’என்னங்க சார் உங்க சட்டம்’: சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Yennanga Sir Unga Sattam - Official Trailer
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: ஆர்.எஸ். கார்த்தி, ரோகிணி, சௌந்தர்யா பாலா, நந்தகுமார், மீரா மிதுன், பகவதி பெருமாள்; இசை: குணா பாலசுப்பிரமணியம்; ஒளிப்பதிவு: அருண் கிருஷ்ணா; இயக்கம்: பிரபு ஜெயராம். வெளியீடு: சோனி லைவ்.
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு மிக முக்கியம்; ஒரு முறை இடஒதுக்கீட்டை அனுபவித்தவர் மற்றொரு முறை அதை அனுபவிக்கக்கூடாது என்ற வாதங்களை முன்வைத்து உருவாகியிருக்கும் படம்தான் இந்த 'என்னங்க சார் உங்க சட்டம்'.
'ஒரு வீடு, இரு வாசல்' படத்தைப் போல, இந்தப் படத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு கதைகள் இருக்கின்றன. முதல் பாதியில், எந்தப் பொறுப்புமில்லாத கதாநாயகன், பெண்களைத் துரத்தி, கேலி செய்து, காதலிக்க வைத்து பிறகு கழற்றிவிடுகிறான். கடைசியில் என்ன ஆகிறது என்பது முதல் பாதியின் ஒன் - லைன்.
அடுத்த கதையில், டிஎன்பிஎஸ்சியின் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் ஏழை பிராமணர் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதே நேரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் வந்தவுடன் கோவிலில் உள்ள உயர்ஜாதியினர் மனமுவந்து வேலை கொடுத்துவிடுகிறார்கள். முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், ஆனால் வேறு ஜாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் வேலைகளைப் பெறுகிறார்கள், பாருங்கள் என்று சொல்வதுதான் இந்தப் படத்தின் ஆதார தத்துவம்.
இந்தப் படத்தின் முதல் பாதியைப் பொறுத்தவரை, எதற்காக இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதே புரியவில்லை. இந்தப் படத்தில் வரும் காதலோ, கதாநாயகனின் நடவடிக்கைகளோ, எதுவுமே சீரியஸாக இல்லை. யு டியூபர்களையும் விவசாயத்தை வைத்து படம் எடுப்பவர்களையும் பற்றி வரும் சில காட்சிகள் சற்று சிரிக்க வைக்கின்றன. மற்றபடி இந்த முதல் பாதி முழுக்க முழுக்க பெண்களைப் பின்தொடர்ந்து, துன்புறுத்துவதையே காதல் எனக் காட்டுகிறது.

பட மூலாதாரம், Yennanga Sir Unga Sattam - Official Trailer
படத்தின் இரண்டாம் பாதி இன்னும் சிக்கலானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் விதத்தை மையமாக வைத்து இந்தப் பகுதி நகர்கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையின் காரணமாக, இறுதிச் சடங்குகளை நடத்தும் ஏழை பிராமணரின் மகன் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், பணக்காரராக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு எளிதாக இருக்கிறது.
மற்றொரு பக்கம், பழமைவாய்ந்த பெரிய கோவில் ஒன்றில் அர்ச்சகர் வேலைக்கு நியமனம் நடக்கிறது. அங்குள்ள தலைமை அர்ச்சகராக உள்ள பிராமணர், அரசின் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தை மதித்து, நியாய உணர்வுடன் பிராமணரல்லாத ஒருவரை வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்.
அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு என்பது, ஏழ்மையைப் போக்கும் கருவி அல்ல என்பது பலமுறை சொல்லப்பட்டுவிட்ட பிறகும், பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடே சரி என்கிறது படம்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்குவதற்கான முயற்சிகள் 1970ல் துவங்கப்பட்டு சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகுதான், அதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. 2006ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டபோது, கோவில்களில் ஏற்கனவே இருந்த அர்ச்சகர்கள்தான் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். இதனால், நியமனங்கள் 15 ஆண்டுகள் தாமதமாயின. இப்போது செய்யப்பட்ட அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, கோவிலில் உள்ள பிராமணர்கள் எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் நிலையில், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் ஏழை பிராமணர்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது இந்தப் படம்.

பட மூலாதாரம், Yennanga Sir Unga Sattam - Official Trailer
மற்றொரு காட்சியில், டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக வரும் பத்ரகாளி என்ற பாத்திரம், இடஒதுக்கீட்டின் மூலம் வேலையைப் பெற்ற இளைஞரிடம் வந்து, "உனது அடுத்த தலைமுறை இட ஒதுக்கீட்டை அனுபவிக்கக்கூடாது; அதுதான் நியாயமாக இருக்கும்" என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.
உயர்ஜாதியினர் ஜாதி வேறுபாடே பார்ப்பதில்லை என்பதால், இனி பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடே சரி என்று சொல்ல விரும்பியிருக்கிறார். ஒரு காட்சியில் "இந்த நாட்டுல பிராமணனா பொறந்த பிறகு படிச்சா மட்டும் போதாது, உயிரைக் கொடுத்து படிக்கனும்" என்ற வசனம் வருகிறது. இதுதான் இயக்குனர் உரத்துச் சொல்ல விரும்பும் கருத்து. ஆனால், நிதர்சனம் அதற்கு முற்றிலும் மாறானது என்பதுதான் இந்தக் கதையின் பலவீனம்.
மேலும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற ஒரு பாத்திரத்திற்கு ரஞ்சித் தாசன் எனப் பெயர் வைத்து, குடிகாரனாக காட்டியிருப்பதெல்லாம் ரசிக்கத்தக்கதாக இல்லை.
இந்தப் படத்தில் நடித்திருப்பவர்களில் ஆர்.எஸ். கார்த்தி, பகவதி பெருமாள், ஜூனியர் பாலையா போன்றவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பாடல்கள் அனாவசியம் என்றாலும், ஒரு பாடல் கேட்கும்படியிருக்கிறது.
பிற செய்திகள்:
- பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - என்.ராம்
- திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையால் பதற்றம்
- அ.தி.மு.க கொடி, பொதுச் செயலாளர் பதவி : சசிகலா செய்வது சட்டவிரோதமா?
- ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் தப்பித்த முன்னணி பரப்புரையாளர் மரணம்
- 2ஜி தொடர்பில் நான் அளித்த பேட்டி உண்மைக்கு புறம்பானது, மன்னிப்பு கோருகிறேன்: வினோத் ராய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












