1965 இந்தியா - பாகிஸ்தான் போர்: படை எடுத்து வந்த பாகிஸ்தான் பீரங்கிகள் - கால்வாயை திறந்துவிட்ட இந்தியா

பீரங்கிகள்

பட மூலாதாரம், BHARAT RAKSHAK

படக்குறிப்பு, பீரங்கிகள்
    • எழுதியவர், ரெஹான் ஃபஸல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி காலை, அசல் உத்தர் மற்றும் சீமா பகுதிக்கு இடையில், பருத்தி மற்றும் கரும்பு வயல்களில் ஒளிந்திருந்த 4 கிரெனேடியர் படை வீரர்களுக்கு பாகிஸ்தானின் பேட்டன் டாங்குகளின் சத்தம் கேட்டது.

அப்துல் ஹமீத், சாலையில் இருந்து 30 மீட்டர் தொலைவில், பருத்திச் செடிகளுக்கு இடையே ஒரு ஜீப்பில் தனது துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டிருந்தார். முதல் டேங்க் அவரது தாக்குதல் வளையத்துக்கு வந்தவுடன், அவர் தனது ஆர்சிஎல் துப்பாக்கியால் சுட்டார். டாங்கு தீப்பிடித்தது.

"பின்னால் வரும் டாங்குகளின் ஓட்டுநர்கள் தங்கள் பீரங்கிகளை நடுச் சாலையில் அப்படியே விட்டுவிட்டு ஓடுவதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம்." என்று இந்தக் காட்சியை 20 கெஜ தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கர்னல் ஹரி ராம் ஜானு நினைவு கூர்கிறார்.

அதிகபட்சம் மூன்று சுற்றுகள்

அந்தப் போரில் பங்கேற்ற கர்னல் ரசூல் கான், "106 மிமீ ஆர்சிஎல் 500 - 600 கெஜம் வரை சுடக்கூடியது. டாங்குகளுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படக்கூடியவை இவை. ஆனால் சுடப்பட்டவுடன், பின்னாலிருந்து நெருப்புப் பிழம்பு வெளியேறுவதால், இது தொலைவிலிருந்தே எதிராளிக்குத் தெரிந்துவிடும். இதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே சுட முடியும்." என்று தெரிவிக்கிறார்.

இருந்த போதிலும், அதே நாளில் பாகிஸ்தானின் இரண்டாவது பேட்டன் டாங்கையும் ஹமீத் சிதறடித்தார். அடுத்த நாள் இன்ஜினீயர் கம்பெனி ஆன்டி டாங்க் கண்ணி வெடிகளை நிறுவியதால் பாகிஸ்தான் சேபர் ஜெட் விமானங்கள் இந்திய நிலைகள் மீது குண்டு வீசத் தொடங்கின.

வீரர்கள் உடனடியாகத் தங்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். கேப்டன் சுரேந்தர் சௌத்ரி, "என் அகழிக்கு வெளியே ஒரு ஜெர்ரி கேனைத் தலையணையாகக் கொண்டு, நான் படுத்திருந்தேன். அப்போது என் தலைக்கு மீது இரண்டு சேபர் ஜெட் விமானங்கள் சென்றன. நான் உருண்டு பள்ளத்தில் விழுந்தேன். சிறிது நேரம் கழித்து நான் மேலே வந்தபோது, ​​என் ஜெர்ரி கேனில் நான்கு தோட்டா துளைகளைக் கண்டேன். நான் மயிரிழையில் உயிர் தப்பினேன்" என்று நினைவு கூர்கிறார்.

வா அருகில் வா

பாகிஸ்தானிய பீரங்களுடன் கர்னல் ரசூல்

பட மூலாதாரம், RASUL KHAN

படக்குறிப்பு, பாகிஸ்தானிய பீரங்களுடன் கர்னல் ரசூல்

அன்று பாகிஸ்தானிய வீரர்கள், கிரெனேடியர்கள் மீது மூன்று முறை டாங்குகளால் தாக்கினர். ஹமீத் மற்றும் ஹவில்தார் பீர் சிங் தலா இரண்டு டாங்குகளை அழித்தனர். சில டாங்குகள், முந்தைய தினம் நிறுவப்பட்ட ஆன்டி டாங்க் கண்ணிவெடிகளுக்குப் பலியாகின. செப்டம்பர் 10 அன்று, பாகிஸ்தானியர்கள் மிகக் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

"நாங்கள் அப்போது ஒரு தரைப்படைத் தாக்குதலை எதிர்பார்த்தோம், ஆனால் 8:30 வரை எதுவும் நடக்கவில்லை. அப்போது பாகிஸ்தான் டாங்குகள் வரும் சத்தம் கேட்டது. 180 மீட்டர் தொலைவில் டாங்கு இருந்த போது ஹமீதின் பார்வை அதன் மீது பட்டது. அவர் டாங்கை இன்னும் அருகில் வர அனுமதித்தார். பின்னர் அதைத் துல்லியமாகத் தாக்கினார். டாங்கு எரியத் தொடங்கியது. மற்ற பாகிஸ்தானிய டாங்குகளால் தனது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாதபடி ஹமீத் தனது ஜீப்பை அவசரமாக வேறு பக்கத்திற்கு நகர்த்தினார்." என நினைவுகூர்கிறார் கர்னல் ஜானு.

"மற்ற பாகிஸ்தான் டாங்குகள் முன்னேறி வந்தன. இவற்றைச் சுட வேண்டாம் என்று நான் ஹமீதுக்குச் சொன்னேன். இந்த டாங்குகள் எங்கள் நிலையை கடந்து சென்றபோது, ​​ஹமீத் அவற்றைப் பின்னால் இருந்து தாக்கி அழித்தார்.

மூன்றாவது டாங்கின் மீது அவர் குறி வைத்தபோது அவர்கள் இவரைப் பார்த்து விட்டனர். இருவரும் ஒரே நேரத்தில் சுட்டனர். இரண்டு குண்டுகள் வெடித்தன. ஹமீத்தின் குண்டு டாங்கைத் தாக்கியது, டாங்கின் குண்டு ஹமீத்தின் ஜீப்பை எரித்தது." என்றார் கர்னல் ஜானு.

முகமது நசீம் அப்போது ஹமீத்தின் ஓட்டுநராக இருந்தார். அவருக்கு அந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது. "அங்கிருந்து ஒரு பாகிஸ்தான் டாங்க் ஷெல் வந்தபோது ஹமீத்தின் விரல் ட்ரிக்கரில் இருந்தது. அது நேரடியாக ஹமீத்தின் உடலைத் தாக்கியதில் அவரது உடலின் மேல் பகுதி துண்டாகித் தொலைவில் போய் விழுந்தது. நான் கர்னல் ரசூலிடம் ஓடினேன்." என்கிறார் அவர்.

"ஹமீத் வீர மரணம் அடைந்து விட்டார் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் என்னை நம்பவில்லை. முன்னால் கிடந்த குவியலில் நான் கையை வைத்தபோது, ​​என் கை ஹமீதின் விலா எலும்புகளில் நுழைந்தது. அவரது உடலின் மற்ற பாகங்கள் தூரத்தில் கிடந்தன. நாங்கள் அவற்றை ஒன்றாகக் கூட்டி, அங்கு ஒரு குழி தோண்டி புதைத்தோம்." என்று விவரித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு தடை

பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபசல் (வலது) உடன், கர்னல் ரசூல் (இடது)
படக்குறிப்பு, பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபசல் (வலது) உடன், கர்னல் ரசூல் (இடது)

ஆனால் போர் இன்னும் முடிவடையவில்லை. பாகிஸ்தான் பக்கத்தில் இருந்து மூன்று ஆர்சிஎல் ஜீப்புகள் வருவது தெரிந்தது. லைட் மெஷின் கன் போஸ்டில் நின்று, ஷபிக், நௌஷத் மற்றும் சுலைமான் ஆகியோர் துப்பாக்கிச் சூடு உத்தரவுக்காகக் காத்திருக்காமல் அவர்களை நோக்கிச் சுட்டனர்.

முதல் ஜீப்பில் இருந்த அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர் ஆனால் மூன்றாவது ஜீப் விரைவாகத் திரும்பித் தப்பியது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஜானு மிகவும் கோபமடைந்தார். அவர் இந்த மூன்று வீரர்களிடம் சென்று உத்தரவு இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார், ஏனெனில் இது பாகிஸ்தானியர்கள் நமது இருப்பிடத்தை அறிய உதவும்.

பாகிஸ்தானிய ஜெனரல் கொல்லப்பட்டார்

11 மணியளவில் பாகிஸ்தானின் ஜெனரல் ஒரு ஜீப்பில் முன்னேறுவது அறியப்பட்டது. பீரங்கிப் படைத் தளபதி அந்த ஜீப்பை ஓட்டி வந்தார்.

சாலையில் நின்றிருந்த அவரது படைப்பிரிவு தளபதியின் டாங்கைப் (ஹமீத்தால் அழிக்கப்பட்டது) பார்த்து, அவர் அதை நோக்கிச் சென்றார். அவர் நெருங்கி வந்ததும் கிரெனேடியர் சுலைமான் அவரது அகழியில் நின்றிருந்தார்.

பாகிஸ்தான் ஜெனரல் தனது ஜீப்பை நிறுத்தி சுலைமானைக் குரல் கொடுத்து அழைத்தார். சுலைமான் செல்லாததால், ​​பாகிஸ்தான் ஜெனரல் தனது ஜீப்பில் இருந்து இறங்கி, தனது ரிவால்வரை எடுத்துக்கொண்டு, நடந்தே இந்த வீரர்களை நோக்கிச் சென்றார்.

இதற்கிடையில், மற்ற இரண்டு வீரர்களான ஷபீக் மற்றும் நௌஷத் அவர்களும் துப்பாக்கியைக் காட்டி எழுந்தனர். ஆபத்தைக் கண்ட கர்னல் ஜானு, 'ஃபயர்' என்று உத்தரவிட்டார். ஒரே நேரத்தில் பல துப்பாக்கிகள் சுடப்பட்டு, பாகிஸ்தான் ஜெனரல் அங்கேயே வீழ்ந்தார்.

பீரங்கிப் படைத் தளபதி, ஜீப்பை திருப்பி தப்பிக்க முயன்றார் ஆனால் அவர் நெற்றியில் சுடப்பட்டார், அவர் தனது ஸ்டீயரிங் மீது விழுந்தார். ஒரு ஜீப் திரும்பித் தப்பியது.

ஆனால் அதிலும் டிரைவரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். சிறிது நேரம் கழித்து ஜீப்பில் இருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டது, இது 4 கிரெனேடிய வீரர்களால் கண்காணிக்கப்பட்டது - 'பெரிய தலைவர் கொல்லப்பட்டார்.' என்பது தான் அந்தச் செய்தி.

ஜெனரலின் சடலத்தைத் தேடும் முயற்சி

பரம் வீர் சக்ரா வென்ற இந்தி வீரர் அப்துல் ஹமீத்

பட மூலாதாரம், JAMEEL ALAM

படக்குறிப்பு, பரம் வீர் சக்ரா வென்ற இந்தி வீரர் அப்துல் ஹமீத்

கர்னல் ஜானு நினைவு கூர்ந்தார், "மூன்று மணியளவில் பாகிஸ்தான் டாங்குகளின் சத்தம் மீண்டும் கேட்டது. எட்டு டாங்குகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் இருபது பாகிஸ்தான் வீரர்கள் இருந்தனர். "ஜெனரல் சார் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நாங்கள் உங்களை மீட்க வந்துள்ளோம்" என்று அவர்கள் கத்தியது எங்களுக்குக் கேட்டது. அவர்கள் நான்கு பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை எடுத்துத் தங்கள் டாங்குகளில் வைத்தனர்."

இதற்கிடையில், கர்னல் ஜானு ரெட் ஓவர் ரெட் ஃபயரிங்கிற்கு அனுமதி கோரி, ஒரு செய்தியை அனுப்பினார்.

"ரெட் ஓவர் ரெட் என்றால், நமது வீரர்களே பின்னாலிருந்து நம்மைச் சுடுவார்கள். எதிரி மிக அருகில் வந்து, நாம் தப்ப வழியே இல்லை என்னும் போது இவ்வாறு செய்யப்படுகிறது. எங்கள் வீரர்களின் தோட்டாக்கள் எங்கள் மீது சுடத் தொடங்கிய உடன், பாகிஸ்தானியர்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கினர். இதில் எதிரணியின் இரண்டு டாங்குகள் அழிக்கப்பட்டன."

பாகிஸ்தான் ஜெனரலின் மனைவி வருகை

போர் முடிந்ததும், 4 கிரெனேடியப் படை வீரர்கள் சீமா கிராமத்தில் தங்கினர். ஒரு நாள் வெள்ளைக் கொடியுடன் சில பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களுக்கு முன்னால் வருவதைக் காண முடிந்தது. அவருடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு பெண்ணும் வந்துகொண்டிருந்தார்.

அந்தப் பெண் இந்திய வீரர்களைச் சந்திக்க விரும்புகிறார் என கூறப்பட்டது.

ரச்னா பிஷ்ட் தனது '1965 - ஸ்டோரீஸ் ஃப்ரம் த செகண்ட் இண்டோ-பாக் வார்" என்ற புத்தகத்தில், இது குறித்து எழுதியுள்ளார். "இந்தியாவுடனான அசல் உத்தர் பகுதியில் நடந்த போரில் கொல்லப்பட்ட, ஒரு பீரங்கிப் படைத் தளபதியின் மனைவி என்று தன்னை அந்தப் பெண் கண்ணீருடன் அறிமுகப்படுத்திக்கொண்டார். தயவுசெய்து என் கணவரின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இந்தியத் தளபதி, அவரது கணவரின் மரணத்திற்கு மிகவும் வருந்துவதாகக் கூறினார். அவர் மிகவும் தைரியமான வீரர் என்றும், அவரது உடல் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதால், இறந்த உடலை அவரிடம் ஒப்படைக்க முடியாது என்றும் கூறிய அந்த இந்தியத் தளபதி, அவரை தேநீர் அருந்தச் செய்து மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.

கால்வாயின் கரை உடைக்கப்பட்டது

பாகிஸ்தான் ஜெனரலை சுட்ட க்ரெனடியர் ஷஃபிக்

பட மூலாதாரம், BHARAT RAKSHAK

படக்குறிப்பு, பாகிஸ்தான் ஜெனரலை சுட்ட க்ரெனடியர் ஷஃபிக்

இந்தப் போரின் போது, ​​போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு அருகில், உள்ள கால்வாயின் கரையை இந்திய வீரர்கள் வெட்டிவிட்டனர், இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, மீதமுள்ள பாகிஸ்தான் டாங்குகளும் அங்கேயே சிக்கிக்கொண்டன என்பது மற்றொரு சுவாரஸ்ய செய்தி.

அதே நேரத்தில் பாகிஸ்தானில், அயூப் கான் தனது தகவல் செயலாளர் அல்தாஃப் கௌஹருக்கு கெம்காரன் பகுதியில் அதிகரித்து வரும் பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்வை விளக்கிக் கொண்டிருந்தார், அவரது இராணுவ செயலாளர் ஜெனரல் ரஃபி அறைக்குள் நுழைந்து இந்தியர்கள் மதுபூர் கால்வாயைத் திறந்துவிட்டனர் என்று கூச்சலிட்டார்.

அல்தாஃப் கௌஹர், அயூப் பற்றி எழுதிய புத்தகத்தில், "அயூப் அனைத்து உரைகளையும் மறந்துவிட்டார். முழுப் பகுதியும் நீரில் மூழ்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை அவர் அறிய விரும்பினார்.

அப்போது நீர் மற்றும் ஆற்றல் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்த குலாம் இஸ்ஹாக் கானை நான் அழைத்தேன். பழைய பாசன பதிவுகளின் அடிப்படையில் அவர் எட்டு மணி நேரத்தில் முழுப் பகுதியும் நீரால் நிரப்பப்படும் என்று கணக்கிட்டார்.

இந்தியா, பாகிஸ்தானின் டாங்குகளைத் தடுக்க, இப்படி ஒரு தந்திரத்தை நாடலாம் என்று ஜெனரல் நசீர் கூட நினைக்கவில்லை என்பதை அறிந்து அயூப் ஆச்சரியப்பட்டார்." என்று எழுதினார்.

செப்டம்பர் 11 அன்று கெம்காரனில் பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது, இதன் மூலம் பாகிஸ்தானின் அனைத்து வியூகங்களும் தோல்வியடைந்தன. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இது ஒரு வகையில் போரின் முடிவாகும்.

பேட்டன் நகரான பிகிவிண்ட்

"போர் நிறுத்தத்திற்கு பிறகு, எங்கள் யூனிட் இந்த டாங்குகளை ஒரே இடத்தில் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவு. நாங்கள் அவர்களை பிகிவிண்டிற்குக் கொண்டு சென்றோம். பின்னர் இந்த இடத்திற்குப் பேட்டன் நகர் என்று பெயரிடப்பட்டது. இது பேட்டன் டாங்குகளின் உலகின் மிகப்பெரிய கல்லறையானது" என்று தெரிவித்தார் கர்னல் ஜானு.

கர்னல் ரசூல் கான், "நாங்கள் மொத்தம் 94 டாங்குகளை அழித்தோம். ஒவ்வொரு இராணுவ கன்டோன்மென்ட்டின் பிரதான வாயிலிலும் நீங்கள் காணும் பேட்டன் டாங்குகள், நாட்டிற்கு 4 கிரெனேடியர்களின் பரிசாகும்." என்கிறார்.

ஏழு டாங்குகளைத் தகர்த்த ஹமீத்

நீரில் சிக்கிய பாகிஸ்தானிய பீரங்கிகள்

பட மூலாதாரம், BHARAT RAKSHAK

படக்குறிப்பு, நீரில் சிக்கிய பாகிஸ்தானிய பீரங்கிகள்

அப்துல் ஹமீதுக்கு அவரது மிகச்சிறந்த வீரத்திற்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது. அவரது மனைவி ரசூலன் பீபி இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

அவர், பிபிசியிடம் பேசுகையில், "துக்கம் மிக அதிகம் என்றாலும் என் கணவர் மறைந்து விட்டார் என்றாலும், இத்தனை புகழ் பெற்றுள்ளாரே என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

அப்துல் ஹமீதின் பரம் வீர் சக்ரா விருதில், 4 டாங்குகளைத் தகர்த்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஹமீத் உண்மையில் ஏழு டாங்குகளைத் தகர்த்ததாக அவரது கம்பெனி தளபதி கர்னல் ஜானு கூறுகிறார். பரம் வீர் சக்ராவிற்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது செப்டம்பர் 9. அதனால், செப்டம்பர் 10 அன்று அவர் தகர்த்த மூன்று டாங்குகளைப் பற்றிய குறிப்பு அதில் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :