நடிகர் விஜய் நீதிமன்றத்தில் முறையீடு - 'ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில்நீதிபதியின் கருத்தால் மனஉளைச்சல்'

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்துவது தொடர்பாக நீதிபதி தெரிவித்த கருத்து, தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டதாக நடிகர் விஜய் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரியைக் குறைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்குமாறும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி சுப்ரமணியம், "வரி செலுத்துவது என்பது நன்கொடையல்ல. நடிகர்கள் ரியல் வாழ்வில் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது" என விமர்சனம் செய்தார். மேலும், "சமூக நீதிக்குப் பாடுபடுவதாகக் கூறும் நடிகர்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது" எனவும் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி தெரிவித்திருந்த சில கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வழக்கின் ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என நீதிபதி தெரிவித்திருந்தார். வழக்கின் ஆவணங்களில் தொழிலைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறுவதும் தேவையற்ற கருத்துகள் ஆகும்," என்றார்.
தொடர்ந்து வாதிடுகையில், `` கடினமான உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதனை நீதிபதி விமர்சனம் செய்திருப்பதும் தேவையற்றது. அவரைப் போலவே நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்ற கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். வரிவிலக்கு கோருவது என்பது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதால்தான் வழக்கு தொடரப்பட்டது" என்றார்.
மேலும், திரைத் துறையில் லட்சக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை நடிகர் விஜய் வழங்கி வரும் சூழலில் வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நிலுவை வரித் தொகையான 32 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை ஆகஸ்ட் மாதமே செலுத்திவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதியின் கருத்துகள் தனிப்பட்ட முறையில் மனதைப் புண்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் விஜய் தரப்பு வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கைத் தள்ளி வைத்தனர்.
வழக்கின் பின்னணி?
2012-ல் பிரிட்டனில் தயாரான சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸை இறக்குமதி செய்தார் நடிகர் விஜய். இதையடுத்து அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
வெளிநாட்டு சொகுசு காரை பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்வதற்காக காரின் மொத்த விலையில் 20% செலுத்தப்பட்ட நிலையில், இங்கு நுழைவு வரி என்பது வசூலிக்க தடை வேண்டும் என்பதே இதன் விஜய் தரப்பு மனுவில் விடுத்திருந்த கோரிக்கை.
அந்த உத்தரவை எதிர்த்தும், வரி வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் விஜய். மேலும் அந்த மனுவில் இந்த காருக்கு வரி செலுத்தாத காரணத்தால் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பதிவு செய்ய முடியாமலும், காரை பயன்படுத்த முடியாமலும் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் புகழ்பெற்ற நடிகர் என்பதால் உரிய நேரத்தில் சரியான வரி செலுத்த வேண்டும் அதுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதையும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













