கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஆணவக் கொலை: பெண்ணின் சகோதரர் கைது

பட மூலாதாரம், Getty Images
(இன்று 25.10.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.)
கர்நாடகாவில் விஜயபுரா அருகே முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமேலா அருகேயுள்ள பெக்கனூருவைச் சேர்ந்தவர் ரவி நிம்பரகி (32). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமண ஏற்பாடுகள் நடந்த போது, ரவி தனது பெற்றோருடன் சென்று பெண்ணின் குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். அப்போது அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர். மேலும், காதலை கைவிடுமாறும் மிரட்டியதாக தெரிகிறது. ஆனாலும் அவர்களின் காதல் தொடர்ந்தது.
இந்த சூழலில், கடந்த 21ஆம் தேதி, பெண்ணின் உறவினர் அஹமது ஃபாரிக் என்பவர் ரவியை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வருமாறு அழைத்துள்ளார். பின்னர், அவரை தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பெண், விஜயபுரா காவல் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று ரவி ஊருக்கு ஒதுக்கு புறமான கிணற்றில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில் ரவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்.டி.ஆனந்த்குமார் கூறும்போது, "ரவி நிம்பரகி வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் சகோதரர், தாய் மாமன் மற்றும் உறவினர்கள் 5 பேர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று, கிணற்றில் உடலை வீசியுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது சகோதரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதா? சாட்சியாக சேர்க்கப்பட்டவர் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
மும்பையில் கோவாவுக்குச் சென்ற சொகுசுக் கப்பலில், போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், சாட்சியமாக சேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரபாகர் செயில் கூறுகையில், "போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தன்னிடம் 9 முதல் 10 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அதேபோல் என்.சி.பி அதிகாரிகள் மற்றும் மேலும் சிலரும் ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக்கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசினர்" என்றார்.
பிரபாகர் செயிலின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
விசாரணை அமைப்பின் பெயரை கெடுப்பதற்காக இந்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த அளவில் போதைப் பொருள்கள் வைத்திருந்தால் தண்டனையில் இருந்து விலக்கு

பட மூலாதாரம், Getty Images
சுய பயன்பாட்டுக்காகக் குறைந்த அளவில் போதைப் பொருட்களை வைத்திருக்கும் நபா்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
சட்டவிரோதமாக போதைப் பொருட்களை வைத்திருப்பவா்களுக்கு போதை மருந்துகள்-மனோவியல் பொருள்கள் சட்டத்தின் கீழ் தற்போது தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபா்கள் வைத்திருக்கும் போதைப் பொருள்களின் அளவுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுகிறது.
போதைப் பொருள் வைத்திருக்கும் நபா்களுக்கு அச்சட்டத்தின் பிரிவு 27-இன் கீழ் ஓராண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது ரூ.20,000 வரை அபராதமோ அல்லது இரண்டு தண்டனைகளுமோ விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுய பயன்பாட்டுக்காகக் குறைந்த அளவில் போதைப் பொருள்களை வைத்திருக்கும் நபா்களுக்கு சட்டத்தின்கீழ் தண்டனை வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என வருவாய்த் துறைக்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை வழங்கியுள்ளது.
அவ்வாறு குறைந்த அளவில் போதைப் பொருள்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுபவா்களை சிறைக்கு அனுப்பாமல், அரசு மறுவாழ்வு மையத்தில் அவா்களுக்கு கட்டாய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வைத்திருப்பதாகக் கைது செய்யப்படுபவா்களுக்குத் தற்போதைய சட்ட விதிகளில் எத்தகைய விலக்கும் அளிக்கப்படுவதில்லை. போதைப் பொருட்களுக்கு அடிமையானவா்கள் மட்டுமே சிறைக்கு அனுப்பப்படாமல் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா். அதுவும் அவா்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சிகிச்சை வழங்கப்படுகிறது.
சொகுசு கப்பலில் போதைப் பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகா் ஷாரூக் கானின் மகன் ஆா்யன் கான் மீது போதை மருந்துகள் சட்டத்தின் 27-ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு இந்த 4 விஷயங்கள் தான் காரணமா?
- இந்தியாவை எளிதாக வீழ்த்தி 'முதல்' வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்
- காடுகளை அழிக்க இப்படியொரு சட்டத் திருத்தமா? - இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
- இந்தியாவை பாகிஸ்தான் வென்றால் அணிக்கு பிளாங்க் செக்: ரமீஸ் ராஜா என்ன சொன்னார்?
- அமித் ஷாவின் ஜம்மு-காஷ்மீர் பயணத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
- பிக்காஸோவின் ஓவியங்கள் ரூ.800 கோடிக்கு ஏலம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












