இந்தியா Vs நியூசிலாந்து: எந்த புள்ளியில் இந்தியா ஆட்டத்தை நழுவவிட்டது? அரை இறுதி வாய்ப்புகள் எப்படி?

விராட் கோலி தலைமையிலான அணி

பட மூலாதாரம், Michael Steele-ICC

படக்குறிப்பு, விராட் கோலி தலைமையிலான அணி
    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இனியும் 2021 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா அரை இறுதிக்குத் தகுதி பெறமுடியுமா? இதற்கான பதிலைத் தான் அநேகமாக இந்திய ரசிகர்கள் தற்போது தேடிக்கொண்டிருக்கக்கூடும்.

நேரடியாக பதிலைச் சொல்ல வேண்டுமெனில், முடியும். ஆனால் அது இந்தியா விளையாடும் போட்டிகளைப் பொறுத்து மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகளும் மிகப்பெரிய தாக்கத்தைச் ஏற்படுத்தும்.

ஒப்பீட்டளவில் கடினமான பிரிவு என நிபுணர்கள் கருதியது சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவைத் தான். இதனை குரூப் ஆஃப் டெத் என கிரிக்கெட் நிபுணர்கள் வர்ணித்தார்கள்.

மிகவும் வலுவான அணியாக கருதப்பட்ட இந்தியா குரூப் 2 சுற்றில் இடம்பெற்றிருக்கிறது. தற்போது இரண்டு போட்டிகளை இந்தியா விளையாடி முடித்துவிட்ட நிலையில், இந்த பிரிவில் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான், நமீபியா உள்ளிட்ட அணிகள் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. பிறகு எப்படி, இந்தியாவுக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும்?

இந்தியா தனது கடைசி மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளையும் இந்தியா வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும்.

நியூசிலாந்து அணியும் இதே மூன்று அணிகளுடன்தான் மோதவுள்ளது. இந்த மூன்றையும் வென்றுவிட்டால் எட்டு புள்ளிகளுடன் நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் தனது அரை இறுதியை வாய்ப்பை ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்ட நிலையில், இந்த பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக நியூசிலாந்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், நியூசிலாந்து மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்திய அணியை விட அரை இறுதி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அந்த அணி தான் விளையாடவுள்ள மீதமுள்ள இரு போட்டிகளையும் வெல்ல வேண்டும். அவ்வளவுதான். மற்ற அணிகளின் வெற்றி தோல்வி பற்றி எல்லாம் கவலைப்படத் தேவை இல்லை. ஏற்கனவே மிக நல்ல ரன் ரேட் வைத்திருப்பதால் எட்டு புள்ளிகளுடன் எந்தவித சிரமும் இல்லாமல் அரை இறுதிக்கு முன்னேறிவிடும்.

ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. ஆப்கானிஸ்தான் தனது அடுத்த இரு போட்டிகளில் இந்தியாவையும், நியூசிலாந்தையும் சந்திக்கவுள்ளது. இது அந்த அணிக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

சரி, எப்படிதான் இந்தியாவுக்கு அரைஇறுதி வாய்ப்பு சாத்தியமாகும்?

குரூப் 2-ல் ஒரு அணியைத் தவிர வேறு எந்த அணியும் புள்ளிபட்டியலில் ஆறு புள்ளிகளுக்கு மேல் பெறக்கூடாது. அப்போதுதான் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதிலும் ரன்ரேட் மாபெரும் பங்கு வகிக்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தாம் விளையாடவுள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோல்வியடைய வேண்டும்.

அப்படியானால் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும். அதே சமயம் இந்தியாவிடம் படு மோசமாக தோற்க வேண்டும். அப்போது ஆப்கானிஸ்தான் அணி அரைஇறுதிக்கான போட்டியில் நீடித்தாலும் ஆறு புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும்.

ஆப்கானிஸ்தான் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் அணி

ஒருவேளை இரு போட்டிகளிலும் தோற்றால், ஆப்கானிஸ்தான் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறிவிடும்.

நியூசிலாந்து அணி தனக்கு, மீதமுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தது ஒரு போட்டியிலாவது தோல்வியடையவேண்டும். இது நடந்தால் நியூசிலாந்து அணியால் ஆறு புள்ளிகளுக்கு மேல் பெறமுடியாது.

இந்திய அணியோ மீதமுள்ள மூன்று போட்டிகளையும் அபராமாக வெல்ல வேண்டும்; 100 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் அல்லது இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 10-12 ஓவர்களில் சேசிங், என மிரட்டலான வெற்றி பெற வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்தியா ஆறு புள்ளிகளோடு கெளரவமான ரன்ரேட்டை பெற முடியும்.

இவை எல்லாம் நடக்கும்பட்சத்தில், அரைஇறுதிக்கு யார் தகுதி பெறுவது என்பதை ரன்ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

தற்போதைய சூழலில், ரன் ரேட்டில் ஆப்கானிஸ்தான் மிரட்டலான எண்களை கொண்டிருக்கிறது. அதாவது +3.097, இந்தியாவோ -1.287 எனும் நிலையில் உள்ளது.

நியூசிலாந்து ஏற்கனவே நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு கணித அடிப்படையில் சாத்தியம் தான் என்றாலும், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதே நிதர்சனம்.

இந்தியாவுக்கு ஏன் இந்த நிலை?

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி

151 ரன்கள் எடுத்தும் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தபோதே இந்தியாவுக்கு மெல்ல மெல்ல நிலைமை சிக்கலானது. குரூப் 12 சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஐந்து போட்டிகள் விளையாட வேண்டும் எனும் நிலையில், பாகிஸ்தான் சேஸிங்கில் ஆதிக்கம் செலுத்திய அந்த 20 ஓவர்களே இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பை கேள்விக்குறியாக்கிய முதல் படியாக அமைந்தது.

நியூசிலாந்துடனான ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு நாக் அவுட் போட்டி போலத்தான் கருதப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக வாழ்வா சாவா போட்டிகளில் இந்தியா அதிகளவு தோல்வியைச் சந்தித்து வந்தது; போதாக்குறைக்கு கடந்த 18 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தொடர் தோல்விகளைச் சந்தித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

அது டி20 போட்டியாக இருந்தாலும் சரி, 2019 உலகக் கோப்பை அரைஇறுதி ஆட்டமானாலும் சரி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆனாலும் சரி, நியூசிலாந்து அணி இந்திய அணியை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இந்தியாவும் சரி, நியூசிலாந்து அணியும் சரி ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடன் தனது முதல் போட்டியில் தோல்வி கண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை போட்டி நாள் வந்தது.

இந்த உலகக்கோப்பை தொடரில் டாஸ் மிகப்பெரிய பங்கு வகித்துவருகிறது.

'டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடு; பவர்பிளேவுக்குள் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்து, சேஸிங்கில் பதற்றப்படாமல் நேர்த்தியாக விளையாடி போட்டியை வெல்' - இதுதான் கிட்டத்தட்ட அனைத்து அணிகளின் தாரக மந்திரமாக உள்ளது. அந்த அளவுக்கு டாஸ் போட்டியின் முடிவுகளில் கடும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதற்கு ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனிபொழிவு ஏற்படுத்தும் தாக்கமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

விராட் கோலி டாஸ் சுண்டும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலி டாஸ் சுண்டும் காட்சி

ஞாயிறு மாலை இந்திய நேரப்படி ஏழு மணியளவில், மீண்டுமொருமுறை வாழ்வா சாவா போட்டியில் டாஸ் போடுவதற்கு விராட் கோலியும், கேன் வில்லியம்சனும் வந்தார்கள்.

கேன் வில்லியம்சன் டாஸ் வென்றார்; பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். அங்கேயே இந்திய ரசிகர்களுக்கு பேரிடி விழுந்தது.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷனும், புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூரும் சேர்க்கப்பட்டார்கள்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டை சமாளிக்கும் வண்ணம் இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார். ரோகித் ஷர்மா களமிறங்கவில்லை. இஷானுடன் ஜோடி சேர்ந்து கே.எல்.ராகுல் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டார்.

முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்தது இந்தியா. டிரென்ட் போல்ட்டை எதிர்கொண்ட இஷான் கிஷன் 4 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு பௌண்டரி அடித்தார் இஷான், ஆனால் அதே ஓவரில் அவரிடம் வீழ்ந்தார்.

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

திடீரென மூன்றாவது பேட்ஸ்மேனாக ரோகித் களமிறங்கினார். அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்தார், ஆனால் ஆடம் மில்னே தவறவிட்டதால் பிழைத்தார்.

முதல் 4 ஓவர்களில் 14 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஐந்தாவது ஓவரை வீச மில்னே வந்தார். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் குவித்தது ரோகித் - ராகுல். இணை.

ஆனால், பவர்பிளே முடியும் தருவாயில் ராகுலை இழந்தது இந்தியா.

ராகுலும் சரி, இஷான் கிஷனும் சரி பவர்பிளேவில் பௌண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. வில்லியம்சன் வைத்த பொறியில் இருவரும் வசமாகச் சிக்கினர்.

அதன்பிறகு ரோகித், கோலி, ரிஷப் பந்த் என வரிசையாக அவுட் ஆயினர்.

ஒரே ஒரு சிறிய புள்ளிவிவரம் இந்தியாவின் ஆட்டத்தையும் நியூசிலாந்து பௌலர்களின் ஆதிக்கத்தையும் விவரிக்கக்கூடும்.

'இந்தியா ஆறாவது ஓவரின் முதல் பந்தில் பௌண்டரி அடித்த பிறகு அடுத்த பௌண்டரி அடிக்க 70 பந்துகளை எடுத்துக் கொண்டது. அதாவது கிட்டத்தட்ட 12 ஓவர்கள்'.

நடுவரிசை ஓவர்களில் இந்திய வீரர்களை அடக்கியது நியூசிலாந்து அணியின் சுழற்பந்து படை. இறுதி ஓவரில் ஜடேஜாவின் விளாசலால் 11 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணிக்கு 111 ரன்களை வெற்றிக்கான இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

டிரென்ட் போல்ட் இந்தியாவுடனான ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ரோகித், கோலி என வலுவான பேட்ஸ்மேன்கள் இருவரின் விக்கெட்டையும் தன்வசப்படுத்தினார் நியூசிலாந்து அணிக்காக விளையாடும், இந்திய மண்ணில் பிறந்த இஷ் சோதி.

உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா எடுத்த இரண்டாவது குறைந்தபட்ச ரன்கள் இதுதான். இதை விட குறைவாக ரன்கள் எடுத்த போட்டியும் நியூசிலாந்துக்கு எதிரானதுதான். கடந்த 2016 உலகக் கோப்பையில் 79 ரன்களுக்கு அப்போது ஆல் அவுட் ஆனது.

பேட்டிங்கை முடித்தவுடன் சில நிமிடங்கள் இடைவெளிக்கு பிறகு ஃபீல்டிங் செய்ய வந்தது இந்திய அணி. நியூசிலாந்து வீரர்கள் பும்ராவின் ஓவர்களை தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் எந்தவித அசௌகர்யத்தையும் உணரவில்லை.

ஜஸ்ப்ரீத் பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஸ்ப்ரீத் பும்ரா

நேர்த்தியாக விளையாடி 15 ஓவர்கள் முடியும் முன்பே எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது நியூசிலாந்து.

நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொட்டதெல்லாம் பொன்னானது. அவர் எடுத்த அத்தனை முடிவுகளும் பலன் தந்தது.

அதற்கு நேர்மாறாக தொடக்க வீரரை மாற்றியது; வழக்கத்துக்கு மாறாக நான்காவது இடத்தில் களமிறங்கியது, ரோகித்தை இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறக்கியது, சுழற்பந்து வீச்சாளரிடம் முதல் ஓவரை கொடுத்தது என கோலி எடுத்த அத்தனை முடிவுகளும் உரிய பலன் தரவில்லை.

இந்திய அணி வீரர்களின் உடல் மொழி நேற்றைய ஆட்டத்தில் மிகவும் சோர்வாக இருந்தது; நம்பிக்கையற்ற தொனியே இருந்தது என சமூக வலைத்தளங்களில் பலரும் சலித்துக் கொண்டார்கள். அதை இந்திய அணித்தலைவர் விராட் கோலியே போட்டி முடிந்தபிறகு ஒப்புக்கொண்டார். துணிச்சலற்ற உடல்மொழியே தங்களிடம் இருந்தது என கூறினார்.

''இந்தியாவுக்காக நீங்கள் விளையாடும்போது கடும் எதிர்ப்பார்ப்பு இருக்கும்; அழுத்தங்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, நமது செயல்முறையை தொடரவேண்டும்,நேர்மறையாக கிரிக்கெட் விளையாடவேண்டும்'' என அப்போது பேசினார்.

அடுத்ததாக, ஆப்கானிஸ்தான் அணியை இரண்டு நாட்கள் இடைவெளியில் புதன்கிழமையன்று சந்திக்கவுள்ளது விராட் கோலி படை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :