பிக்காஸோவின் ஓவியங்கள் ரூ.800 கோடிக்கு ஏலம்

பிக்காஸோ ஓவியம்

பட மூலாதாரம், Reuters

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக லாஸ் வேகாஸ் ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்பட்ட பாப்லோ பிக்காஸோவின் கலைப் படைப்புகள் சுமார் 800 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

MGM ரிசார்ட்ஸுக்குச் சொந்தமான இந்தப் படைப்புகள், பெல்லாஜியோ ஹோட்டலில் உள்ள பிக்காசோ உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஏலம் விடுவதன் மூலம் கலைப் படைப்புகளின் பன்முகத் தன்மையை மேம்படுத்தப் போவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

1973 இல் இறந்த ஸ்பெயின் கலைஞரான பிக்காஸோவின் ஒன்பது ஓவியங்கள் மற்றும் இரண்டு பீங்கான் படைப்புகள் இந்த ஏலத்தில் இடம்பெற்றன.

இந்தப் படைப்புகள் சுமார் 50 ஆண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை.

1938 ஆம் ஆண்டு பிக்காஸோ வரைந்த "Woman in a Red-Orange Beret" என்ற ஓவியம் அதிகபட்ச விலையான 280 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதில் பிக்காஸோவின் காதலி மேரி தோர்ஸ் வால்ட்டர் இடம்பெற்றுள்ளார்.

முதலில் இந்த ஓவியம் சுமார் 120 முதல் 180 கோடி ரூபாய் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மற்றொரு தலைசிறந்த கலைப்படைப்பான "மனிதனும் குழந்தையும்" என்ற ஓவியம் சுமார் 150 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது.

"1959 ஆம் ஆண்டு வரையப்பட்ட இந்த ஆறரை அடி உயரமான ஓவியம் பிக்காஸோவின் வாழ்க்கையின் சாதனைகளுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், "என்று ஏல நிறுவனமான சோத்பீஸ் கூறியுள்ளது.

1942 ல் பாரிஸில் நாஜி ஆக்கிரமிப்பின் போது பிக்காசோவால் வரையப்பட்ட "பழக்கூடை மற்றும் பூக்கள் கொண்ட வாழ்க்கை" என்ற மற்றொரு கலைப் படைப்பு 110 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

"இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட துயரங்களுக்கு இடையிலும் 1940 முதல் 1944-ஆம் ஆண்டுகளுக்கு இடையே பிக்காஸோவின் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டன" என சோத்பீஸ் கூறியுள்ளது.

ஓவியம்

பட மூலாதாரம், SOTHEBY'S/MGM RESORTS

பிக்காஸோ படைப்புகளைச் சேகரிக்கும் பணி 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் பெரிய சூதாட்ட விடுதி உரிமையாளரான ஸ்டீவ் வின்னால் தொடங்கப்பட்டது. இவர் பெல்லாஜியோ ஹோட்டலின் முன்னாள் உரிமையாளர்.

பெண்கள், சிறுபான்மையினர், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் படைப்புகளைச் சேகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏலவிற்பனை நடைபெற்றது.

இந்தப் படைப்புகளை வாங்கியவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

பிக்காஸோவின் ஓவியத்துக்கு இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை ரூ.1250 கோடி. 2015-ஆம் ஆண்டு அல்ஜீயர்ஸ் பெண்கள் என்ற படைப்புக்கு இந்த விலை கொடுக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :