இந்தியா Vs பாகிஸ்தான் டி20: 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது பாகிஸ்தான்.
இந்தியா நிர்ணயித்த 152 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் எதையும் இழக்காமலேயே எட்டியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் ஆசமும் முகமது ரிஸ்வானும் இந்திய வீரர்களை பந்துவீச்சை மிக எளிதாக பவுண்டரிக்கு விரட்டினார்கள்.
ஜஸ்ப்ரீஸ் பும்ரா, முகமது ஷமி என முக்கியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முற்றிலுமாக எடுபடவில்லை. மாயாஜால ஸ்பின்னர் என்று அழைக்கப்படும் வருண் சக்கரவர்த்தியின் பந்துகளையும் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் மிக எளிதாகச் சமாளித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பாபர் ஆசமும் முகமது ரிஸ்வானும் அரைச் சதம் அடித்து வெற்றியை வசமாக்கினர். அவுட்டாவதற்கான எந்தப் பெரிய வாய்ப்பையும் அவர்கள் வழங்கவில்லை.
டாஸில் "தோற்ற" விராட் கோலி
எவ்வளவு அதிகமான ஸ்கோரையும் எட்டிப் பிடிக்கும் திறன் கொண்ட அணி என்ற பெயருடன் களமிறங்கிய இந்திய அணிக்கு டாஸே சோதனையாக அமைந்தது. டாஸ் வென்றால் பந்து வீச்சைத் தேர்வு செய்ய வேண்டும் என்று விராட் கோலி கருதியிருந்தார்.
ஆனால் டாஸில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸில் தோற்ற தனது ஏமாற்றத்தை அப்போதே விராட் கோலி தெரிவித்தார்.
"இந்தியா முதலில் பந்துவீச வேண்டும் என்று எதிர்பார்த்தோம்" என்று அவர் கூறினார்.
பேட்டிங்கில் தடுமாறிய இந்திய வீரர்கள்
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமலும் கே.எல். ராகுல் 3 ரன்களிலும் வெளியேறினர்.
அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி தடுமாறியது.
அதன் பிறகு நிதானமாக ரன்களைக் குவித்த விராட் கோலி, ரிஷப் பந்த் ஜோடி அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்வதற்குக் காரணமாக அமைந்தது. ஆயினும் அது பாகிஸ்தானை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் தடுமாறினார்கள். சொற்ப ரன்களிலேயே வெளியேறினார்கள்.
போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டதாகவும், இன்னும் 20 ரன்கள் கூடுதலாகப் பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் போட்டியில் இஷான் கிஷன், அஷ்வின், ஷ்ரதுல் தாக்குர், சாஹர் ஆகியோர் ஆடவில்லை. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி இடம்பெறவில்லை.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுலும் ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.
ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 14 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது. இதுவே முதல் தோல்வியாகும்.
இந்திய அணி: கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.
பாகிஸ்தான் அணி: பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான், ஃபக்கார் ஸமான், முகமது ஹஃபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான், இமாத் வாஸிம், ஹசன் அலி, ஹாரிஸ் ராப், ஷாகீன் ஷா அப்ரிடி
பிற செய்திகள்:
- காடுகளை அழிக்க இப்படியொரு சட்டத் திருத்தமா? - இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
- எகிறும் பங்குச் சந்தை: இப்போது முதலீடு செய்தால் லாபத்தை அள்ளலாமா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பதில்
- இந்தியா-பாகிஸ்தான்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சுவாரசியமான வரலாறு
- அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 10 நாட்டு தூதர்களை 'வரவேற்கப்படாத நபர்களாக' அறிவிக்க எர்துவான் உத்தரவு
- தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு - முழு விவரம்
- ஆஸ்கார் விருதுக்கு செல்லும் 'கூழாங்கல்' சினிமா எப்போது ரிலீஸ் ஆகும்? இயக்குநர் தகவல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








