இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை: இந்தியாவை வென்றால் அணிக்கு பிளாங்க் செக், ரமீஸ் ராஜா என்ன சொன்னார்?

இந்தியா - பாகிஸ்தான் அணிகள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா - பாகிஸ்தான் அணிகள்.
    • எழுதியவர், ஆதேஷ்குமார் குப்தா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றால் அந்த அணிக்கு பிளாங் செக் தருவதாக ஒரு பெரிய வணிகர் கூறியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் - இந்தியா இரண்டு நாட்டு அணிகளும் நேருக்கு நேர் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே அவற்றை சுற்றி ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

இப்போதும் அப்படித்தான் என்பதற்கு ரமீஸ் ராஜா கூறிய சொற்கள் ஒரு சோற்றுப் பதமாக இருக்கின்றன.

இதற்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் நாட்டு அணிகள் மோதியது 2019ல் நடந்த ஐசிசி ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில்தான். இங்கிலாந்தில் நடந்த அந்தப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், இந்த முடிவு டக்வொர்த் லீவிஸ் முறையில் கணக்கிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் இம்மாதம் 17ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகளை நடத்துவது என்னவோ இந்தியாதான். ஆனால், போட்டிகள் நடப்பது ஐக்கிய அரபு எமிரேட்டிலும், ஓமனிலும்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி.

பட மூலாதாரம், Getty Images

கோவிட்19 தொற்றுக்கு எதிராக சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்குள்ள ஸ்டேடியங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம். அதுவுமில்லாமல் இப்போதுதான் இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக ஐக்கிய அரசு எமிரேட்டில் நடந்து முடிந்தன.

இந்த உலகக் கோப்பையில் பல முக்கிய விஷயங்கள் இருந்தாலும் வழக்கம்போல இந்தியா - பாகிஸ்தான் போட்டியை சுற்றியே கவனம் கட்டமைக்கப்படுகிறது. இரண்டு நாடுகளுமே குரூப்-2 பிரிவில் இருப்பதால் இந்த நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே வெல்லும் அணி உள்நாட்டில் கொண்டாடப்படுவதும், ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதும் வழக்கம். அதே நேரம் தோற்ற அணி கடுமையான விமர்சனத்துக்கு இலக்காகும். தோல்வியால் கடுப்பாகும் ரசிகர்கள் டிவி பெட்டியை உடைத்த நிகழ்வுகளும் உண்டு.

காணொளிக் குறிப்பு, இந்தியா - பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் மோதல்: தமிழ்நாடு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்

சேத்தன் ஷர்மா வீசிய கடைசி பந்தில் ஜாவீத் மியாண்டட் எதிர்பாராத விதமாக சிக்ஸ் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தது இன்னமும் நினைவுகூரப்படுகிறது.

அதைப் போலவே 2007ல் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையின் பதற்றமான கடைசி ஓவரில் பந்து வீச, பெரிய ஃபார்மில் இல்லாத சாதாரண பௌலராக கருதப்பட்ட ஜொகிந்தர் ஷர்மாவை அழைத்தார் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அந்த முடிவு இறுதியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்ததை யாரும் இன்னும் மறக்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், பின்னாளில் பெரிய பெருமைக்கு உள்ளான தோனியின் தலைமைப் பண்பு முதல் முதலில் கவனிக்கப்பட்டது அந்த நிகழ்வின் மூலம்தான்.

சிக்கந்தர் பக்த்.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, சிக்கந்தர் பக்த்.

சாதாரணமாக வரலாற்றில் மறக்கப்பட்டிருக்கக் கூடிய பௌலரான ஜோகிந்தர் ஷர்மா அந்த ஓர் ஓவரால் வரலாற்றில் மறக்கமுடியாத ஒளிமயமான பக்கத்தில் இடம் பிடித்துக்கொண்டார்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்பான சின்ன சின்ன நிகழ்வுகளும் இப்படித்தான் மக்கள் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுவிடுகின்றன.

இந்திய - பாகிஸ்தான் போட்டிகளைப் பொருத்தவரை அப்போது எந்த அணி என்ன தரவரிசையில் இருக்கிறது என்பது பிரச்சனையே இல்லை. போட்டி கடுமையாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் சொன்னதை இங்கே நினைவுகூரலாம்.

"இந்தியா -பாகிஸ்தான் மோதல் போன்ற பெரிய போட்டிக்கு செல்வதற்கு முன்பு அணிக்கு எந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது என்பதுதான் முக்கியம். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் இந்த போட்டியை விளையாட தயாராக நம்பிக்கையோடு இருக்கிறோம். நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம்" என்று பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் ஆசம் கூறியிருக்கிறார்.

அதைப் போலவே இது மற்ற எல்லாப் போட்டியையும் போலத்தான் என்று இந்திய அணித் தலைவர் விராட் கோலியும் கூறியிருக்கிறார்.

இந்திய - பாகிஸ்தான் போட்டிகள் கடுமையாக உள்நாட்டு அழுத்தத்தை கொடுத்தாலும் அதைத் தாண்டி இருநாட்டு மக்களும் மற்ற நாட்டு வீரர்களை அன்போடு அணுகிய தருணங்களை நினைவுகூர்கிறார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் பக்த்.

இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளின் உறவுகள் மோசமாக இருப்பதற்கு அரசியல்தான் காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவில் விளையாட வந்தபோதெல்லாம் தாம் தனியாக வெளியே நடமாடச் சென்றிருப்பதாகவும் மக்கள் தான் பாகிஸ்தான் வீரர் என்று தெரிந்து வெறுப்பைக் காட்டவில்லை. அச்சுறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் தனியாக வெளியே நடந்து செல்ல தாம் அஞ்சியதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அதைப் போல ஆசியக் கோப்பை போட்டிக்கு வருணனை செய்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், வெளியே ஷாப்பிங் சென்றபோது அவரிடம் கடைக்காரர்கள் யாரும் காசு வாங்கவில்லை என்பதையும் சிக்கந்தர் பக்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி.

பட மூலாதாரம், Getty Images

"அரசியல் பற்றி நான் பேசமாட்டேன். அது என் துறை அல்ல. விளையாட்டு, மக்கள் இவை குறித்தே நான் பேசுகிறேன். ஆனால், கிரிக்கெட்டை பொருத்தவரை இரு நாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய உறவு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களை, கலைஞர்களை நான் மிகவும் விரும்பியுள்ளேன்" என்று கூறியுள்ளார் சிக்கந்தர் பக்த்.

"முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், நடப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான ரமீஸ் ராஜா சமீபத்தில் கராச்சி வந்திருந்தார். அப்போது அவர் கராச்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ் பிரதிநிதிகளையும் சந்தித்தார். அப்போது பிளாங்க் செக் வாங்கிக் கொள்ளுங்கள். இந்தியாவை ஜெயித்துவிட்டு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தொகையை அதில் நிரப்பிக்கொள்ளுங்கள் என்று ஒரு பெரிய வணிகர் தம்மிடம் கூறியதாக ரமீஸ் ராஜா கூறியுள்ளார். அப்படி இருக்கிறது அழுத்தம். இது மாதிரியான அழுத்தம் வரும்போது விளையாட்டு வீரர்களையும் அது பாதிக்கிறது. போட்டிக்கு முதல் நாள் உறங்கச் செல்லும்போது இது போன்ற விஷயங்கள்தான் அவர்கள் நினைவில் சுழன்றுகொண்டே இருக்கும்" என்கிறார் சிக்கந்தர் பக்த்.

இந்த போட்டியில் வென்றுவிட்டால் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றுவிடும் என்றும் சிக்கந்தர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :