில் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருந்தார். அவர் செகண்ட் லெக்கில் விளையாடவில்லை. ஆனால், உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். எனவே, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி ஆட வைப்பதில்லை. பிசிசிஐயை ஏன் குற்றம் சாட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை" என்கிறார்.
`` முன்பெல்லாம், தோனி, டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்களாதேஷ், ஸ்ரீலங்கா சுற்றுப்பயணம் வரும்போதெல்லாம், `வேண்டாம்' எனக் கூறிவிடுவார்கள். எனவே, வீரர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. ஐ.பி.எல்லில் உள்ள நான்கு முக்கியமான வீரர்கள், `எங்களுக்கு டி20 உலகக் கோப்பை வரவுள்ளது, அதற்காக நாங்கள் தயாராக வேண்டும்' எனக் கூறிவிட்டால் அவர்களுக்கு பிசிசிஐ அனுமதி கொடுக்காமல் இருக்கப் போவதில்லை. உலகக்கோப்பை டி20 போட்டியைவிடவும் ஐ.பி.எல்லை அவர்கள் முக்கியமானதாகப் பார்க்கிறார்கள். தற்போது இந்திய அணி அரையிறுதிக்குப் போவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. இதனை நான் எதிர்பார்க்கவில்லை" என்கிறார் சுமந்த் சி ராமன்.
இதையடுத்து, இந்திய அணியின் தோல்வி முகம் குறித்துப் பேசிய கிரிக்கெட் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான சார்லஸ், `` ஐ.பி.எல் போட்டிகளையும் தாண்டி சர்வதேச வீரர்களுக்கான சம்பளமும் சலுகைகளும் ஏராளம் உள்ளன. இந்தநேரத்தில், தங்களுக்கான பணிச் சுமை குறித்து கூறுவதெல்லாம் சரியல்ல. இந்தியா முழுக்க ரஞ்சி உள்பட ஏராளமான போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுடனான ஆட்டத்தின்போது, இந்திய அணியில் உள்ள வீரர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதாகத் தெரியவில்லை. ஹர்திக் பாண்ட்யாவை ஏன் எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. அவரை ஏன் ஆல் ரவுண்டர் பிரிவில் எடுக்க வேண்டும். இசான் கிஷான் ஏன் இறக்கப்பட்டார், நல்ல ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மா ஏன் எடுக்கப்பட்டார் எனத் தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா ஆடவே இல்லை. அவரைத் திரும்ப திரும்ப ஓப்பனிங்கில் இறங்கி ஆட வைக்கிறார்கள்" என்கிறார்.
மேலும், `` இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லர், ராய் உள்பட அனைவருக்கும் என்னென்ன ரோல் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அப்படி யாருக்கும் எந்த ரோலும் இல்லை. யார் பவர் பிளே ஆடுவார், மிடில் ஆர்டரில் யார் அடித்து ஆட வேண்டும் என்பதெல்லாம் இங்கு வரையறுக்கப்படவில்லை" என்கிறார்.
``டாஸ் வெல்வதும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டதே?" என்றோம். `` ஆமாம். அந்த பிட்ச்சின் கண்டிஷன்தான் காரணம். டாஸில் தோற்று பேட்டிங்கை எடுத்துவிட்டால் ஆடவே முடியாது. இரண்டாவது இன்னிங்ஸில் பனி காரணமாக பேட்டிங் எளிதாவதால் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். டாஸ் என்பது மிக முக்கியமான ரோலாக உள்ளது. அதைப் பயன்படுத்தி இங்கிலாந்து நேற்று வெற்றி பெற்றது. நேற்றைய மேட்ச்சில் ஜாஸ் பட்லரின் செஞ்சுரிதான் முக்கிய காரணமாக அமைந்தது. டாஸில் வெற்றி பெறுவது என்பதுதான் முக்கியமானதாக உள்ளது" என்கிறார்.
மேலும், `` ஐ.பி.எஸ் போட்டிகளும் அதே கிரவுண்டில்தான் நடந்தன. நமது அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. விராட் கோலியே தடுமாறுகிறார். யாரும் ஃபார்மில் இல்லை. நமது அணியில் ஷிகர் தவான் நல்ல ஃபார்மில் இருந்தார். அவரை எடுக்கவே இல்லை. சரியான காம்பினேஷனில் டீம் இல்லாததுதான் தோல்விக்குக் காரணம்" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












