ஆன்லைன் ரம்மி தற்கொலைகளால் கண்ணீர் - 'சாப்பாட்டுக்கே கஷ்டப்படறோம், அரசாங்கம் என்ன பண்ணுது?'

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி

பட மூலாதாரம், FANATIC STUDIO VIA GETTY IMAGES

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை முடிவை தேடிக் கொள்பவர்களின் எண்ணிக்கைகள் அதிகரித்தபடியே உள்ளன. ` எதிர்முனையில் யாருடன் நீங்கள் விளையாடலாம். ஆனால், நீங்கள் ஆடுவது மனிதர்களுடன் அல்ல, அனைத்தும் வடிவமைக்கப்பட்ட புரோகிராம்கள்தான்' என்கிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திகேயன். என்ன நடக்கிறது ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில்?

`` என் புள்ளைகளோட எதிர்காலம் எல்லாம் போயிருச்சு. `உங்க அப்பா சீட்டாடி செத்துப் போயிட்டாரா'ன்னு விளையாட வர்ற புள்ளைக கேட்குதுங்க. இதனால, ஒரு வருஷமா என் பையன் விளையாடவே போறதில்லை. வெளிய வேலைக்குப் போனாலும் எனக்கு சொல்ல முடியாத தொல்லைகள் இருக்கு. சாப்பாட்டுக்கு எவ்ளோ கஷ்டப்படறோம்னு யாருக்காவது தெரியுமா?" எனக் கூறிவிட்டு கதறியழுகிறார் புதுச்சேரியை சேர்ந்த மதுமிதா. இவரது கணவர் விஜயகுமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 40 லட்ச ரூபாயை பறிகொடுத்த துக்கத்தில் தற்கொலை முடிவை தேடிக் கொண்டார்.

கணவர் இறந்த ஓராண்டில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்ததாகவும் பிபிசி தமிழிடம் மதுமிதா பகிர்ந்து கொண்டார். `` என் கணவர் 40 லட்ச ரூபாய்களை இழந்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறையாவது போட்டிருப்பேன். என் கணவர் வீட்டில் இருந்து எந்த உதவியும் இல்லை. தம்பிகள்தான் உதவி பண்றாங்க. இரண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் வாடகை கொடுக்க முடியுது. என் கணவர் எங்களை ரொம்ப நல்லா பார்த்துகிட்டார். என் புள்ளைக எல்லாம் பிரைவேட் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தாங்க. இப்போ அரசாங்க ஸ்கூல்ல படிக்கறாங்க. அதை நான் கேவலமாக பார்க்கலை. ஆனா, அரசாங்கம் கொடுக்கற யூனிஃபார்மை தைச்சுப் போடறதுக்குக்கூட என்கிட்ட பணம் இல்லை" என வேதனைப்படுகிறார்.

புதுச்சேரி சொல்லும் பாடம்

`` டி.வியை திறந்தால், முக்கியமான நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆன்லைன் ரம்மி கம்பெனிகள்தான் விளம்பரதாரர்களா இருக்காங்க. `பணம் இழக்கும் அபாயம் உள்ளது, உங்களை அடிமையாக்கக் கூடும்' என சொல்றாங்க. அதையும் மீறி ஆடப் போறாங்கன்னா அரசாங்கம் என்ன செய்யுது. ஒருவர் விபத்துல சாகலாம், விஷம் குடிச்சும் சாகலாம். ஆனா, நினைச்சு நினைச்சு நெருப்புல வெந்து சாகறது எவ்வளவு கொடுமை. நாலு பேருக்கு நல்லதுதான் செய்யத்தானே அரசாங்கம் இருக்கு. நான்பட்ட கஷ்டத்தை அவங்க குடும்பத்துல யாருக்காவது வந்தாதான் தடை பண்ணுவாங்களா..?" என்கிறார் மதுமிதா.

`` என்னால நல்ல ட்ரெஸ் போட முடியல. புருஷன் செத்து ஒரு வருஷம்கூட ஆகலை. இவ நடிக்கறான்னு காதுபட பேசறாங்க. நான் சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்படறேன்னு யாருக்காவது தெரியுமா? எதுக்காக இந்த ஆன்லைன் ரம்மியை அனுமதிக்கறாங்க? `நீ இல்லாம என்னால இருக்க முடியல விஜி' என என் கணவருக்காக போட்ட யூடியூப் வீடியோவில், `பத்து லட்சம் இழந்துட்டேன்', `20 லட்சம் இழந்துட்டேன்'னு எவ்வளவோ கமெண்ட் வந்திருக்கு. ஆனா, குடும்பங்கள் எல்லாம் அழியட்டும்னு அரசாங்கம் காத்திட்டு இருக்கு. என் புள்ளைகளோட எதிர்காலம் எல்லாம் போயிருச்சு. என் புள்ளைகளை பார்த்துட்டு உயிரைக் கையில் புடிச்சுட்டு இருக்கேன்" என்கிறார் மதுமிதா.

``என்னால கடன்காரங்களுக்கு பதில் சொல்ல முடியல. இந்த ரம்மியை தயவு செய்து நிறுத்தச் சொல்லுங்க. ஆம்பிளை செத்துட்டுப் போயிருவான். கஷ்டத்தை அனுபவிக்கிறது பொம்பளைகள்தான். செல்போனை திறந்தாலே ஆன்லைன் ரம்மி விளம்பரங்கள்தான். நான் இரண்டு முறை தற்கொலை முடிவுக்குப் போயிட்டேன். இங்க யாரும் திருந்த மாட்டாங்க. இந்த விளையாட்டை நிறுத்தினால் மட்டும்தான் திருந்துவாங்க. என்னைப் போல வேறு எந்தப் பெண்ணும் கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது, தயவு செய்து தடை பண்ணச் சொல்லுங்க" எனக் கூறியபடியே அழத் தொடங்கிவிட்டார்.

புதுச்சேரி, வில்லியனூரை அடுத்துள்ள கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த 38 வயதான இளைஞர் விஜயகுமாரின் மனைவிதான் மதுமிதா. தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றின் சிம்கார்டு விநியோகஸ்தராக கொடி கட்டிப் பறந்தவரை, ஆன்லைன் ரம்மி ஆட்டம் முழுதாக முடக்கிப் போட்டுவிட்டது. விளைவு, நாற்பது லட்ச ரூபாய் வரையில் இழந்த கையோடு, மனைவிக்கு உருக்கமான வீடியோ ஒன்றையும் அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

25 தற்கொலைகள்

விஜயகுமார் போலவே, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான காவலர் வேலுச்சாமி தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஏழு லட்ச ரூபாய் வரையில் இழந்ததால் தற்கொலை முடிவை நாடியுள்ளார். ஆனால், அந்தத் துப்பாக்கிக் குண்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் சேந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர், ஆன்லைன் சூதாடட்டத்தில் பல லட்ச ரூபாய்களை இழந்ததால், மனைவி, குழந்தைகளை துக்கத்தில் ஆழ்த்திவிட்டு தற்கொலை முடிவை தேடிக் கொண்டார். அந்த வரிசையில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிர் இழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. `குறைந்த காலத்தில் அதிக வருவாய் சம்பாதிக்கலாம்' என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஆன்லைன் சூதாட்டத்துக்குள் நுழைகிறவர்கள், பின்னர் மீள முடியாத அளவுக்குக் கடன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாகவே தற்கொலை முடிவை தேடிக் கொள்வதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றன.

`தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை வலுப்பெற்றதன் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி அவசர சட்டம் ஒன்றை அ.தி.மு.க அரசு பிறப்பித்தது. ஆனால், `இந்தச் சட்டம் செல்லாது' என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காரணம், இதனை தடை செய்ய வேண்டியதன் நுட்பமான காரணத்தை அரசாணையில் சொல்லப்படவில்லை என்பதுதான். மேலும், `ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடியாது, முறைப்படுத்த முடியும்' எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இதன் காரணமாக, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

ஆன்லைன் ரம்மியில் என்ன நடக்கிறது?

``பொதுவாக, ரம்மி விளையாட்டில் ஈடுபடுகிறவர்கள் அவ்வளவு எளிதாக அடிமையாக மாட்டார்கள். ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அப்படி இல்லை. இங்கு ஏராளமான ஆன்லைன் ரம்மி செயலிகள் உள்ளன. அதில், நான்கு அல்லது ஐந்து செயலிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. முதலில், செயலிக்குள் நுழைந்ததும் ஆயிரம் ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் `ஜாய்னிங் போனஸ்' எனக் கூறி தொகையை கொடுக்கிறார்கள். அதை வைத்து விளையாடலாம். இதற்காக கையில் இருந்து பணத்தைப் போட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் விளையாடும்போது முதல் விளையாட்டில் நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள். அதனை உங்களின் வங்கிக் கணக்குக்கு மாற்ற முடியும். அதாவது, கையில் பணமே இல்லாமல் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டதாக உங்கள் மனதில் பதிந்துவிடுகிறது.

சைபர் க்ரைம் வல்லுநர் வழக்கறிஞர் கார்த்திகேயன்
படக்குறிப்பு, சைபர் க்ரைம் வல்லுநர் வழக்கறிஞர் கார்த்திகேயன்

அடுத்தடுத்து பணம் போட்டு ஆடத் தொடங்குவார்கள். மீண்டும் வெற்றி பெறுவார்கள். பின்னர் தோல்விடையும்போது, `சிறிய தவறுகளை செய்ததால் தோற்றோம்' என நினைக்கத் தோன்றும். அடுத்ததாக, சிறிய தொகைகளை வெல்வது போலவும் பெரிய தொகைகளை இழக்க வேண்டிய போன்ற நிலையும் ஏற்படும். இதில், வெற்றி பெறும்போது மூளையில் தற்காலிக உற்சாகம் கிடைக்கும். அடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைக்கத் தோன்றும். இதற்காக கடன் வாங்கியாவது பணத்தைப் போடுவார்கள். இதன்பின்னர், மொத்தமாக அந்த விளையாட்டுக்கே அடிமையாகிவிடுகிறார்கள்" என்கிறார், சைபர் கிரைம் தொழில்நுட்ப வல்லுநர் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

அனைத்தும் புரோகிராம்கள்தான்

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் `ரெஃபரல் போனஸ்' என்ற ஒன்றைத் தருகிறார்கள். அதாவது, உங்களுடன் தொடர்பில் உள்ள நண்பர்களை சேர்த்துவிட்டால், அதற்கான தொகையும் வந்து சேரும். நண்பர்களுடன் சேட் செய்வது போன்ற ஆப்ஷனும் இதில் உண்டு. `நான் இப்போதுதான் 2 லட்ச ரூபாய் ஜெயித்தேன்' என்றெல்லாம் கூறும்போது, `நாமளும் வெற்றி பெறலாம்' என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு வரும்.

மேலும், இந்த விளையாட்டில் நாம் மனிதர்களுடன் விளையாடுவது போலத்தான் காண்பிக்கும். யாருடன் நீங்கள் விளையாட வேண்டும் என நினைத்தாலும் அவர்களோடு நீங்கள் ஆடலாம். ஆனால், எதிர் முனையில் அப்படி யாரும் மனிதர்கள் இல்லை. எல்லாமோ ரோபோட்டுகள்தான். இது ஒரு அல்காரிதம். அதாவது நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் வெற்றி பெற முடியாத அளவுக்குத்தான் அந்த அல்காரிதம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் திறமைக்கு எந்த வேலையும் கிடையாது. தொடக்கத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்குக் காரணமும் அல்காரிதம்தான். அடுத்தடுத்து தோற்பதற்கும் அந்த அல்காரிதம்தான் காரணம். சில நேரங்களில் உற்சாகமாக ஆடும்போது இணையத்தள சேவை கிடைக்காமல் போகும். அதுவும் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட புரோகிராம்தான்" என அதிர்ச்சியூட்டுகிறார்.

online rummy game

பட மூலாதாரம், RASI BHADRAMANI VIA GETTY IMAGES

`` ஆன்லைன் விளம்பரங்களில் நமக்கு ரோல்மாடலாக உள்ளவர்கள் பேசுவதால், அது மற்றவர்களால் ஈர்க்கப்படுகிறது. இதன்மூலம் 20 லட்சம், 30 லட்சம் எனத் தொகையை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களிடம் கடன் வாங்கி ஆடியிருப்பார்கள். இறுதியாக, `இனி செலவு செய்ய முடியாது' என்ற நிலை வரும்போதுதான் உண்மையை உணரத் தொடங்குவார்கள். இவ்வளவு பெரிய விளம்பரங்களைக் கொடுத்து செயலிகளைத் தொடங்குகிறவர்கள், `பணம் சம்பாதிக்கத்தான் வந்துள்ளனர்' என்பதை மக்கள் உணர வேண்டும். இது ஒரு பில்லியன் டாலர் வர்த்தகமாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஆன்லைன் ரம்மி பயனாளர்கள் அதிகரித்துவிட்டனர்" என்கிறார் கார்த்திகேயன்.

தற்கொலை முடிவை நாடுவது ஏன்?

`` ஆன்லைன் சூதாட்டம் என்பது தொடக்கத்தில் நம்முடைய மூளைக்கு சவாலான விளையாட்டாக தெரிந்தாலும் நிறைய பேர் அடிமையாகிவிடுகின்றனர். ஆன்லைன் ரம்மி மட்டுமல்லாமல், கேமிங் செயலிகளுக்கும் பலர் அடிமையாவதைப் பார்க்க முடிகிறது. மது முதலான போதைப் பழக்கத்துக்கு அடிமையானால், அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ அதேபோல்தான் இதற்கும் ஏற்படுகின்றன என்பது மனநல மருத்துவம் கண்டுபிடித்துள்ள ஓர் ஆய்வாக உள்ளது. அந்தளவுக்கு போதைப் பழக்கத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குக் கொடுக்கின்றனர்" என்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.

மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதி
படக்குறிப்பு, மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதி

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` திருவனந்தபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் ஓர் இளைஞர் ஆன்லைன் விளையாட்டு மூலம் பல லட்சங்களை இழந்து, அந்தக் கடனை அடைக்க முடியாமல் மனச்சோர்வு நோய்க்குத் தள்ளப்பட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்போது ஆன்லைன் ரம்மி தொடர்பாக நீதிமன்றங்களும் விவாதிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டன. முதலில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையானவர்களை கவனிக்க வேண்டும். தனிமையில் உள்ளவர்கள், துணையில்லாமல் உள்ளவர்கள், வெளியில் யாரிடமும் பேசிப் பழகாமல் தனக்குள்ளேயே ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான், இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.

மனநலரீதியாக தீர்வு என்ன?

தனிமையை ஒழிப்பதற்கு என செயலிக்குள் செல்பவர்களுக்கு அதுவே வாழ்க்கையாக மாறிவிடுகிறது. இதன்மூலம், வெளியில் நண்பர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டு தன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் அடைத்துக் கொள்கின்றனர். இதன் விளைவாகவே மனச்சோர்வுக்கு ஆள்படுகின்றனர். ஒருகட்டத்தில் அவரை மீட்டு மனச்சோர்வுக்கான சிகிச்சையை அளித்து, `இது உங்களுக்கு சரிவராது' என ஆலோசனை கொடுக்கும்போது அவர் குணமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

`` ஆன்லைன் விளையாட்டிலேயே அடிமையாகும்போது, மனநிலையும் மாறி மனப்பதற்றம், மனச்சோர்வு, ஏற்றத்தாழ்வான மனநிலை போன்றவை ஏற்படுகின்றன. இணையத்தளத்திலேயே இருக்கும்போது இதுபோன்ற விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறவர்கள், லட்சக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தை இழந்தால் எப்படியிருக்கும்? இதில் விளையாடுகிறவர்கள் அனைவருமே தற்கொலையை நோக்கித் தள்ளப்படுவது இல்லை.

தற்கொலை எண்ணங்கள்

பட மூலாதாரம், AURUMARCUS

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

மரபணுரீதியாகத்தான் ஒருவர் மனநோயாளி ஆவது என்பது தீர்மானிக்கப்படுகிறது. நமது குடும்பங்களில் மனச்சோர்வுக்கு ஆள்பட்டவர்கள் இருந்தால், நமக்கும் மனச்சோர்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபோமைன் என்கிற நியூரோட்ரான்ஸ்மீட்டர் ஒரு வெற்றியில் இருந்து அடுத்த வெற்றியை நோக்கி நம்மை ஈடுபடுத்தும். இது சுற்றி சுற்றி இறுதியில் தோல்வியை நோக்கிச் செல்லும். ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்படுகிறவர்கள், மனநல மையங்களில் சிகிச்சை எடுப்பதே சிறந்தது" என்கிறார்.

சீனாவை பின்பற்றுமா இந்தியா?

``ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு என்னதான் வழி உள்ளது?" என சைபர் கிரைம் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திகேயனிடம் கேட்டோம். `` திரைப்படங்களுக்கு தணிக்கை வாரியம் உள்ளது போல, ஆன்லைன் ரம்மிக்கும் சில சட்டதிட்டங்களைக் கொண்டு வரவேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படி எந்த வரைமுறைகளும் கொண்டு வரப்படவில்லை. இந்த விளையாட்டில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு இதுதான் காரணம். அதேநேரம், சீனாவில் ஆன்லைன் ரம்மி உள்ளது. ஆனால், அவர்கள் அதனை முறைப்படுத்தியுள்ளனர். அங்கு, `விளையாடுங்கள், ஒருநாளைக்கு பத்து டாலருக்கு மேல் கட்ட முடியாது' என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒரு நபர் ஒரு மாதத்துக்கே 120 டாலர்களைத்தான் அங்கு மொத்தமாக செலவிட முடியும்" என்கிறார்.

மேலும், `` பணம் லிமிட்டில் இருப்பதால் நினைத்தால்கூட செலவிட முடியாது. அதேபோல், காலை 6 மணிக்கு மேல்தான் இந்தச் செயலி இயங்கத் தொடங்கும். இரவு 10 மணிக்கு மேல் விளையாட முடியாது. அப்படியொரு கட்டுப்பாடு இந்தியாவுக்கும் வர வேண்டும். இங்கு கட்டுப்பாடுகள் இல்லாததால்தான் பெரும் முதலீடுகளோடு பல நிறுவனங்கள் களமிறங்குகின்றன. இந்தியாவில் 20 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை இலக்காக வைத்து இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனை தடை செய்தாலும் பல்வேறு வடிவங்களில் வருவார்கள். எனவே, முறைப்படுத்துவதே சரியானதாக இருக்கும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :