மகாவீரர் நினைவு நாளில் கறிக்கடைகளை மூடுவது உணர்வை மதிப்பதா? உணவு உரிமையில் தலையிடுவதா?

இறைச்சி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

சமண மதத்தின் இறுதி தீர்த்தங்கரரான மகாவீரரின் நினைவு நாள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி வருகிறது. வழக்கமாக மகாவீரர் நினைவு நாளுக்கு பிறப்பிக்கப்படும் கறிக்கடை மூடல் உத்தரவு இந்த ஆண்டு தீபாவளி நாளில் கறி சாப்பிடத் தடையாக உருவானதால், சர்ச்சையானது.

ஆனால், தமிழ்நாடு அரசு தலையிட்டு இறைச்சிக் கடைகள் மூடப்படாது என்று அறிவித்தது.

'தீபாவளி என்பது பெரும் வணிகமாக இருக்கிறது. இறைச்சிக்குத் தடை விதிப்பதை இறைச்சிக்கும், தாவர உணவுக்கும் இடையிலான அரசியலாகத்தான் பார்க்கிறேன்' என்கிறார், எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அ.முத்துக்கிருஷ்ணன்.

மகாவீரரின் நினைவு நாள் வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரவுள்ளது. இந்த நாளை அரசு விடுமுறையாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அத்துடன் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடுவதற்கும் மத்திய, மாநில அரசுகள் வழக்கம் போல உத்தரவிட்டுள்ளன.

அதே நாளில் தீபாவளி பண்டிகை வருவதாலும், அந்தப் பண்டிகை தமிழ்நாட்டில் இறைச்சி உணவு விரும்பி உண்ணப்படும் நாளாக இருப்பதாலும் இறைச்சிக் கடை மூடல் அறிவிப்பு சர்ச்சையானது.

சென்னையில் நவம்பர் 4 அன்று இறைச்சிக் கடைகள் இயங்குவதற்கு சென்னை மாநகராட்சி முதலில் தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை பல்பொருள் அங்காடிகளில் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி கடைகள் திறக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்தது.

டி.ஆர்.பி.ராஜாவின் ட்வீட்

சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவு, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. மன்னார்குடி தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, சென்னை மக்களுக்கு விடுத்துள்ள டிவிட்டர் பதிவிலும், ` 4.11.21 அன்று மன்னார்குடியில் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு தீபாவளி அன்று காலை கறிக்குழம்பு மதியம் விரால் மீன் வருவல் பிளஸ் குழம்பு, இரவு ரத்தப் பொரியல் ஆட்டுக்கால் பாயா என அனைத்தும் உண்டு' எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலானது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஒருகட்டத்தில், ` தீபாவளி பண்டிகையன்று இறைச்சிக் கடைகள் இயங்கக் கூடாது எனக் கூறுவது சரியல்ல, மக்களின் உணவு உரிமையில் அரசு தலையிடக்கூடாது என்ற குரல்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், `மகாவீரர் நினைவு நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப்படக் கூடிய நடைமுறை, தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் உணர்வைக் கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்தும் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. அதேநேரம், ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளும் ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒருநாள் தானே கேட்கிறோம்"

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு, ஜெயின் சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய கோவை ராஜஸ்தானி சங்கத்தைச் சேர்ந்த `சுரபி' பங்கஜ், `` இது ஒரு உணர்ச்சிபூர்வமான ஒருநாள். இந்த ஒரு நாளில் மட்டும் இறைச்சிக் கடைகள் இயங்க வேண்டாம் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். `எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது, கொல்லக் கூடாது' என எங்கள் மதம் சொல்கிறது. அந்த நாளில் எந்தவொரு உயிரும் மரணிக்கக் கூடாது. மற்ற நாள்களில் இறைச்சிக் கடைகள் இயங்குவது என்பது அவரவரின் விருப்பத்தைப் பொறுத்தது" என்கிறார்.

ஆடு

பட மூலாதாரம், Getty Images

மேலும், `` இறைச்சிக் கடைகளை மூடுவது என்பது நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளும் எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆதரவு தெரிவிக்கின்றன. திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாள்களில் எல்லாம் மதுபானக் கடைகள் எப்படி மூடப்படுகிறதோ, அதேபோல்தான் இந்த நாளும். நாங்கள் ஒருநாள்தான் வேண்டாம் என்கிறோம். மற்ற நாள்களில் கேட்பதில்லை. இதனை அரசு பரிசீலிக்கும் என நம்புகிறோம்" என்கிறார்.

அசைவம் என்பது அசுத்த உணவா?

"இந்தியா என்பது மாமிசம் உண்ணக் கூடிய தேசமாக உள்ளது. இங்கு 92 சதவிகிதம் பேர் அசைவம் சாப்பிடும் பண்பாட்டை உடையவர்கள். இங்கு அசைவத்தை உணவில் இருந்து பிரிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் இங்கு எந்த நாளிலும் அசைவம் தடை செய்யப்படக் கூடாது. அந்தநாளில் ஒருவருக்கு வாங்குவதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் அதனைத் தவிர்த்துவிடலாம். ஆனால், சாப்பிடுகிறவர்கள் மீது அதனைத் திணிப்பது என்பது தவறு" என்கிறார் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்.

தொடர்ந்து பேசியவர், `` இங்கு உணவிலும் தொடர்ந்து பாகுபாட்டைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அவ்வாறு கொண்டு வர முயற்சிப்பவர்கள், புலால் மறுக்கும் பிராமணர்களாகவும் இருக்கலாம், சமணர்களாகவும் இருக்கலாம் அல்லது மரக்கறியை சாப்பிடுகிற யாராகவும் இருக்கலாம். `இது எங்கள் உணவு, சுத்தமாக உணவை சாப்பிடுகிறோம், நீங்கள் சாப்பிடுவது அசுத்தம்' எனத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதன்மூலம் தாவர உணவு என்பது மேன்மையான உணவைப் போலவும் புலால் என்பது தீட்டான உணவு என்பதைப் போலவும் கருத்தைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தாவர உணவின் பெருமைகளைப் பேசுகிறார்கள்.

அவித்த முட்டையும் ஆளுநர் மாளிகையும்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள், `அவித்த முட்டையைக்கூட கொண்டு வரக் கூடாது' என உத்தரவிட்ட தகவல் வெளியானது. சில தனியார் நிறுவனங்களிலும் இதேபோன்ற தடை வந்தது. நிறைய பள்ளிகளில், `மதிய உணவில் அசைவத்தைக் கொண்டு வரக் கூடாது' எனக் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்த நாட்டில் மைனாரிட்டியாக உள்ள மக்கள்தான் புலால் மறுத்து உண்கின்றனர். அவர்கள் தொடர்ந்து இறைச்சி உண்ணும் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக பகிரங்கமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். உதாரணமாக, உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், எங்கும் இல்லாத கட்டுப்பாடாக இந்தியாவில், `தடுப்பூசி போட்டுக் கொண்டால் அசைவம் சாப்பிடக் கூடாது' என்கின்றனர். இது உலகத்தில் எங்குமே இல்லாத ஒன்று. தடுப்பூசியை கண்டுபிடித்தவர்களே இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை" என்கிறார்.

இறைச்சி

பட மூலாதாரம், Getty Images

`` தீபாவளி என்பது இறைச்சி சாப்பிடுவதற்கான பண்டிகையாக உள்ளது. பெரும்பான்மையான மக்களின் விருப்பமாகவும் அது உள்ளது. இவ்விரு தினங்களும் ஒரேநாளில் வரும்போது பெரும்பான்மை மக்களின் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இதே மகாவீர் நினைவு தினம் வேறொரு நாளில் வந்தால் நாங்கள் எதிர்க்கப் போவதில்லை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், `இந்தத் தடையானது மீன், கோழி ஆகியவற்றுக்குப் பொருந்தாது' என்கின்றனர்.

முதல் நாளே வெட்டுவது சரியா?

`மகாவீரர் நினைவு நாளில் இறைச்சி வெட்டக் கூடாது' என்றுதான் இருக்கிறது. அதையே, `முதல்நாளில் வெட்டி பதப்படுத்தியதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்கின்றனர். டாஸ்மாக் கடைகளை அடைத்தாலும் எப்படி மது கிடைக்கிறதோ, அதேபோல், கடைகளை மூடினாலும் இறைச்சி கிடைக்கத்தான் போகிறது. ஆனால், எதற்காக மக்கள் அவதிப்பட வேண்டும்? தீபாவளி என்பது பெரும் வணிகமாக இருக்கிறது. சைவம், அசைவம் ஆகியவற்றுக்கு இடையிலான அரசியலாகத்தான் இதனைப் பார்க்கிறேன். ஒன்றை அழிக்க நினைப்பதன் மூலம் அதனை உருவாக்கவே செய்கிறார்கள்" என்கிறார்.

இறைச்சி

பட மூலாதாரம், Getty Images

"இறைச்சி சாப்பிடுகிறவர்களின் உரிமையை மறுப்பது தவறுதான். அதனால்தான் சரிசமமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஜெயின் சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் இறைச்சியை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கக்கத்தது. வரும் ஆண்டுகளிலும் இதேபோன்ற நிலையே தொடரும்" என்கிறார் தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் அரசு வழக்கறிஞருமான வீ.கண்ணதாசன்.

மேலும், "தீபாவளிப் பண்டிகையன்று சில இடங்களில் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சென்னை உள்பட எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீபாவளியை அசைவ உணவுடன்தான் கொண்டாடுவார்கள். வடநாட்டில் கொண்டாடுவதைப் போல தமிழ்நாட்டில் தீபாவளியை கொண்டாடுவதில்லை. இருப்பினும், இறைச்சி சாப்பிடுகிறவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தடை நீக்கப்பட்டது" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :