பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எவ்வாறு செயல்படுகிறது?

பட மூலாதாரம், ISPR
- எழுதியவர், உமர் ஃபாரூக்
- பதவி, பாதுகாப்பு ஆய்வாளர், பிபிசி உருதுவுக்காக
2003 மார்ச் 1ம் தேதி, பாகிஸ்தான் உளவு அமைப்பான இன்டர்சர்வீசஸ் இன்டலிஜென்சை (ஐ.எஸ்.ஐ.) சேர்ந்த இரண்டு டஜன் உறுப்பினர்கள், காலித் ஷேக் முகமதுவை கண்டோன்மென்ட் நகரமான ராவல்பிண்டியின் ஒரு வீட்டில் இருந்து கைது செய்தனர். அமெரிக்க நகரங்கள் மீதான செப்டம்பர் 11 தாக்குதல்களை திட்டமிட்டதாக காலித் ஷேக் முகமது மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதே நாள் மாலையில், பாகிஸ்தான் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் குழுவை இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தலைமையகத்திற்கு ஐஎஸ்ஐ அழைத்தது. இந்த கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அளிக்கவே இந்த செய்தியாளர் கூட்டம் கூட்டப்பட்டது.
ஐ.எஸ்.ஐ அமைப்பு தனது சிறப்பு நடவடிக்கை குறித்து வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு விளக்குவது அரிதாகவே நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவமும் அசாதாரணமானதுதான். இதன் காரணமாக ஐஎஸ்ஐ பற்றிய புதிய விவாதம் எழுந்தது.
ராவல்பிண்டியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து காலித் ஷேக் முகமது கைது செய்யப்பட்டதை செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர்.
இந்த வீடு, ஜமாத்-இ-இஸ்லாமி பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு பிரபலமான மத உணர்வுள்ள குடும்பத்திற்கு சொந்தமானது. ஷேக்கை இந்த வீட்டில் தங்க வைத்தவர் அகமது அப்துல் குத்தூஸ் ஆவார். அவரது தாய் ஜமாத்-இ-இஸ்லாமியின் தீவிரத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டின் போது அல்-காய்தா அல்லது பிற பயங்கரவாத குழுக்களுடன் ஜமாத்-இ-இஸ்லாமியின் சாத்தியமான தொடர்புகள் குறித்து , ஐஎஸ்ஐயின் துணை தலைமை இயக்குநரிடம் செய்தியாளர்கள் கேட்கத் தொடங்கினர்.
கடற்படை அதிகாரியாக பணியாற்றியிருந்த, ஐஎஸ்ஐயின் துணை தலைமை இயக்குநர், அன்றைய தினம் செய்தியாளர்களிடம், "ஒரு கட்சியாக ஜமாத்-இ-இஸ்லாமிக்கு, அல்-காய்தா அல்லது வேறு எந்த பயங்கரவாதக் குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினார்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ஏஜென்சிகளான சிஐஏ மற்றும் எஃப்பிஐ ஆகியவற்றுடன் டஜன் கணக்கான கூட்டு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டது ஐஎஸ்ஐ. மறுபுறம் பாகிஸ்தானுக்குள் உள்ள சமயக்குழுக்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தன.

பட மூலாதாரம், Government of Pakistan
'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' நடந்த நாட்களில், அது ராணுவப் போராக இல்லாமல், உளவுத்துறை தகவல்களின் போராக மாறியதாக பல ராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உளவுத்துறை ஒத்துழைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் வெற்றி சுட்டிக்காட்டுகிறது.
9/11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 'உளவுத்துறை ஒத்துழைப்பு' ஒப்பந்தம் கையெழுத்தானது. அது ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, அல்-காய்தாவுடன் தொடர்புடைய கூறுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய முயன்ற நேரத்தில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
ஆரம்ப ஆண்டுகளில், பெரும்பாலான அல்-காய்தா தலைவர்கள் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் இருந்து கைது செய்யப்பட்டனர். 9/11 தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட காலித் ஷேக் முகமது ராவல்பிண்டியில் இருந்தும், ரம்சி பின்-அல்-ஷீபா கராச்சியிலிருந்தும் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் நகரங்களில் அல்-காய்தாவுடன் தொடர்புடையவர்களை இரு நாடுகளும் சுற்றிவளைத்துப்பிடித்த நேரத்தில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உளவுத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் வெற்றியடைந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உளவுத்துறை தகவல்கள் பகிர்வு, சிக்கல்களை ஏற்படுத்தவில்லை என்பதை, முக்கிய பாகிஸ்தானிய நகரங்களில் இருந்து நன்கு அறியப்பட்ட அல்-காய்தா தலைவர்கள் கைதுசெய்யப்பட்டது காட்டுகிறது. ஏனெனில் அல்-காய்தாவுடன் தொடர்புடையவர்கள் எந்த சொல்லத்தக்க எதிர்ப்பும் இல்லாமல் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதான விமர்சனம்
இருப்பினும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பழங்குடியினப் பகுதிகளில் கவனம் செலுத்தியதால், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் நடைமுறை மற்றும் அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டன. பழங்குடியினர் பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தங்கள், நடைமுறைச் சிக்கல்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.
இந்த ஒப்பந்தம், அப்பகுதியில் பதுங்கியிருந்த அல்- காய்தா தீவிரவாதிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது. நடைமுறை அளவில், அமெரிக்க ராணுவம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் உடன்படவில்லை. பாகிஸ்தானின் 'இரட்டை வேட' கொள்கையை அமெரிக்கா விமர்சித்ததில் இருந்து இது தெளிவாகிறது.

பட மூலாதாரம், Prime Minister's Office, Pakistan
ஐ.எஸ்.ஐ.யின் இரட்டைக் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்க இருப்பை எதிர்க்கும் சமயவாத சக்திகளுடன் அதன் தொடர்புகள் குறித்து வாஷிங்டன் அதிருப்தி அடைந்தது. வாஷிங்டன் தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோதும் கூட, இந்த தொடர்புகள் தொடர்ந்து நீடித்தன.
இதற்கிடையில், நாட்டில் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாக, ஐஎஸ்ஐ மற்றும் அதன் தலைமை மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. கூடவே 2018 நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் வெற்றிக்கு பின்னால் மூளையாக செயல்பட்டார் என்று ஐஎஸ்ஐ யின் தலைமை இயக்குனராக தனது பதவிக்காலத்தை முடித்தவர் மீதும் அவை குற்றம் சுமத்தின.
பாகிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் இந்த ஏஜென்சியில் அப்படி என்ன இருக்கிறது? அரசியல் சூழலில் கடத்தல், கொலை, மிரட்டல் போன்றவற்றுக்கு ஐஎஸ்ஐ மீது ஏன் குற்றம் சுமத்தப்படுகிறது?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது எளிதல்ல. ஆனால் , ஐஎஸ்ஐ, பாகிஸ்தானின் "முக்கிய" உளவுத்துறை நிறுவனம் என்றும் பிராந்தியத்தில் நடக்கும் அனைத்தையும் பற்றிய தகவல்கள் அதனிடம் இருக்கும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஐஎஸ்ஐ அதிகாரி தெரிவித்தார்.
"ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தால் பாகிஸ்தான் அதில் இடம்பெற்றுள்ளது. காபூலில் தாலிபன்கள் ஆட்சி அமைத்தாலும், உலகம் எங்களைப்பார்க்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் வெளியேற்றப்படும் சம்பவம் நிகழ்ந்தால் எங்கள் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் எந்த விஷயத்தைப் பார்த்தாலும் அதில் எங்கள் முக்கியத்துவம் தெரியும்."என்று அவர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு , ஐஎஸ்ஐ யின் அப்போதைய தலைமை இயக்குனர் இரண்டு முறை காபூலுக்குச் சென்றார். அங்கு அவர் மூத்த தாலிபன் தலைவர்களை சந்தித்தார். அதே சமயம் ஆப்கானிஸ்தான் நிலவரத்தை மையமாக வைத்து பாகிஸ்தான், வாஷிங்டனில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
1979 முதல் 2021 வரை, ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் பாகிஸ்தான் மீது அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை கையாள்வதில் ஐ.எஸ்.ஐ. மும்முரமாக இருந்தது.
"பெரும் இழப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் நிலைமை காரணமான எதிர்மறையான தாக்கத்தில் இருந்து பாகிஸ்தானை காப்பாற்றியது, ஐஎஸ்ஐயின் மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. கடந்த 40 வருடங்களாக இந்தப்பிராந்தியத்தில் பாதுகாப்பு இலக்குகளை நாங்கள் அடைந்துள்ளோம்,"என்று தனது பெயரை வெளியிட விரும்பாத ஐஎஸ்ஐயின் முன்னாள் துணை இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஐஎஸ்ஐ கட்டமைப்பு
ஐஎஸ்ஐயின் முதன்மைப் பொறுப்பு, நாட்டின் ஆயுதப் படைகளின் நடைமுறை மற்றும் கருத்தியல் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். முப்படை உளவு அமைப்பு என்ற அதன் பெயர் இதை தெளிவாக விளக்குகிறது. ராணுவத்தினர் அல்லாத பொதுமக்கள்கூட ஐஎஸ்ஐயில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். ஆனால் இந்த ஏஜென்சியின் நிறுவன கட்டமைப்பில் அவர்களுக்கு அதிக அதிகாரம் இல்லை.
ஆசிரியர் டாக்டர் ஹெய்ன் எச். கெஸ்லிங் இந்த நிறுவனத்தின் ' கட்டமைப்பு விளக்கப்படத்தை' தனது 'ஐஎஸ்ஐ ஆஃப் பாகிஸ்தான்' என்ற புத்தகத்தில் சேர்த்துள்ளார்.
ஜெர்மன் அரசியல் நிபுணரான டாக்டர் கெஸ்லிங், 1989 முதல் 2002 வரை தான் பாகிஸ்தானில் வாழ்ந்ததாக அந்தப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார். உளவுத்தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்தும் நவீன அமைப்பு இது என்று அவர் தனது புத்தகத்தில் விளக்குகிறார். எந்த நவீன உளவுத்துறை நிறுவனத்தையும் போலவே, ஐஎஸ்ஐயிலும், ஏழு இயக்குநரகங்கள் மற்றும் துறைகளின் பல அடுக்குகளுடன் கூடவே, தொடர்புடைய பல்வேறு பிரிவுகளும் உள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.
கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஐஎஸ்ஐயின் நிறுவன கட்டமைப்பில் ராணுவம் ஆதிக்கம் செலுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகங்களில் உள்ள ராணுவ நிலைகளுக்கான இணைப்பு மையமாக, ஐஎஸ்ஐ தலைமையகம் செயல்படுகிறது. அதேபோல் திரைக்குப் பின்னால், பிரதமரின் உளவுத்துறையின் தலைமை ஆலோசகராகவும் அது பணியாற்றுகிறது.
ஆயுதப்படை, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றுக்கு ஒரு தனி உளவு அமைப்பு இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் உளவுத்துறைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அந்தந்தப்படைகளுக்கு தேவையான தகவல்களை சேகரித்து இந்த அமைப்பு தனது கடமையை செய்கிறது.
சில சமயங்களில் ஐ.எஸ்.ஐ மற்றும் இந்த ராணுவ உளவு அமைப்புகளாலும் ஒரே மாதிரியான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், எதிரிகளின் நடமாட்டத்தையும் கண்காணிக்கின்றன. ஆனால் மற்ற உளவு அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் ஐ.எஸ்.ஐ. ராணுவ கட்டமைப்பில் மிகப்பெரிய, மிகவும் பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த உளவு நிறுவனமாக கருதப்படுகிறது.
ஐஎஸ்ஐ, பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் விரிவான உளவுத்துறை அமைப்பாகக் கருதப்படுகிறது. ஆனால் உள்ளூர் ஊடகங்களிலோ அல்லது தனியார் துறையிலோ அதன் திறன் பற்றி யாருக்கும் அதிகமாகத்தெரிவதில்லை.
எஸ்ஐயின் வரவு செலவுத் திட்டம் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்பட்டதில்லை. ஆனால் வாஷிங்டனை தளமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ஆய்வு, ஐஎஸ்ஐ யில் 10,000 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர் என்று கூறுகிறது. இந்த எண்ணிக்கையில் தகவல் தருபவர்கள் சேர்க்கப்படவில்லை. ஆறு முதல் எட்டு பிரிவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
'எதிர் புலனாய்வு நடவடிக்கை'
ஐஎஸ்ஐ இன் "நிறுவன வடிவமைப்பு" அதை முதன்மையாக "எதிர்-புலனாய்வு நடவடிக்கைகளில்" கவனம் செலுத்தும் உளவு அமைப்பாக ஆக்குகிறது என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு என்ன காரணம்?
ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஃபிரோஸ் எச் கான், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளில் முக்கியமான பதவிகளில் பணியாற்றிய அதிகாரி மற்றும் ' ஈட்டிங் க்ராஸ்' என்ற புத்தகத்தையும் எழுதியவர்.
"பாகிஸ்தானின் மூன்றாவது ராணுவ ஆட்சியாளரான ஜெனரல் ஜியா-உல்-ஹக், ஆப்கானிஸ்தானில் சோவியத் தலையீட்டால் கவலையுற்றார். அதிகார போதையில் இருக்கும் ஒரு வல்லரசு, நாட்டின் எல்லையில் இருந்ததுதான் அதற்கு முக்கியக்காரணம். அத்தகைய சூழ்நிலையில் கார்ட்டர் நிர்வாகத்தின் ராணுவ மற்றும் நிதி உதவி நிம்மதியான விஷயமாக இருந்தது, ஆனால் ராணுவ சர்வாதிகாரிக்கு அமெரிக்கா வழங்கிய சலுகை மற்றொரு கவலையை ஏற்படுத்தியது," என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"அமெரிக்க உதவி, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு கூடவே ராணுவ திறன்களை மேம்படுத்தும். ஆனால் மறுபுறம், அமெரிக்காவுடனான உளவுத்துறை ஒத்துழைப்புக்கு கூடுதல் தகவல் மற்றும் பாகிஸ்தானுக்குள் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவைப்படும். இதனால் பாகிஸ்தானின் உள்நாட்டு ரகசியங்களைப் பாதுகாப்பது கடினமாக இருக்கும்."
" ஜெனரல் ஜியா, பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளை "நடுநிலைப்படுத்த" முடிவு செய்தார் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்புகளின் திறன்களை 'எதிர்-புலனாய்வு நடவடிக்கைகளில்' மேம்படுத்தவும் தீர்மானித்தார்," என்று பிரிகேடியர் ஃபிரோஸ் எழுதுகிறார்.
"இதன் பொருள், இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் (ஐஎஸ்ஐ) எதிர் புலனாய்வுப் பிரிவிற்கு, ஒரு பெரிய பட்ஜெட்டை வழங்குவதாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த நாட்களில் அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கைகள் பெரும்பாலும் பாகிஸ்தானின் ரகசிய அணுசக்தி திட்டத்தைப் பற்றியது. மறுபுறம், ஆப்கானிஸ்தான் போரின் காரணமாக, ஏராளமான மேற்கத்திய உளவுப் பணியாளர்கள் நிரந்தரமாக இஸ்லாமாபாத்தில் குடியேறினர். அப்போதைய ராணுவ அரசு, சூழ்நிலைக்கு ஏற்ப, 'எதிர்- புலனாய்வு' நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில், பாகிஸ்தானின் உளவுத்துறையை உருவாக்கியது.
ராணுவ அகராதி "எதிர் புலனாய்வு" என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது: எதிர் உளவுத் தகவல்களைப் பெறுதல் மற்றும் வெளிநாட்டு அரசுகள், வெளிநாட்டு அமைப்புகள், வெளிநாட்டு தனிநபர்கள் அல்லது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் அல்லது அவற்றின் முகவர்கள் சார்பாக செய்யப்படும் உளவுவேலைகள், பிற உளவுத்துறை ஏஜென்சிகளின் செயல்பாடுகள், நாசவேலை அல்லது கொலைச் செயல்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்."
"ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயை , மற்ற அனைத்து உளவுத்துறை நிறுவனங்களுக்கும் மேலாக அல்லது மற்றவற்றை விட உயர் மட்டத்தில் இருக்கும் வகையில் 'எதிர்-புலனாய்வு' அமைப்பாக உருவாக்க விரும்பினார். எனவே, பாகிஸ்தானின் முப்படை உளவு அமைப்பின் கட்டமைப்பு, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர் புலனாய்வில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாகவும், வெளிப்படைத்தன்மையுடன் வளர்ச்சியடையும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று பிரிகேடியர் கான் எழுதினார்.
"ஜியா-உல்-ஹக்கிடம் மேலே தொடர்வதற்கு சிறிய வழியே இருந்தது. ஆனால் அவர் ஆபத்தான பாதையை பின்பற்ற வேண்டியிருந்தது. அணுசக்தி பிரச்சனையை தூதாண்மை வழியில் குறைத்திருக்கலாம். அமெரிக்க உளவுத்துறை மூலம் தகவல்களைப் பெறுவதில் ஆபத்து இருந்தது. இந்த பிரச்சனைகள் ' சிறந்த எதிர் புலனாய்வு' மூலம் தீர்க்கப்பட்டிருக்கலாம்."
'கூட்டு எதிர் புலனாய்வு பணியகம்'
இன்றுவரை ஐ.எஸ்.ஐ-க்குள், ஒரு எதிர் புலனாய்வு இயக்குனரகம் உள்ளது. அதற்கு 'ஜாயின்ட் கவுண்டர் இன்டலிஜென்ஸ் ப்யூரோ' ( கூட்டு எதிர் புலனாய்வு பணியகம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இயக்குநரகமாகும்.
துணை தலைமை இயக்குநர் 'எக்ஸ்டெர்னல்', இந்தப்பணியகத்தை கட்டுப்படுத்துகிறார் என்று ஜெர்மன் அரசியல் விஞ்ஞானி டாக்டர் ஹெய்ன் ஜி. கெய்ஸ்லிங், தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் தூதர்களைக் கண்காணிக்கும் பொறுப்பும், மத்திய கிழக்கு, தெற்காசியா, சீனா, ஆப்கானிஸ்தான், முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் மத்திய ஆசியாவின் ஒன்பது சுதந்திர நாடுகளிலும் உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பும் இதற்கு உள்ளது."
கூட்டு எதிர் புலனாய்வுப் பணியகம் (JCIB) நான்கு இயக்குநரகங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
• ஒரு இயக்குனரகம் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் கள கண்காணிப்பை செய்கிறது.
• இரண்டாவது இயக்குனரகத்திற்கு வெளிநாடுகளில் அரசியல் உளவுத் தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு உள்ளது.
• மூன்றாவது இயக்குனரகத்தின் பொறுப்பு, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உளவுத்தகவல்களை பெறுவதாகும்.
• நான்காவது இயக்குனரகம், உளவுத்துறை விவகாரங்களில் பிரதமரின் உதவியாளராக பணியாற்றுகிறது. இது ஐஎஸ்ஐயின் மிகப்பெரிய இயக்குநரகம் ஆகும். அதன் பொறுப்புகளில் ஐ.எஸ்.ஐ பணியாளர்களை கண்காணிப்பதும், அரசியல் செயல்பாடுகளை கண்காணிப்பதும் அடங்கும். இது பாகிஸ்தானின் எல்லா முக்கிய நகரங்களிலும் பிராந்தியங்களிலும் உள்ளது.
ஐஎஸ்ஐ அமைப்பின் மற்ற இயக்குனரகங்கள்
டாக்டர் ஹெய்ன் கெஸ்லிங்கின் புத்தகத்தின்படி, "ஐஎஸ்ஐயின் இரண்டாவது பெரிய இயக்குநரகம் சந்தேகத்திற்கு இடமின்றி கூட்டு புலனாய்வுப் பணியகம் (JIB) ஆகும். இது அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஆப்கானிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் விஐபி பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான அரசியல் விஷயங்களைக் கையாளுகிறது."

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களில் பணியாற்றும் ராணுவ அதிகாரிகள் (Military attache) மற்றும் ஆலோசகர்கள் தொடர்பான விஷயங்களையும் பதவிகளையும் JIB கட்டுப்படுத்துகிறது.
டாக்டர் கெஸ்லிங் தனது புத்தகத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு, கூட்டு உளவுத்துறை (வடக்கு) பொறுப்பு என்று எழுதியுள்ளார். அதன் முதன்மைப் பொறுப்பு உளவுத்துறை தகவல்கள் சேகரிப்பதாகும். அவர் தனது புத்தகத்தில், "ஜம்மு-காஷ்மீரில் உளவுத் தகவல்களை சேகரிக்கும் பணியும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு நாசவேலை மற்றும் நாசகார நடவடிக்கைகளுக்கு பயிற்சி, ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் நிதியை வழங்குகிறது,"என்று குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக பாகிஸ்தான் மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்படும்போதிலும், பாகிஸ்தான் அதை எப்போதும் மறுத்து வருகிறது.
டாக்டர் கெஸ்லிங் தனது புத்தகத்தில், "கூட்டு புலனாய்வு மெசிலியனஸ்" ன் பொறுப்பு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உளவு பார்ப்பது மற்றும் முகவர்கள் மூலமாக நேரடியாக 'ISI தலைமையகம்' அல்லது வெளிநாடுகளில் நிலைகொண்டுள்ள தன் அதிகாரிகளின் உதவியுடன் மறைமுகமாக ரகசிய தகவல்களை சேகரிக்கிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தனது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி பெற்ற உளவாளிகளைப் பயன்படுத்துகிறது," என்று எழுதியுள்ளார்.
'விரிசல்'
பாகிஸ்தான் ராணுவத்தின் கீழ் ஐஎஸ்ஐ பணிபுரிகிறது. இதனிடம் அதிக ராணுவ வலு உள்ளது. இருப்பினும், இரண்டிற்கும் இடையிலான உறவில் சில நேரங்களில் 'விரிசல்' காணப்படுகிறது. இது கடந்த காலங்களில் பல முறை வெளிப்படையாக தெரியவந்தது என்று ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1999 அக்டோபர் 12 ஆம் தேதி நடந்த கிளர்ச்சி நவாஸ் ஷெரீப்புக்கு எதிரானது மட்டுமல்ல, ஐஎஸ்ஐ அமைப்புக்கும் எதிரானது. ஐஎஸ்ஐயின் தலைமை இயக்குநர் (லெப்டினன்ட் ஜெனரல் - ஓய்வு) ஜியாவுதீன் பட் உடன் அவர்கள் இருப்பதுபோலவே காணப்பட்டாலும் கிளர்ச்சி வெடித்தது என்று ராணுவ வல்லுநர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டி, அதே ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரி தனது பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சுட்டிக்காட்டினார்.
முஷாரப்பின் ஆட்சிக்காலத்தில் ஐ.எஸ்.ஐ. தன் ஊடகப் பிரிவைத் தொடங்கி, உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டபோது, இரண்டாவது முறையாக இந்த "விரிசல்" வெளிப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்..
"ஐஎஸ்ஐயின் ஊடகப் பிரிவு சில சமயங்களில் சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஐ.எஸ்.பி.ஆர். என்ன செய்கிறதோ அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இந்த பிரிவு மற்றும் ஐ.எஸ்.பி.ஆரின் சமமான அழுத்தத்தை ஊடகங்கள், எதிர்கொள்ள வேண்டியுள்ளது," என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- 'எளிமை எம்எல்ஏ' நன்மாறன் காலமானார் - இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர்
- பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - என்.ராம்
- சிக்கலில் சீனா: மின்சாரத்துக்கு அடுத்து டீசலுக்கும் தட்டுப்பாடு
- இயற்கைக்கு பாதிப்பின்றி உடலுறவு கொள்வது எப்படி? பாலுறவும் பருவநிலை மாற்றமும்
- ஒரே நாடு ஒரே சட்டம் - "தமிழ் இனப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணம்": விக்னேஷ்வரன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








