பாலுறவு இல்லாமல் ஆண் மரபணு இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்த அமெரிக்க பறவை 'கலிபோர்னியா கான்டோர்'

பட மூலாதாரம், Getty Images
கலிபோர்னியா கன்டோர் என்ற இனத்தை சேர்ந்த இரண்டு பெண் பறவைகள் ஆண் துணை இல்லாமல் மட்டுமல்ல, ஆண் மரபணு டி.என்.ஏ. இல்லாமலேயே முட்டையிட்டு குஞ்சு பொறித்திருப்பதை அமெரிக்க காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கலிபோர்னியா கான்டோர் என்பது அழிவின் விளிம்பில் இருக்கிற ஓர் உயிரினம்.
கலிபோர்னியா கான்டோர்கள் பார்த்தனோஜெனசிஸ் அல்லது புணர்ச்சியற்ற இனப்பெருக்கம் செய்ய வல்லவை என்ற கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு வியப்பளித்துள்ளது.
வேறு சில பறவை இனங்களிலும், பல்லி, பாம்பு, சுறா ஆகியவற்றிலும் மீன் இனங்களிலும் புணர்ச்சியற்ற இனப்பெருக்கம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் தென் மேற்குப் பகுதியிலும், மெக்சிகோவிலும் சுமார் 500 கலிபோர்னியா கான்டோர்கள் மட்டுமே உள்ளன.
1980களில் காட்டுப்பகுதியில் 2 டஜனுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்தப் பறவைகள் இருந்தன. உயிரினக் காப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கலிபோர்னியா கான்டோர் புணர்ச்சியற்ற இனப்பெருக்கம் செய்வதை சான் டியாகோ உயிரியல் பூங்கா காட்டுயிர் கூட்டணி என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது. அதன் ஆய்வு கட்டுரை சக வல்லுநர்களால் சீராய்வு செய்யப்பட்டு American Genetic Association's Journal of Heredity என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
காட்டில் இருந்து பிடிக்கப்பட்ட பறவைகளை தொடர்ந்து மரபணு ஆய்வுக்கு உட்படுத்தியது இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த உதவியது என ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர். 2001 மற்றும் 2009ம் ஆண்டுகளில் பொரிந்து வெளியான இரண்டு ஆண் குஞ்சுகளுக்கு அவற்றின் தாயின் மரபணு மட்டுமே இருந்ததையும், அவற்றின் தந்தையிடம் இருந்து பெறப்பட்டதாக எந்த மரபணுவும் அவற்றிடம் இல்லாமல் இருந்ததையும் இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

இனப்பெருக்கத் தொகுப்பில் இருந்த 467 ஆண் கான்டோர் பறவைகளும் பரிசோதிக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி முடிவு மிகவும் தனிச்சிறப்பானதாக கருதப்படுவதற்கு இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. இனப்பெருக்கத்துக்கு ஆண் இருந்தபோதும், பெண் இப்படி புணர்ச்சியற்ற இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது இப்போதுதான் பறவை இனங்களிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புணர்ச்சியற்ற இனப்பெருக்கம் என்பது மிக மிக அரிதாக நிகழ்வது. ஆனால், பிற உயிரினங்களில் இது நிகழ்ந்திருப்பது தொடர்பான பதிவுகள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பெண் உயிரினத்தில் உள்ள உயிரணு ஒன்று விந்தணுவைப் போல நடந்துகொண்டு முட்டையுடன் இணைந்து இது போன்ற புணர்ச்சியற்ற இனப் பெருக்கத்தை நிகழ்த்தும். வழக்கமாக, இனப்பெருக்கத்துக்கு ஆண்கள் குறைவாக உள்ள அல்லது சுத்தமாகவே இல்லாத உயிரினங்களில் இது நிகழும்.
"இது உண்மையில் ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு," என்கிறார் இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர் ஆலிவர் ரைடர். சான் டியாகோ உயிரியல் பூங்கா காட்டுயிர் கூட்டணியில் உயிரினக் காப்புத் துறையின் இயக்குநராக உள்ள இவர் ஓர் அறிக்கையில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
"புணர்ச்சியற்ற இனப்பெருக்கத்துக்கான ஆதாரத்தை நாங்கள் இங்கே தேடிக்கொண்டிருக்கவில்லை. எதிர்பாராத விதமாக இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. பறவைகளின் பெற்றோரை உறுதி செய்வதற்காக நாங்கள் நடத்தும் வழக்கமான பரிசோதனையின்போது இதனை நாங்கள் உறுதி செய்தோம்," என்கிறார் அவர்.
துரதிருஷ்டவசமாக அந்த இரண்டு குஞ்சுகளுமே அதன் பிறகு இறந்துவிட்டன. ஒரு குஞ்சு 2003ம் ஆண்டு இரண்டு வயதிலும், இன்னொரு குஞ்சு 2017ம் ஆண்டு ஏழு வயதிலும் இறந்தன.
இரண்டு தாய்களும், இதற்கு முன்பு சாதாரண முறையில் புணர்ச்சி மூலம் இனப்பெருக்கம் செய்துள்ளன.
ஒரு தாய்ப்பறவை 11 குஞ்சுகளைப் பொரித்தது. மற்றொரு தாய்ப் பறவை ஆண் பறவையோடு 20 ஆண்டுகள் இணை சேர்ந்து 23 குஞ்சுகளைப் பொரித்தது. அதுவும், புணர்ச்சியற்ற இனப்பெருக்கம் செய்த பிறகு மீண்டும் ஆண் பறவையோடு கூடி இரண்டு முறை முட்டையிட்டு குஞ்சு பொரித்தது.
பிற செய்திகள்:
- தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்க களம் இறங்கியுள்ள ராமநாதபுரம் சிறார்கள்
- பாமாயில் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது எப்படி?
- “பணக்கார நாடுகள் தங்களின் தடுப்பூசி மருந்தை ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” இந்தோனீசிய அதிபர்
- ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ரகசியப் போர் தொடுக்கும் தாலிபன்
- பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எவ்வாறு செயல்படுகிறது?
- ’என்னங்க சார் உங்க சட்டம்’: சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













